தேனியை கலக்கும் ‘வில்லேஜ் விஞ்ஞானி’ - ஸ்கூட்டியை ‘குட்டி ஜீப்’ ஆக மாற்றி அசத்திய தொழிலாளி!
தேனியைச் சேர்ந்த அரிவாள் செய்யும் தொழிலாளி ஒருவர் ஸ்கூட்டியை குட்டி ஜீப்பாக மாற்றி அசத்தி வருகிறார்.
தேனியைச் சேர்ந்த அரிவாள் செய்யும் தொழிலாளி ஒருவர் ஸ்கூட்டியை குட்டி ஜீப்பாக மாற்றி அசத்தி வருகிறார்.
வயதானவர்களுக்கு என்று ஏராளமான தனிப்பட்ட ஆசைகள் இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு வயதிற்கு மேல் பிறரை சார்ந்திருப்பதால் ஆசைப்பட்ட அனைத்தையுமே செய்ய முடியாது. இதில் சிலர் மட்டுமே தங்களது வயதையும் கடந்து புதுப்புது விஷயங்களை நிகழ்த்தி சோசியல் மீடியாக்களில் கவனம் ஈர்க்கின்றனர்.
அந்த வகையில், தேனியைச் சேர்ந்த 'வில்லேஜ் விஞ்ஞானி' ஒருவர் செய்த காரியம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 65 வயதான இவர் பட்டறை வைத்து தொழில் நடத்தி வருகிறார். தனது பட்டறையில் செய்யப்படும் அரிவாள், மண்வெட்டி, களைக்கொத்தி போன்ற விவசாய உபகரணங்களை ஊர், ஊராக சென்று விற்பனை செய்து வருகிறார். இதற்கு தனக்கு ஒரு வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த ஈஸ்வரன், தனக்கான சொந்த குட்டி ஜீப்பை தானே உருவாக்கி அசத்தியுள்ளார்.
இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிய ஈஸ்வரன், சுமார் 45 ஆயிரம் செலவில் தனது பட்டறையில் உள்ள இரும்பு பொருட்களைக் கொண்டே ஜீப்பை உருவாக்கியுள்ளார். இதற்காக ஒரு மாதம் உழைத்துள்ளார். முதியவர் ஈஸ்வரன் உருவாக்கியுள்ள ஜீப் ஆனது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில், மிகப்பெரிய இன்ஜினியர்கள், மெக்கானிக்களுக்கே சவால் விடும் வகையில், ஜீப்பில் இருப்பதைப் போலவே முகப்பு விளக்கு, ஸ்டியரிங், காலால் அழுத்தக்கூடிய ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். ஸ்கூட்டியில் இருக்கும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் அகற்றி விட்டு, குட்டி ஜீப்பிற்கு ஏற்றார் போல் 4 சக்கரங்களை பொருத்தியுள்ளார். இதுகுறித்து ஈஸ்வரன் கூறுகையில்,
“நான் மண்வெட்டி, களைக்கொத்தி போன்ற இரும்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதற்காக எனக்கு ஒரு வாகனம் தேவைப்பட்டது. 45 ஆயிரம் செலவழித்து என்னுடைய சொந்த முயற்சியில் இந்த ஜீப்பை உருவாக்கினேன். இதற்கு முன்னாலும் இரண்டு வண்டிகளை உருவாக்கியுள்ளேன். அதில் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை. ஒன்றை உறவினருக்கு கொடுத்துவிட்டேன்,” என்கிறார்.
இளம் வயதில் 3 வேளை உணவிற்கே கஷ்டப்பட்ட ஈஸ்வரன், அரிவாள் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்து தற்போது சொந்தமாக அரிவாள், மண்வெட்டி போன்ற கருவிகளை செய்து விற்பனை செய்து வருகிறார். இவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்க தனக்கு ஒரு வாகனம் தேவை என நினைத்தவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ போன்ற வாகனத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை.
தற்போது பல கட்ட முயற்சிக்குப் பிறகு, லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களே உருவாக்க முடியாத அளவிற்கு அற்புதமான குட்டி ஜீப்பை உருவாக்கியுள்ளார். இந்த ஜீப்பில் மண்வெட்டி, களைக்கொத்தி, அரிவாள் போன்ற கருவிகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
புதுமைக்கும், முயற்சிக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ள வில்லேஜ் விஞ்ஞானி ஈஸ்வரனுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டறியும் ஸ்மார்ட் கருவியை கண்டுபிடித்துள்ள இளைஞர்!