'அற்புதம்மாள்' - ஒரு தாயின் 31 ஆண்டு கால பாசப் போராட்டத்திற்கு கிடைத்த ‘அற்புத’ வெற்றி!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதனை பேரறிவாளனின் வெற்றியாக மட்டுமல்ல.. 32 ஆண்டு காலம் மகனின் விடுதலைக்காக போராடிய பாசத் தாய் அற்புதம்மாளுக்கு கிடைத்த வெற்றியாகவே சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அற்புதம்மாள்! வரலாறு தெரிந்த 90-ஸ் கிட்ஸுக்கு மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் 2கே கிட்ஸுக்கும் நன்கு பரிட்சையமானவர் இவர்.
களைத்துபோன முகம், கால்களில் ரப்பர் செருப்பு, வயதைச் சொல்லும் வெள்ளை முடி, தோளில் ஒரு பை என தன் மகனின் வெற்றிக்காக, தன் வயதையும் மறந்துவிட்டு, 31 ஆண்டுகள் அவர் மேற்கொண்ட போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தன் மகன் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு தன்னால் முடிந்த எல்லாக் கதவுகளையும் அவர் உதவி கேட்டுத் தட்டினார்.
“உலகத்துல தாயைவிட பெரிய சக்தி எதுவுமே இல்லை...” என தனது தொடர் போராட்டங்கள் மூலம் நிரூபித்திருக்கிறார் அற்புதம்மாள்.
அந்தத் தாயின் பாசப்போராட்டம் இன்று வென்றிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவர் பிறக்கும் போதே, அவரது பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும், ‘எதிர்காலத்தில் அவர் தனது மகனுக்காக போராடப் போகிற ‘அற்புத’மான அம்மாளாக இருக்கப் போகிறார் என்று. அதனால்தான் அப்போதே அற்புதம்மாள் என்றப் பெயரை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
ஒரு பெண் தனது குழந்தையைக் கருவறையில் இருந்து இந்த உலகத்திற்குக் கொண்டுவர எப்படியான வலியையும் பொறுத்துக் கொண்டுதான் தாய் என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார். ஆனால், அற்புதம்மாளைப் பொறுத்தவரை தனது மகன் பேரறிவாளனை பெற்றதோடு, அந்த வலி, போராட்டம் நின்றுவிடவில்லை.
1971ம் ஆண்டு, ஜூலை 30-ல் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனைப் பெற்றெடுத்தார் அற்புதம்மாள். எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளோமா படிப்பு முடித்து, உயர் கல்வியைத் தொடர சென்னையில் தங்கி இருந்தபோது தான், 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டார் பேரறிவாளன். அப்போது அவரது வயது 19. தன் மகனை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து விடுதலை செய்ய, அப்போது தனது போராட்டத்தை ஜோலார்பேட்டையில் ஆரம்பித்தார் அற்புதம்மாள்.
அப்போது ஆரம்பித்த ஓட்டம்... எப்படியும் தன்னுடைய மகனை நிரபராதி என நிரூபித்து, விடுதலை செய்ய வைக்க வேண்டும் என கடந்த 31 ஆண்டுகளாக ஓடிக் கொண்டே இருந்தார்.
சினிமாக்களில் வெள்ளை உடையில் வரும் தேவதைகளைப் பார்த்திருப்போம். ஆனால், சாதாரண கசங்கிய சேலையில் இருந்தாலும், அம்மாக்கள் எப்போதுமே பிள்ளைகளுக்கு அதிசயங்கள் செய்கிற தேவதைகள்தான் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் நிரூபித்திருக்கிறார் அற்புதம்மாள்.

1991ல் கைது செய்யப்பட்டபோது, விசாரணைக்காக அழைத்துச் செல்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்துள்ளனர் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளும், தந்தை கவிஞர் குயில்தாசனும். ஆனால், பேரறிவாளன் மீண்டும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என அவர்கள் அப்போது நினைக்கவில்லை. தாமதமாகவே தன் மகனை சூழ்ந்துள்ள பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்து கொண்டார் அவர்.
