'என்னால படிக்க முடியல; இப்போ என் மக சாதிச்சுட்டா' - நீட் தேர்வில் வென்ற மகளின் தாய் ஆனந்தக்கண்ணீர்!
சிறு கிராமத்தில் கூலித் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவி லட்சுமிக்கு சமூகவலைதளப் பக்கங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத, கை நழுவிப் போன கனவுகளை தங்கள் பிள்ளைகளின் வாயிலாக நிறைவேற்றிக் கொள்வதுதான் இங்கு பெரும்பாலான பெற்றோர்களின் வாழ்க்கை லட்சியமாகவே உள்ளது.
ஆனால், அந்த ஆசையானது பிள்ளைகளின் மீது திணிக்கப்படும் ஒன்றாக இல்லாமல், அவர்களும் ஆசைப்படும் ஒன்றாக இருந்து விட்டால் வெற்றி நிச்சயம்தான்.
இதற்கு உதாரணமாக சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறு வயதில் நன்றாக படிக்க வேண்டும் என்ற தனது கனவு நினைவாக ஏக்கத்தை, இன்று தன் மகளின் மூலமாக நிறைவேற்றி, அவரை மருத்துவப் படிப்பில் சேர வைத்து, சாதித்துக் காட்டி இருக்கிறார் சுதா என்ற தாய்.
கூலித் தொழிலாளி மகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி என்ற சிறுகிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் முத்தையா ஒரு கூலித் தொழிலாளி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகளான லட்சுமிக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்துள்ளது. ஆனால், குடும்பப் பொருளாதார நிலையும், வாழ்ந்த இடமும் அதற்குத் தகுந்ததாக இல்லை. அவரது ஊரைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பை முடித்ததும், பெண் பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்பாமல், அவர்களைத் திருமணம் செய்து கொடுத்து விடுவதுதான் இப்போதும் அங்கு பெரும்பாலும் வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உறவினர்களின் நெருக்கடி
எனவே, லட்சுமியையும் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற நெருக்கடி உறவினர்கள் மத்தியில் இருந்துள்ளது. ஆனால், லட்சுமி அதற்கு சம்மதிக்கவில்லை. தனது மருத்துவக் கனவை தனது பெற்றோரிடமும், தனது தாய்மாமா சுரேஷிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் யோசித்தாலும், தன் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மேற்கொண்டு படிக்க வைப்பது என அவர்கள் முடிவு செய்தனர்.
குடும்பத்தினர் ஆதரவோடு நீட் தேர்வுக்கு தயாரான லட்சுமிக்கு கடந்தமுறை, 345 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது.369 மதிப்பெண்கள் எடுத்தால்தான் அவரது மருத்துவக் கனவு நினைவாகும் என்ற நிலையில், 15 மதிப்பெண்களால் அந்த வாய்ப்பை இழந்தார் அவர். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் தன்னால் அதிக மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவப்படிப்பில் சேர முடியும் என உறுதியாக தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் லட்சுமி.
நிறைவேறிய கனவு
இம்முறை அவரது தந்தை சற்று யோசிக்க, மகளின் கனவிற்கு துணையாக தாயும் உடன் நின்றார். சுதா நடத்திய பாசப்போராட்டத்தின் விளைவாக, மீண்டும் ஒருமுறை நீட் தேர்வுக்கு தயாராகும் வாய்ப்பு லட்சுமிக்கு கிடைத்தது. இந்தமுறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட லட்சுமி, 509 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலையில், 555 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க உள்ளார்.
“நான் பத்தாவது வரைதான் படித்துள்ளேன். மேற்கொண்டு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், என்னைத் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். என் கணவரும் படிக்காதவர் என்பதால் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். எங்களைப் போன்ற நிலை, எங்கள் குழந்தைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் நானும், என் கணவரும் உறுதியாக இருந்தோம்.“
இது என்னுடைய வெற்றி!
எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்று விடுங்கள் என்பதைத்தான் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். என்னால் படிக்க முடியவில்லையே என்ற வலி இப்போதும் எனக்குள் அப்படியே இருக்கிறது. அந்த வலி என் மகளுக்கும் வந்துவிடக்கூடாது என பயந்தேன்.
எனது மகளின் கனவுக்கு எனது அண்ணனும் மிகப்பெரிய உதவியாக இருந்தார். லட்சுமி நன்றாக படித்து முன்னேறினால், அவளைப் பின் தொடர்ந்து மற்ற குழந்தைகளும் முன்னேறி விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.
”இன்று அவள் பெற்ற வெற்றி, நான் பெற்ற வெற்றி போல் எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என்னால் படிக்க முடியவில்லையே என பல நாட்கள் அழுதுள்ளேன். இப்போது என் மகள் அந்த வலியைத் துடைத்து விட்டாள்,” என ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறார் சுதா.
ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராகப் போகும் மாணவி லட்சுமிதான் என்பதால், அவரது வெற்றியை அந்த ஊரே கொண்டாடி வருகிறது. மாணவிக்கு இனிப்புகள் ஊட்டியும், நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் அக்கிராம மக்கள்.
கடின உழைப்பின் பலன்
“முதன்முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும், 15 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் மருத்துவராக முடியாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் முயற்சி செய்வது என முடிவெடுத்தேன். மீண்டும் முழுமுயற்சியுடன் படித்ததன் விளைவாக இம்முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
“திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எனக்கு சீட் கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருமுறை தோற்றுவிட்டால், அதை எண்ணி மனம் நோகாமல், கடின உழைப்புடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும்,” என்கிறார் மாணவி லட்சுமி.
பெரிய நகரங்களில், பெரிய பெரிய பள்ளிகளில், பயிற்சி மையங்களில் படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற பிம்பங்களை லட்சுமி போன்ற மாணவ/மாணவிகள்தான் உடைத்து வருகின்றனர். சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதை அவர்கள் தங்களது வெற்றிகள் மூலம் உரக்கக்கூறி வருகின்றனர்.
அதோடு, தங்களால் மருத்துவராக முடியுமா? என்ற சந்தேகங்களுடன், ஒருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலே விபரீதமான முடிவுகளை எடுக்க நினைக்கும் மாணவ, மாணவிகளுக்கு லட்சுமி போன்றவர்களின் வெற்றி, நிச்சயம் ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.
லட்சுமியின் தாய் சுதா கூறியதுபோல், ‘லட்சுமியின் இந்த வெற்றி, அவர் குடும்பத்தில் இருந்து வரும் மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பொருளாதார சூழ்நிலையால் கனவைத் தொலைத்து விடுவோமோ என அஞ்சும் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் புதிய நம்பிக்கைப் பாதைதான்.
'அம்மாவுக்காக படிச்சோம்' - ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்!