வினேஷ் போகத் போர்க் குணம் பின்னால் ‘தங்கல்’ நிஜ நாயகன் மஹாவீர் சிங் போகத்!
மல்யுத்த வாழ்வில் கடினமான பாதைகளை துணிச்சலாக கடந்து வந்த 29 வயது இந்திய வீராங்கனைக்கு சிறுவயது முதல் மனவலிமையை ஊட்டி வளர்த்தவர்தான் வினேஷின் பெரியப்பாவான மஹாவீர் சிங் போகத்.
“எனக்கு இனியும் தெம்பு இல்லை. மல்யுத்தத்துக்கு குட்பை...” என்று வினேஷ் போகத் குறிப்பிட்டதற்குப் பின்னால் உள்ள வலிகளைத் தாங்கக் கூடிய மனவலிமை என்பது மகத்தானது.
மல்யுத்த வாழ்வில் கடினமான பாதைகளை துணிச்சலாக கடந்து வந்த 29 வயது இந்திய வீராங்கனைக்கு சிறுவயது முதல் மனவலிமையை ஊட்டி வளர்த்தவர்தான் ‘தங்கல்’ நிஜ நாயகன் மஹாவீர் சிங் போகத்.
மஹாவீர் சிங் போகத் குறித்து பேசுவதற்கு முன்பு முதலில் வினேஷ் போகத் வலிமிகு மல்யுத்தப் போராட்டப் பயணத்தை சுருக்கமாக ரீவைண்ட் செய்வோம்.
வினேஷ் போகத் கடந்து வந்த பாதை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்று சாதித்தவர் வினேஷ் போகத். 2016 ரியோ ஒலிம்பிக்கில் முதல் களம் கண்டவருக்கு, காலிறுதிச் சுற்றின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், முழு உத்வேகத்துடன் களமிறங்கிய அவருக்கு அப்போது ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத்தால் காலிறுதி வரை மட்டுமே முன்னேற முடிந்தது.
எப்படியாவது பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத் தொடங்கிய வினேஷ் போகத்துக்கு, தெருவில் இறங்கி போராட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவில் போராடினார். அந்தப் போராட்டத்தில் துளியும் சுயநலம் இல்லை. இந்திய மல்யுத்த வீராங்கனைகள் எதிர்காலத்துக்காகவே அவர் போராடினார்.
இருமுனைப் போராட்டம்
ஒருபக்கம், ஓராண்டு காலமாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர், மறுபக்கம் மல்யுத்தக் களத்துக்காகவும் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டார்.
வழக்கமாக 53 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்குக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பிரிவில் விளையாட மற்றொரு இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் தகுதி பெற்றதால், 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறி, தனது எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். விடாமுயற்சியால் எடையைக் குறைத்து 50 கிலோ எடைப் பிரிவு போட்டிக்கு முழுவீச்சில் தயாரானார்.
பாரிஸ் அரையிறுதியில் அட்டகாசமாக திறமையை வெளிப்படுத்தி இறுதிக்கு முன்னேறியபோதுதான் அடுத்த இடி தாக்கியது. ஆம், 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வலிமிகு ஒலிம்பிக் பதக்கக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.
அதன்பின், வினேஷ் போகத்துக்கு ஆறுதலைத் தாண்டி, அவரது போர்க் குணத்தை நாடே போற்றியது. அந்தச் சூழலில், உடனடியாக ஓய்வு அறிவித்து மற்றொரு அதிர்ச்சியை தந்தார் வினேஷ் போகத்.
அது குறித்து எத்தனையோ பேர் எத்தனை எத்தனை கருத்துகளை உதிர்த்தபோதிலும் ஒருவருடைய ரியாக்ஷன் மட்டும் அதிமுக்கியத்துவம் பெற்றது. அவர்தான் மஹாவிர் சிங் போகத்.
“யாராக இருந்தாலும், பதக்கத்துக்கு இவ்வளவு நெருக்கமாக வந்த பிறகு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கோபத்தால் இதுபோன்ற முடிவைத்தான் எடுப்பர். அந்த ஏமாற்றத்தின் தாக்கத்தால்தான் வினேஷ் போகத்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால், அவர் ஓயக் கூடாது. வினேஷை உட்காரவைத்து இந்த முடிவை மாற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கச் சொல்லி வலியுறுத்துவேன்,” என்றார் மஹாவீர் சிங் போகத்.
