10,000 முதல் 1 லட்சம் வரையான திடீர் செலவுகளுக்கு உதவும் ‘சாஷே கடன்’
நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிமுகம் ஆகி வரும் புதுமையான சேவைகள் வரிசையில் அடுத்த கட்டமாக, சாஷே கடன்கள் அறிமுகம் ஆகின்றன.
புதுமையாக்கம் எல்லா துறைகளில் பரவலாகி இருக்கும் நிலையில் ஒவ்வொரு துறையும், வாடிக்கையாளர் பயணத்தை மேம்படுத்தும் வகையில், தனது சேவைகளை தனிப்பட்ட தன்மை மிக்கதாக்கி வருகின்றன. நிறுவனங்கள், தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கள் சேவைகளை மேம்படுத்த எல்லா வகையிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த வரிசையில் நிதிநுட்ப நிறுவனங்கள் கடன் வழங்குதலில் தொடர்ந்து புதுமையை புகுத்தி வருகின்றன. இவை தனிநபர் கடன்களை உடனடியாக வழங்குவதோடு மட்டும் அல்லாமல், வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப கடன் சேவையை தனிப்பட்டதாக வழங்கி வருகின்றன.
வழக்கமான தனிநபர் கடன்கள் பிரிவில் அறிமுகமாகி வரும் புதுமைகளில் ஒன்றாக ‘சாஷே கடன்கள்’ அமைகின்றன.
வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான கடன்களே சாஷே கடன்கள் எனப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப கடன்களை வழங்கவும் இவை நிறுவனங்களுக்கு உதவுகின்றன.
சாஷே கடன்கள், சீரான வருமானம் கொண்டிருக்கும், ஆனால் லேப்டாப் போன்ற திடீர் செலவுகளை செய்ய முடியாமல் தவிக்கும் மாதச் சம்பளதாரர்களால் அதிகம் நாடப்படுகின்றன. அதே போல, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தங்கள் செயல் மூலதன தேவைகளுக்கு இந்த கடனை நாடுகின்றன.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் தனிநபர் கடனில் கூடுதல் அம்சங்களைக் கொண்டிருப்பதால் சாஷே கடன்கள் பிரபலமாகி வருகின்றன.
சாஷே கடன்கள் வழங்கும் அம்சங்களை பார்க்கலாம்:
எளிய வசதி
சாஷே கடன்களை விரைவாக, எளிதாக ஆன்லைனில் பெறலாம். சாஷே கடன்களை வழங்குவது, நிதி நிறுவனங்களுக்கு கடன்தாரர்களின் குறுகிய கால கடன் தேவையை, நிறைவேற்ற உதவுகிறது. இவற்றின் வட்டி விகிதம் மற்றும் திரும்பி செலுத்தும் தன்மையும் ஏற்றதாக இருக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் அதிக சுமைமிக்க மாதத்தவணை இல்லாமல் தங்கள் கடன் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
தேவையான பணம்
சாஷே கடன் மூலம், வாடிக்கையாளர் தனது தேவைக்கேற்ற தொகையை, தேவையான காலத்திற்கு பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தாத நிலையான காலம் அல்லது தொகையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
குறிபிட்ட நோக்கம்
இந்த கடன்கள், வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப வழங்கப்படுகின்றன. திருமணக் கடன் அல்லது வாடகைக் கடன் இதற்கான உதாரணம்.
குறைந்த காலம்
சாஷே கடன்கள், வாடிக்கையாளர்களின் தொழில்முறையை தேவையை நிறைவேற்றுகின்றன. இவை 10,000 முதல் 1 லட்சம் வரை கிடைக்கின்றன. 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை இவற்றை திரும்ப செலுத்தலாம்.
சாஷே கடன் வகைகள்
சாஷே கடன் பிரிவில் பல வகையான குறுகிய கால கடன்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் அம்சங்களும் மாறுபடுகின்றன. இவற்றின் பட்டியல் வருமாறு:
இணைய கடன்
பல நிதிநுட்ப நிறுவனங்கள் இணையம் மூலம் கடன் வழங்குகின்றன. வீட்டில் இருந்தபடியே செயலி அல்லது இணையதளம் மூலம் கடன் பெறலாம். இவற்றுக்கான விண்ணப்ப செயல்முறையும் அதிகம் கிடையாது. 24 மணி நேரத்திற்குள் இவை கிடைக்கும்.
வாட்ஸ் -அப் கடன்
வாட்ஸ் அப் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகிறது. விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க வங்கிகளும் இப்போது வாட்ஸ் அப்பை நோக்கி வந்துள்ளன. எளிதான அணுகல் வசதி கொண்ட தனிநபர் கடனாக வாட்ஸ் அப் மூலம் கடன் வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப்’பிலேயே விண்ணப்பித்து கடன் பெறலாம்.
குறுகிய கால கடன்
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் குறுகிய கால கடன் பிரபலமாக உள்ளது. தேவைக்கேற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த கடன் வசதியில், பூஜ்ஜியம் பயன்பாடு எனில் பூஜ்ஜியம் வட்டி விகித அம்சம் உள்ளது. வர்த்தகத் தேவை உள்ளிட்டவற்றுக்கு இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திரும்பி செலுத்தும் காலம் அமைகிறது.
சம்பளக் கடன்
இந்த வகை கடன் சம்பள முன்பண கடன் போன்றது. இந்த கடனில், சம்பளத்தின் 2.5 மடங்கு வரை, 3 முதல் 12 மாத காலத்திற்கு கடன் பெறலாம். எதிர்பாராத செலவுகளுக்கு சம்பளத்திற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அதிகக் கடன் காலம், அதிக வட்டி போன்றவற்றில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசம் அளிப்பவையாக சாஷே கடன்கள் அமைகின்றன.
செய்தி- ஏ.என்.ஐ- பிஸ்னஸ்வயர் இந்தியா | தமிழில்-சைபர்சிம்மன்