முகமது அலியின் தீவிர ரசிகை: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய இளம்புயல் லவ்லினா!
உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் போராடி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த 69 கிலோ எடைப்பிரிவான மகளிர் வெல்ட்டர் வெயிட் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸை எதிர்கொண்டார் இந்தியாவின் லவ்லினா. போட்டியில் லவ்லினா தோல்வி அடைந்தார், என்றாலும் இந்தப் போட்டியை லவ்லினா எதிர்கொண்ட விதம் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
ஏனென்றால், அவர் எதிர்த்து விளையாடிய துருக்கியின் சுர்மெனெலி புசெனாஸ் உலக சாம்பியன் மற்றும் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆவார். இன்றைய போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஒவ்வொரு சுற்றிலும் சுர்மெனெலிக்கு இணையாக புள்ளிகளை பெற்றுவந்தார் லவ்லினா.

இறுதியில், ஐந்து நடுவர்களின் தீர்ப்புப்படி துருக்கி வீராங்கனை 30 புள்ளிகளும், லவ்லினா 25 புள்ளிகளும் பெற்றனர். இதனால், அவரால் வெண்கலப் பதக்கத்தை வெல்ல முடிந்தது.
யார் இந்த லவ்லினா?
23 வயதாகும் இவரின் முழுப்பெயர் லவ்லினா போர்கோஹெய்ன். வடகிழக்கு மாநிலமான அசாமில் பின்தங்கிய குக்கிராமமான கோலகட் என்னும் ஊரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், இவரின் தந்தை சிறு, குறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். பள்ளி மாணவியாக இருக்கும்போதே விளையாட்டுகளில் தீவிரம் ஆர்வம் லவ்லினாவுக்கு.
இவரின் மூத்த சகோதரிகள் சிறுவயதில் தற்காப்புக் கலைகளை கற்றுத்தர, அவர்களை பின்பற்றியே லவ்லினாவும் தற்காப்புக் கலைகளை கற்கத் தொடங்கினார். அப்போது தான் ஒரு நாள் செய்தித்தாளில் முகமது அலி பற்றி படித்தவர், அதை பற்றி தன் தாயிடம் கேட்டுள்ளார். தாயும் முகமது அலியின் கதைகளை கூற ஆரம்பித்துள்ளார்.
குத்துசண்டை வீரர்கள் அனைவருக்குமே முகமது அலி மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார். அதே முகமது அலி தான் லவ்லினாவுக்கும் இன்ஸ்பிரேஷன். தாய் கூறிய கதைகளைக் கேட்ட லவ்லினாவின் சிறுவயது வாழ்க்கை முழுவதும் முகமது அலி பற்றிய படிப்பினையும், அனுபவங்களையும் கேட்டே கழித்துள்ளார்.
எல்லோருக்கும் முகமது அலியின் கதைகளைக் கேட்கும் போது நிச்சயம் ஒரு உத்வேகம் பிறக்கும். சிறிது நேரத்தில் பலருக்கும் அது கதையாக மாறிவிடும். ஆனால் லவ்லினாவுக்கு அப்படியில்லை. அவரின் மனதில் முகமது அலி பெரிய விதையாக மாறிப்போனார். அதனால் அவரையே பின்பற்றத் தொடங்கினார்.

குத்துச்சண்டை பயிற்சி எடுக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் கிராமத்தில் பயிற்சி எடுத்தவர், அதில் ஜொலித்துள்ளார். 2012ம் ஆண்டு இவரின் வாழ்க்கையில் திருப்புமுனை. இந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு சென்ற ஒரே வீராங்கனையான மேரிகோம், வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் புகழை உலகுக்கு பறைசாற்றியிருந்தார்.
அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய அரசு குத்துசண்டை விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய வீரர்களை உருவாக்கத் திட்டம் தீட்டியது. இதற்காக இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க நினைத்தது. இந்திய விளையாட்டு ஆணையம் மேற்கொண்ட இந்தத் திட்டத்தற்காக நியமிக்கப்பட்டவர் பயிற்சியாளர் போரா.
இவர் இளம் வீரர்களைத் தேடி அலைந்தபோது கண்ணில் பட்டவர் தான் லவ்லினா. லவ்லினா ஆட்டத்தை நேரில் பார்த்த போரா, தான் தேடிய தகுதியான வீராங்கனை என்பதை உணர்ந்தது அவருக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினார். குடும்பத்தினரும், அரசும் ஆதரவளிக்க இந்திய விளையாட்டு ஆணையத்தில் தங்கியிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார் லவ்லினா. இதன்பின் குத்துசண்டை போட்டிகளில் ஏறுமுகம் காணத் தொடங்கினார் லவ்லினா.

2018, 2019 தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2017 மற்றும் சமீபத்தில் 2021-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் என வென்று அசத்தத் தொடங்கினார். இதன்பயணமாக ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பு கிடைக்க, தற்போது தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கிலே தனது வரவை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் லவ்லினா.
இதுவரை அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதே இல்லை. அந்த குறையை போக்கி, ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைநிமிர செய்திருக்கிறார் இளம் லவ்லினா.