மல்லிகையில் தொடங்கி டெல்லியில் முடிந்த போராட்டம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் தலைமை இடம் மல்லிகை. அங்கு வைத்து தான் பேரறிவாளனை அதிகாரிகள் விசாரித்தார்கள். மல்லிகையில் இருந்த மகனைப் பார்க்க, ஒவ்வொரு நாளும் அங்கு காவலில் இருந்த போலீசிடம், தன் மகனைப் பார்க்க வேண்டும் என கெஞ்சுவதில் ஆரம்பித்தது அவரது போராட்டம். ஆனால், அவரை யாரும் உள்ளே விட மறுத்துவிட, ஒவ்வொரு நாளும் கண்ணீரோடுதான் அங்கிருந்து செல்வார் அற்புதம்மாள்.
தன் கண்ணீரின் ஒவ்வொரு துளியையும் தன் போராட்டத்திற்கான உரமாக மாற்றினார். இதன் காரணமாக மனஉறுதி, மகனுக்காக பாசப் போராட்டம், எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கிற துணிவு என நாளுக்கு நாள் அற்புதம்மாளின் போராட்டக்குணம் அதிகமானது. பேரறிவாளன் கைதுக்குப் பிறகு, தன் வாழ்க்கையே மாறிவிட்டதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
“அதற்கு முன்பு வரை மூன்று குழந்தைகளுக்குத் தாயாக, சாதாரண பெண்ணாக, செளகர்யமாக, பாதுகாப்பாக வாழ்ந்திருந்த நான், சராசரி வாழ்க்கைக்கு தூக்கி எறியப்பட்டேன். நீண்ட தூர தனிப் பயணம், மகன் குறித்த கேலிகளும், கிண்டல்களும் துரத்தும் போது, அதைத்தாண்டிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். இதையெல்லாம் கடக்க என் மகன் பேரறிவாளனின் முகம் தான் என் நினைவுக்கு வரும்,” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் பேரறிவாளன். அவரைப் பார்க்க, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குவந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று அங்கு காத்திருந்து அற்புதம்மாள் மகனைப் பார்க்க வேண்டும். பல நாட்கள் அவரது காத்திருப்பு ஏமாற்றத்தையே தந்தது.

அதன்பிறகு தான், தனது நீதிப் போராட்டத்தை ஆரம்பித்தார் அற்புதம்மாள். மகனுக்காக அவர் ஏறாத நீதிமன்றமே இல்லை, போகாத ஊரே இல்லை. அற்புதம்மாளின் தொடர் பாசப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி, முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனின் மனமாற்றம் தான்.
ஒரு தாயின் தொடர் போராட்டம், குற்ற உணர்ச்சியில் இருந்த அதிகாரியின் மனசாட்சியை தட்டி எழுப்பி, உண்மையை வெளிக்கொண்டுவரச் செய்தது. பேரறிவாளனிடம் நடத்திய விசாரணையில், 'எனக்கு எதுவும் தெரியாது...' என பேரறிவாளன் கூறியதை தனது வாக்குமூலத்தில் தவிர்த்ததை சிபிஐ அதிகாரி தியாகராஜனே ஒத்துக் கொண்டார்.
“கடமையில் இருந்து வழுக்கி இருக்கிறேன், இது என் தவறுதான் என தியாகராஜன் வாக்குமூலம் தந்தார். இது பேரறிவாளன் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.”
சட்டரீதியாக ஒருபுறம் போராடிக் கொண்டே, ஆட்சியில் இருந்தவர்களையும் ஒரு தாயாக, நேரில் சென்று தன் மகனின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன் வைத்தார். அற்புதம்மாளின் போராட்டக் கயிறு இறுக, இறுக, பேரறிவாளனின் கழுத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த தூக்குக் கயிறு இளகத் தொடங்கியது. ஆம்... பேரறிவாளனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
அற்புதம்மாளின் தொடர் போராட்டத்தால், பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் இதை பரிந்துரைத்தது. அதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்லவும் மறக்கவில்லை அற்புதம்மாள்.

