நீங்கள் லட்சாதிபதி ஆக இதோ சில எளிய வழிகள்...
லட்சாதிபதி ஆவது ஒன்றும் முடியாத செயல் இல்லை. கொஞ்சம் பணம், காலம், முயற்சி மற்றும் சிறிது அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்.
வருமான வழி தேவை
நீங்கள் பணக்காரராக இல்லாத நிலையில் அல்லது, லாட்டரியில் முதல் பரிசு விழவில்லை எனில் நீங்களே பணத்தை சம்பாதித்தாக வேண்டும். செல்வம் சேர்க்க நீங்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை, அந்த பணத்தை கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.
லட்சாதிபதி ஆவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள விரும்பினால், கூடுதலாக சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். பகுதி நேரத்தில் சம்பாதிப்பதற்கான வழிகளை உங்கள் வாழ்வியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு வருமானத்திற்கான வழி இருக்க வேண்டும் என்பது போல, கூடுதலாக இன்னொரு வருமான வழி இருந்தால் இன்னும் சிறப்பு. அதற்காக நீங்கள் பகுதிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்றில்லை, ஆனால் வார இறுதியில் அல்லது வார நாட்களில் இரவில் ஓரிரு மணி நேரத்தில் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை தேடுங்கள். பிரிலான்ஸ் பணியில் இருந்து வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டுவது வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாதம் கொஞ்சம் பணம் கூடுதலாக சம்பாதிப்பது உங்களை லட்சாதிபதியாக்கும் பயணத்தில் உதவியாக இருக்கும். இது பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், ஆண்டுதோறும் சேர்ந்து கொண்டே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம் தெரியுமா? போதுமான வருமானம் ஈட்டுவதோடு, வாழ்வியல் தேர்வுகள் மூலம் செலவுகளை குறைக்கலாம். இந்த அம்சங்களோடு லட்சதிபாதியாவதற்கான மற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும்.
செலவைவிட அதிக வருமானம்
நீங்கள் சம்பாதிப்பதை விட குறைவான செலவு செய்தால் நிதி விஷயங்களை சரியாக கையாள முடியும். இதற்கு இன்னொரு சிறந்த வழி நீங்கள் செலவிடுவதைவிட அதிகம் சம்பாதிப்பதாகும். நீங்கள் உங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. துறவு வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் சொல்வதற்கில்லை.
நீங்கள் மகழ்ச்சி அடையும் பொருட்கள் மீது மதிப்பை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காதவற்றில், செலவை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு சில குடும்பங்களில் வெளியே சென்று சாப்பிடுவது பெரிய விருந்தாக அமையலாம். அடிக்கடி வெளியே சாப்பிடாமல் சேமித்து, ஒரு சில முறை சாப்பிடும் போது அதிகமாக செலவு செய்து மறக்க முடியாத அனுபவமாக மாற்றிக்கொள்ளலாம். இப்படி தேர்வு செய்வதன் மூலம், சேமிக்க முடியும் என்பதோடு, விருப்பம் இல்லை எனில் தேவையில்லாமல் செலவு செய்வதையும் தவிர்க்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் வருமானத்திற்குள் வாழ்வது நிதி வெற்றிக்கு முக்கியமானதாகும். அதிகம் சம்பாதிப்பது மற்றும் குறைவாக செலவு செய்வது ஆகிய இரண்டு விஷயங்களையும் உங்களால் ஒன்று கலக்க முடியும் என்றால், உலகின் 95 சதவீதம் பேரை விட உங்களால் முன்னிலையில் இருக்க முடியும். உங்கள் லட்சாதிபதி பாதையில் முன்னேற வேண்டும் எனில் நிச்சயம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் செலவிடக்கூடாது.
உங்கள் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே சம்பள உயர்வு கொடுத்துக்கொள்ளக்கூடிய சில எளிதான வழிகள் இருக்கின்றன. கேபிள் டிவி இணைப்புக் கட்டணத்தை கட்டுப்படுத்துவது போன்ற சேமிப்புகள் மூலம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம். மாதம் 200 ரூபாய் சேமித்தால் கூட ஆண்டுக்கு 2,400 சேமிக்கலாம்.
வருமானத்தில் கொஞ்சம் சேமிக்கவும்.