இந்த ‘தங்கல்’ நிஜ நாயகன்தான் சிறுவயது வினேஷ் போகத்தின் குரு!
யார் இந்த மஹாவீர் போகத்?
ஹரியானாவைச் சேர்ந்த மஹாவீர் சிங் போகத்துக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் கீதா. போகத், பபிதா குமாரி, ரிது போகத், சங்கீதா போகத் ஆகிய நான்கு மகள்களுமே மல்யுத்த வீராங்கனைகள். மஹாவீர் சிங்கின் தம்பி ராஜ்பால் மரணம் அடைந்த பின்பு, அவரது இரு மகள்களையுமே தன் மகளாக வளர்ந்து வந்தார். அதில் ஒருவர்தான் வினேஷ் போகத்.
இவர்கள் அனைவருக்குமே சிறுவயதில் இருந்து மல்யுத்தப் பயிற்சி வழங்கியவரான மஹாவீர் போகத்தும் ஒரு மல்யுத்த வீரர்தான். பின்னாளில் அமெச்சூர் மல்யுத்தப் பயிற்சியாளரான இவர்தான் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற தன் மகள்களுக்கு முதல் பயிற்சியாளர்.
தனது அயராத முய்ற்சியால் மகள் கீதா போகத்தை 2012 லண்டன் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற வைத்தார். ஆம், ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையே கீதா போகத் தான் என்பது கவனிக்கத்தக்கது. ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வரையில் போகத் சகோதரிகள் பதக்கம் வென்றதற்குப் பின்னால் இருந்தவரும் மஹாவீர் சிங்தான்.
ஹரியானா கிராமத்தில் 2000-களில் ஆண்கள் மட்டுமே கோலோச்சியிருந்த மல்யுத்த போட்டிகளில், ஊர் மக்களின் ஏச்சுப் பேச்சுகளைப் புறந்தள்ளி தன் மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவெடுக்க இவர் எடுத்த முயற்சிகள் மலைக்கத்தக்கவை.
உள்ளூர் போட்டிகளில் கில்லியாக இருந்த மஹாவீர் ஒருகட்டத்துக்குப் பிறகு மகள்களை சாதனையாளர்களாக உருவாக்குவதிலேயே முழு கவனம் செலுத்தினார். மகள்களுக்கு பயிற்சிகள் வழங்கி சர்வதேச பதக்கங்கள் வெல்லச் செய்த பயிற்சியாளரான இவருக்கு, 2016-ல் 'துரோணாச்சாரியா விருத' வழங்கி கவுரவித்தது அரசு.
இந்தப் பின்புலம் எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். அமீர்கானின் ‘தங்கல்’ படத்தின் நிஜ நாயகனே இவர்தான். மஹாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் ‘தங்கல்’. அதில் வரும் அமீர்கான் கதாபாத்திரம்தான் மஹாவீர் சிங் போகத்.
உண்மையில், ‘தங்கல்’ படத்தில் வரும் அமீர்கான் கதாபாத்திரத்தை விட கெடுபிடியான குருவாக இருந்திருக்கிறார் மஹாவீர் சிங். இதை வினேஷ் போகத்தே ஒருமுறைச் சொல்லியிருக்கிறார், “எங்க பெரியப்பா, நீங்க படத்துல பார்த்த அமீர்கானைவிட பல மடங்கு ஸ்ட்ரிக்ட் ஆனவர்” என்று.
இப்போது இரண்டு விஷயம் நமக்குப் பிடிபட்டிருக்கும். ஒன்று: வினேஷ் போகத்துக்கு எதையும் தாங்கும் மனவலிமை எங்கிருந்து கிட்டியது என்று. மற்றொன்று: வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் நேர்ந்த சம்பவங்களுக்குப் பிறகு, ‘தங்கல் 2’ படம் எடுக்குமாறு ரசிகர்களிடம் இருந்து அமீர்கானுக்கு கோரிக்கை வலுப்பதன் காரணம்.
'என்னை மன்னித்து விடுங்கள்...' - மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத்!
Edited by Induja Raghunathan