தந்தை கவிஞர் குயில்தாசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 2017ம் ஆண்டு முதன்முறையாக பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன். உடல்நலமில்லாத கணவர் ஒருபுறம், மகனின் விடுதலைக்கான முயற்சிகள் ஒருபுறம் என ஓடிக் கொண்டே இருந்த அற்புதம்மாளிடம் வயதும், வயோதிகமும் தோற்றுப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
தனது வயதைக் காரணம் காட்டி, எந்த இடத்திலும் அவர் சோர்ந்து நின்றுவிடவில்லை. மகனின் விடுதலைக்காக கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். கிடைக்காத வாய்ப்புகளை அவரே உருவாக்கிக் கொள்ளவும் முயற்சி செய்தார். ஒரு தாயின் நெஞ்சுறுதிதான் இன்று நீதிமன்றத் தீர்ப்பாக வெற்றி கண்டிருக்கிறது.
ஒவ்வொருமுறையும் ஊடகத்தின் முன்பு, தன் மகனுக்காக கண்ணீரோடு, கைகூப்பி நின்ற அற்புதம்மாளின் முகத்தை சுலபமாக கடந்துவிட முடியவில்லை மக்களால். அற்புதம்மாள் என்ற தனியொரு தாய்க்காகவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என பிரார்த்தித்தவர்கள் ஏராளம்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியபோது, சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது, நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய மகன் பேரறிவாளனின் உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, கடந்தாண்டு மே மாதம் 18ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்தார் அற்புதம்மாள். அவரது கோரிக்கையை ஏற்று, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
“என் மகனின் இளமையை, எங்கள் குடும்பம் இழந்த நிம்மதியை... இதையெல்லாம் யாராலும் திருப்பித் தர முடியாது. இந்த வயதான காலத்திலாவது மீண்டும் எங்கள் மகனுடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்...” என்ற அற்புதம்மாளின் குரலில் கோரிக்கையைவிட காலங்களை மீறிய வேதனையின் கனம் அதிகமாகவே இருந்தது.

சிறையில் இருந்தபடியே தன் விடுதலைக்காக பேரறிவாளன் ஒருபுறம் முயற்சித்துக் கொண்டிருக்க, அவருக்கு ஆதரவாக வெளியில் போராடிக் கொண்டிருந்தார் அற்புதம்மாள். பேரறிவாளன் வழக்கில் சமயங்களில் சறுக்கல்கள் ஏற்பட்ட போதும், ஏமாற்றங்கள் உண்டானபோதும், மனம் தளர்ந்துவிடவில்லை அந்தத் தாய். தொடர்ந்து, மீண்டும் தொடர்ந்த, எனப் போராடிக் கொண்டே இருந்தார் அற்புதம்மாள்.
தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அவரது தாய்ப்பாசம் வென்றிருக்கிறது. ஒரு தாயின் அறப்போர் வென்றது என வரலாறு இனி அற்புதம்மாளைக் கொண்டாடும்.
மகன் விடுதலையான மகிழ்ச்சியில் இருக்கும் அற்புதம்மாள்,
“எனது நீண்ட சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை,” என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலையில் அற்புதம்மாள் மட்டுமின்றி, பல அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தனர். இது அவர்களுக்குமான வெற்றிதான் என்றபோதும், ‘கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடிய ஒரு தாயின் தவிப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே சமூகவலைதளங்கள் இதனைக் கொண்டாடி வருகின்றன.
இது தொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்,” எனத் தெரிவித்துள்ளார்.
அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை வெற்றிமாறன் திரைப்படமாக இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.