பலரும் தவறவிடும் எளிய விஷயம் இருக்கிறது. நீங்கள் சம்பாதிக்கும் எல்லாவற்றையும் செலவு செய்தால், செல்வந்தராக முடியாது என்பது தான் அது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, நீங்கள் கொஞ்சம் தொகையை சேமித்தாக வேண்டும். கைவசம் கொஞ்சம் இருப்பது நல்லது. ஏனெனில், எதிர்பாராத செலவுகளை சமாளித்து, கடனை தவிர்க்க இது உதவுகிறது. சேமிப்பு முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வரிகள் மற்றும் இதர அம்சங்கள் தொடர்பு கொண்டிருப்பதால், சேமிக்கும் பணம் என்பது சம்பாதிக்கும் பணம் போன்றது.
ரொக்கம் கைவசம் இருப்பதன் இன்னொரு சாதகம் என்னவெனில் முதலீடு செய்ய அல்லது பெரிய பொருட்களை வாங்குவதற்கான தொகை கையில் இருக்கும் என்பது தான். முதலீடு செய்ய, சொத்து வாங்க அல்லது தள்ளுபடியில் பொருட்கள் வாங்க இது கைகொடுக்கும். இவற்றை மனதில் கொண்டு இயன்ற போதெல்லாம் சேமிக்கவும்.
சீரான முதலீடு
உங்கள் வளத்தை பெருக்கிக் கொள்ள முதலீடு செய்வது தான் சிறந்த வழி. கூட்டு வட்டி என்பது இந்த பிரபஞ்சத்தின் சக்தி வாய்ந்த ஆற்றலாக இருக்கலாம். அந்த ஆற்றல் உங்களுக்கு சாதகமாக அமையும். முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன. சரியான முதலீடு முடிவு எடுத்து, அது வளர அனுமதித்தால் கூட்டு வட்டி உங்களுக்கான பலன் அளிக்கும்.
வரி சேமிப்பு அளிக்கும் ஓய்வுதியம் சார்ந்த முதலீடுகளில் சேமிப்பது உங்கள் வளத்தை அதிகரிக்க உதவுவதோடு, வரி பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். மேலும் இந்த முதலீடுகளை உங்கள் வரி திட்டமிடலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் இப்போதே துவங்கியிருக்கவில்லை எனில் முதலீடு செய்வது மிரட்சி அளிக்கலாம். ஆனால் அடிப்படைகளை தெரிந்து கொண்டால் எளிது.
கவனிக்கவும், தொடரவும்...
துவக்கி விட்டால் லட்சாதிபதியாவதற்கான பாதை எளிதானது. சிறிய வாழ்வியல் முறை மாற்றங்களில் இருந்து இது துவங்குகிறது. உதாரணமாக, உங்கள் மாதச் செலவுகளை குறைப்பதற்கான வாழ்வியல் மாற்றம், வருமானத்தைவிட குறைவாக செலவு செய்ய உதவும். இதன் மூலம் மாதந்தோறும் சேமிப்பது எளிதாகும். கொஞ்சம் ரொக்கம் சேமித்தவுடன் சிறிய அளவிலான அவசரத்தேவைகளை எளிதாக சமாளிக்கலாம். இது முதலீடு செய்வதையும் எளிதாக்கும்.
இந்த பயணத்தை எளிதாக்கும் மற்ற விஷயங்களும் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் தானியங்கி சேமிப்பு அல்லது முதலீட்டு வசதியை நாடலாம். இதன் மூலம் தவறாமல் சேமிக்க முடியும்.
அதோடு உங்கள் பணம் எப்படி செலவாகிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கென உள்ள செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம். செலவுகளை கண்காணிக்க உதவும் மற்றும் நிதி விஷயங்களை நிர்வகிக்க உதவும் செயலிகள் பல இருக்கின்றன. இப்படி செய்வதன் மூலம் உங்கள் செலவு பழக்கத்தை அறிந்து கட்டுப்படுத்தலாம். இதன் பிறகு செலவுகளையும், முதலீட்டையும் சிறப்பாக திட்டமிட்டு, இலக்கை நோக்கி முன்னேறலாம்.
தமிழில்: சைபர்சிம்மன்
(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரை தனிநபர் நிதி வழிகாட்டி வலைப்பதிவான ’Cashmylife’, ரயான் குய்னா எழுதிய, லட்சாதிபதியாவது எப்படி? ஐந்து எளிய படிகளை கொண்ட வழி என்று ஆங்கிலத்தில் முதலில் வெளியிடப்பட்டது)