Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மனிதக் கரு மூளையின் விரிவான 3டி படங்களை வெளியிட்டு ஐஐடி மெட்ராஸ் சாதனை!

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி மெட்ராசில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மைய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பகுதிகள் செல்-தெளிவுத் திறனில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மனிதக் கரு மூளையின் விரிவான 3டி படங்களை வெளியிட்டு ஐஐடி மெட்ராஸ் சாதனை!

Thursday December 12, 2024 , 3 min Read

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி மெட்ராசில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மைய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பகுதிகள் செல்-தெளிவுத் திறனில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான ‘தரணி’யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html)

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

iit

இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் இணைந்து இந்த ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஐஐடி மெட்ராஸ்-ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தலைமையிலான இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.  

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தைச் சேர்ந்தவரும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பிரேம்ஜி இன்வெஸ்ட் ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர்அஜிலஸ் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனங்களும் இப்பணிக்கு ஆதரவு அளித்தன.

முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான என்விடியா (NVIDEA) பெட்டாபைட் மூளைத் தரவைச் செயலாக்க உதவும் பணிக்காக இம்மையத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. தற்போதைய கரு இமேஜிங் தொழில்நுட்பங்கள், ஆரம்பகால நோயறிதல், வளர்ச்சிக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இத்தகைய உயர் தெளிவுத்திறன் கொண்ட மூளைப் படங்களை உருவாக்குவதன் முக்கிய பயன்பாடுகளாகும்.

சிறப்பிதழ் வெளியீடு

நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது. இதழ் முழுவதும் ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே இடம்பெற்றிருப்பதால் உண்மையிலேயே தனித்துவமிக்கதாகும்.

“மனிதக்கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்புதான் தரணி. 2020-2022 ஆண்டுகளில் கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவிற்கான தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத் தளத்துடன் இது உருவாக்கப்பட்டது. ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது,” என்று ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி இதழின் ஆசிரியர் குழுத் தலைவரான சுசானா ஹெர்குலானோ-ஹவுசல் கூறியுள்ளார்.

“ஐஐடிஎம்-இன் மூளை மையத்தில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய கரு மூளை வரைபடத்தை உருவாக்கி அகில இந்திய அளவில் முன்னணியில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மூளை அறிவியல் துறையில் அறிவியல் அறிவை மேம்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தொடக்க நிதியை எமது அலுவலகம் வழங்கியிருப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உலகளாவிய வளத்தையும் உருவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் கூறியுள்ளார்.

“இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,” என்று ஐஐடி மெட்ராஸ்-ன் முன்னாள் மாணவரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
fetus brain

'உலகளாவிய ஆராய்ச்சியில் முக்கிய ஆதாரம்'

“புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆய்வு வழிவகுக்கும், நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் கருவின் மருத்துவத்தில் முன்னேற்றங்களை அளவிடவும் உதவியாக இருக்கும். மனிதக் கரு மூளையானது பொதுவாக அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்பாகும், இதுபோன்ற மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகளாவிய வளமாக இலவசமாகக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்,” என்று ஐஐடி மெட்ராஸ்-ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்

இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐஐடிஎம்), அறிவியல், தொழில்நுட்பம், கம்ப்யூட்டிங், மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை மேற்கொள்ளும் வகையில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் என்ற அதிநவீன மையத்தை 2022-இல் தொடங்கியது.

மனித மூளைகள் செல்லுலார் மட்டத்தில் இம்மையத்தில் வரைபடமாக்கப்படுகின்றன. நரம்பியல் மற்றும் நரம்பியல் தொழில்நுட்பங்களில் மாற்றத்தக்க தாக்கத்துடன் மனித மூளை ஆராய்ச்சிக்கான உலகளாவிய முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.


Edited by Induja Raghunathan