'என் மனஉறுதியை மீட்டெடுத்த நாட்கள்' - ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணியாற்றிய மென்பொருள் பொறியாளரின் ஊக்கப் பதிவு!
எதிர்பாராத விதமாக வேலை இழந்த நிலையில், ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணியாற்றிய மாதங்கள் தனக்கு மன உறுதியையும், பொறுமையையும் கற்றுக்கொடுத்துள்ளதாக மென்பொருள் பொறியாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக வேலை இழந்த நிலையில், ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணியாற்றிய மாதங்கள் தனக்கு மன உறுதியையும், பொறுமையையும் கற்றுக்கொடுத்துள்ளதாக மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக லிங்க்டு இன் தளத்தில் இவர் எழுதிய பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரியாசுதீன் எனும் அந்த பொறியாளர் சில மாதங்களுக்கு முன் தனது மென்பொருள் பொறியாளர் பணியை இழந்துள்ளார். தொடர்ந்து நிராகரிப்புகளை எதிர்கொண்டவர், பில் தொகையை செலுத்த பணம் இல்லாத நிலையில், ஸ்விக்கி டெலிவரி ஊழியரான பணிக்குச் சேர்ந்தார்.
டெலிவரி ஊழியராக பணியாற்றியது சவாலாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு டெலிவரியும் வருமானத்திற்கான வழியாக மட்டும் அல்லாமல், தனது மன உறுதியின் அடையாளமாகவும் பார்த்திருக்கிறார்.
”காலை நேர சவாரியும், நன்பகல் கொளுத்தும் வெய்யிலும், கொட்டும் மழை, இரவு நேர டெலிவரி எல்லாம் நினைவில் உள்ளன. ஒவ்வொரு ரைடும் வருமானம் மட்டும் அல்ல, என்னுடைய மன உறுதிய மீட்டெடுக்கும் வழி. எல்லாம் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் தாக்குப்பிடிக்க ஸ்விக்கி வழிகாட்டியது...” என அவர் எழுதியுள்ளார்.
பணி தொடர்பான நிராகரிப்புகளை எதிர்கொண்டபடி, கடினமான டெலிவரி வேலையை பார்ப்பது எளிதாக இல்லை, ஆனால், ஸ்விக்கியில் பணியாற்றிய மாதங்கள் எனக்கு பொறுமை, விடாமுயற்சி, பணிவை கற்றுக்கொடுத்தது. நான் டெலிவரி செய்த ஒவ்வொரு ஆர்டரும் என்னை வலுவாக்கியது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது அவருக்கு புதிய வேலை கிடைத்துவிட்டாலும், ஸ்விக்கியில் பணியாற்றிய மாதங்களை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த புதிய துவக்கம் உத்வேகம் அளிக்கிறது. அதே நேரத்தில், ஸ்விக்கியில் பணியாற்றிய மாதங்களை நினைத்துப்பார்க்கிறேன். நுகர்வோ மற்றும் சாலையில் எனக்கு கிடைத்த நினைவுகள் மற்றும் ஸ்விக்கியின் ஆதரவுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியை எதிர்கொள்ளும் எவரும் மனம் தளராமல் இருக்குமாறும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கை எதிர்பாராத தடைகளை அளித்தாலும், நாம் நினைக்காத வளர்ச்சியையும் வலிமையையும் அளிக்கும், என்றும் கூறியுள்ளார்.
மன உறுதியின் பயணம்: ஸ்விக்கிக்கு நன்றி எனும் தலைப்பில் அவர் வெளியிட்ட இந்த பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஸிவிக்கி நிறுவனம், ஊக்கம் மிகுந்த கதை என இதற்கு பதில் அளித்துள்ளது. அவரது மன உறுதிக்கு நன்றி தெரிவித்துள்ளது.
Edited by Induja Raghunathan