சென்னை வெள்ளம்- 'நமக்கு நாமே' பயணத்தில் சமூகவலைஞர்கள்!
கடந்த வாரங்களில் பெய்த மழையில் ஏற்பட்ட சேதம் மற்றும் வெள்ளப்பெருக்கிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்த தொடர் பேய் மழை சென்னை மற்றும் தமிழகத்தை உலுக்கி வருகிறது. வெள்ளத்தில் தத்தளிக்கும் பலர். வீடு, உடமைகளை இழந்து செய்வதறியாமல் பாதுகாப்பான இடத்தை அடையமுடியாமல் ஆங்காங்கே மாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னையில் காலையில் இருந்து விடாமல் பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்துள்ளது. ஆங்காங்கே மழைநீர் படிந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு மதியமே விடுமுறை அளித்துவிட்டாலும், பலர் பாதிவழியில் பேருந்து கிடைக்காமல் வீட்டிற்கு எப்படி செல்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர்.
எழும்பூரில் இருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. விமான ரன்வேயில் தண்ணீர் தேங்கியிருந்ததால் விமானமும் ரத்து செய்யப்பட்டது. கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஏரி ஒன்று உடைந்ததால் சாலை துண்டிக்கப்பட்டதால் யாரும் சென்னையை விட்டு வெளியேற முடியாத நிலை உருவானது.
அரசாங்கம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல சொல்லி அறிவுறுத்தியது, ஆனால் எது பாதுகாப்பான இடம், எது பாதுகாப்பற்ற இடம் என்று தெரியாமல் மக்கள் திணறினர். மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு முழுதும் மக்கள் இருட்டில் தடுமாறினர்.
இந்நாள்வரை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சென்னை மழையை கலாய்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென களம் இறங்கினர். சிலர் உதவி கேட்டு பதிவு எழுதினர். என்னால் உதவ முடியும், என் வீட்டுக்கு வந்தீர்களென்றால் 5 அல்லது 6 பேர் தங்க முடியும். மின்சார வசதியும் இருக்கிறது என சிலர் எழுதினர்.
Chennai flood rescue informations என்ற பெயரில் ஃபேஸ்புக் பேஜ் ஒன்று உருவாக்கப்பட்டு ஆங்காங்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டது.

Tamilnadu-Chennai Rains HelpLine- 1913 என்பன போன்ற பெயரில் ஃபேஸ்புக் க்ரூப்புகள் உருவாக்கப்பட்டு அதில் அவ்வப்போது உதவிகள் பற்றிய தகவல்களும் உதவி வேண்டுவோர் பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.
இதுவரை ஜாலியான மீம்களை உருவாக்கி எல்லாரையும் கலாய்க்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்த ஃபேஸ்புக் பேஜ்களும் சமூக பொறுப்புணர்ந்து உதவி வேண்டுவோர் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்தன.

பாஸ்கர் ஆறுமுகம் என்பவர் தன்னார்வலர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அதை கூகிள் டாகுமண்டாக்கி இணையத்தில் பகிர்ந்தார்.

சிலர் தங்கள் வீடுகளில் இடம் இருப்பதாக தெரிவித்திருந்த ஃபேஸ்புக் போஸ்டுகள் மற்றும் ட்விட்டர் போஸ்டுகளையும் அதில் சேகரித்து வைத்திருந்தார். அது பயனுள்ளதாக இருந்தது.
ரெயின் ட்ராப்ஸ் என்ற அமைப்பு செல்பேசியில் காசு இல்லாமல், கால் செய்ய முடியாமல் தவிப்பவர்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்ய முன்வந்தது.

சிலர் உணவு பொட்டலங்கள் வழங்க முன்வந்தார்கள்.

சில ரெஸ்டாரண்டுகள் தங்க இடம் தருவதாக சொன்னது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ஏஜிஎஸ் சினிமாஸ், சத்யம் சினிமாஸ் மற்றும் ஃபீனிக்ஸ் மால் போன்றவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்க இடம் கொடுத்தார்கள்.
கீழ்கட்டளையில் அரவிந்த்குமார் என்ற டாக்டர் மருத்துவரீதியில் உதவ முன்வந்தார்.

ஸ்டீபன் சன்சிகன் என்னும் இலங்கையை சேர்ந்த ஆசாமி உதவி கேட்பவர்கள் மற்றும் உதவுபவர்கள் பற்றிய தகவல்களை இமேஜாக எடிட் செய்து இணையத்தில் போட்டார். இவர் அடிப்படையில் ஒரு க்ராபிக் டிசைனர் ஆவார். இதன் நோக்கம் வெறுமனே ஃபேஸ்புக்கில் பதியும் பதிவுகளை போட்டோக்களாக்கினால் அது வாட்ஸப்பில் பரவி பலரை சென்றடைந்து உதவி இன்னும் வேகமாக சென்று சேரும் என்பதே.

இவ்வாறு அவரவரால் முடிந்த உதவிகளை இலட்சக்கணக்கானோரை சென்றடையும் சமூக ஊடகத்தில் பதிவுகள் மூலம் பகிர்ந்து மக்கள் பயனடைந்தது மகிழ்ச்சியான தகவல். இருப்பினும் பலர் உதவி கேட்டு பகிர்ந்த பதிவுகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதியோ, படகு வசதியோ இல்லாததால் பலரும் மீண்டும் மீண்டும் உதவி கேட்டு பதிந்து வந்தனர். மனமிருந்தும் உதவ முடியாத சூழலில் பலர் தவித்தனர்.
இது போன்ற அசாதாரண நிலைமைகளில் அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளுக்கு கைகொடுக்கும் வகையில், மக்களே களத்தில் குதித்து உதவ முன் வந்துள்ளது, சென்னைவாசிகளின் உண்மையான சமூகப் பொறுப்பை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.