முதல் முயற்சியிலேயே வெற்றி: 5-வது ரேங்க் உடன் ஐஏஎஸ் ஆன ஸ்ருஷ்டியின் வெற்றிக் கதை!
முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய ரேங்க் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ருஷ்டி தேஷ்முக்கின் வெற்றிக் கதை பலருக்கும் உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது.
“முயற்சி திருவினையாக்கும்” - இதற்கு ஒரு செயலை தீவிரமாக முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது பொருள். குறிப்பாக, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை பெற்றுத் தரும். அப்படி விடாமல் முயற்சித்து, வெறும் நான்கு மாத கால முன்தயாரிப்பு மூலமே யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற ஸ்ருஷ்டி தேஷ்முக்கின் வெற்றிக் கதை பல மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் எனப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற, பல ஆண்டுகள் கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. சிலருக்கு சின்ன வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், அதனை மெய்ப்பிக்கக் கூடிய யுபிஎஸ்சி தேர்வில் வெல்ல குறைந்தது ஓராண்டாவது கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், விதிவிலக்காக சிலர் குறைந்த மாதங்கள் மட்டுமே படித்து, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிடுவது உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வில் பங்கேற்கிறார்கள். ஆனால், சில நூறு பேர் மட்டுமே அதில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாகிறார்கள். UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று 5-ம் ரேங்க் உடன் ஐஏஎஸ் அதிகாரி ஆன ஸ்ருஷ்டி தேஷ்முக் கவுடாவைப் பற்றி பார்ப்போம்...
யார் இந்த ஸ்ருஷ்டி தேஷ்முக்?
ஸ்ருஷ்டி தேஷ்முக், 1995-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கஸ்தூரிபா நகரில் பிறந்தவர். ஸ்ருஷ்டி தேஷ்முக்கின் தந்தை ஜெயந்த் தேஷ்முக் இன்ஜினியராகவும், அவரது தாயார் சுனிதா தேஷ்முக் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஸ்ருஷ்டிக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. எனவே, சின்ன வயதில் இருந்தே ஸ்ருஷ்டி படிப்பிலும் முதன்மையான மாணவியாகவே திகழ்ந்து வந்துள்ளார்.
போபாலில் உள்ள கார்மல் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஸ்ருஷ்டி தனது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் ஐஐடியில் இன்ஜினியரிங் படிக்க விரும்பினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போனது.
இதனையடுத்து, போபாலில் உள்ள லக்ஷ்மி நரேன் தொழில்நுட்பக் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி:
பிடெக் படித்த முடித்த கையோடு தனது கனவை அடைய யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை ஸ்ருஷ்டி தேஷ்முக் ஆரம்பித்துள்ளார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்ற ஸ்ருஷ்டி, தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 5-வது ரேங்க் உடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல அந்த ஆண்டு தேர்வில் பங்கேற்ற 182 பெண்களில் ஸ்ருஷ்டி தேஷ்முக் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
UPSC தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்ற ஸ்ருஷ்டி தேஷ்முக், அந்த ஆண்டு போபாலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை சிறப்பாக கையாண்டுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களை முழுமையாக வாக்களிக்க வைக்கவும், தேர்தலின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். 23 வயதிலேயே ஸ்ருஷ்டி தேஷ்முக் ஆற்றிய பணிகளை பார்த்து வியந்து போன தேர்தல் ஆணையம் அவரது முயற்சிகளை பாராட்டியுள்ளது.
இளம் வயதிலேயே கனவை எட்டிப்பிடித்த ஸ்ருஷ்டி தேஷ்முக் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக வலம் வருகிறார். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஸ்ருஷ்டியை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஸ்ருஷ்டி தேஷ்முக் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் 20 ஆகஸ்ட் 2021 அன்று அர்ஜுன் கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஸ்ருஷ்டி தேஷ்முக்கின் கணவரான டாக்டர் நாகார்ஜுன் பி கவுடாவும் ஐஏஎஸ் அதிகாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின் காதல் கதை:
போபாலைச் சேர்ந்த ஸ்ருஷ்டி தேஷ்முக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த நாகார்ஜுனாவும் முசோரியில் உள்ள சிவில் சர்வீஸ் பயிற்சி அகாடமியான LBSNAA என அழைக்கப்படும் லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி அகாடமியில் சந்தித்துள்ளனர். நட்பு, காதலாக மாறியதை அடுத்து இருவரும் சுமார் இரண்டரை வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இடையில் ஸ்ருஷ்டிக்கு மத்தியப் பிரதேசத்திலும், நாகார்ஜுனாவிற்கு கர்நாடகாவிலும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2 ஆகஸ்ட் 2021 அன்று நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், 24 ஏப்ரல் 2022 இருவரது திருமணமும் கோலாகலமாக நடந்துள்ளது. ஸ்ருஷ்டியை திருமணம் செய்து கொண்ட பிறகு, நாகார்ஜுனா மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த ஐஏஎஸ் தம்பதி சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர்.