'மாணவர்களுக்கு கல்வியை எளிதாக்கிய ஆசான்கள்' - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் இரு தமிழக ஆசிரியர்கள்!
மத்திய அரசு வழங்கும் 2024 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் மற்றும் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் 'தேசிய நல்லாசிரியர் விருது' வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
50 ஆசிரியர்கள் கொண்ட இந்த பட்டியலில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன், வேலூர் ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகிய இரண்டு பேர் தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் ராஜகுப்பம் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்வாகி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தேசிய அங்கீகாரமாக சக ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆசிரியர் கோபிநாத் என்பதைத் தாண்டி 'தெருவிளக்கு கோபிநாத்' என்பதுதான் இவரது மற்றொரு அடையாளம். கலைகள் மூலம் கற்பிக்க முடியும் அது சிறு வயது மாணவர்கள் மனதில் வேறாக ஊன்றும் என்று புதுவித கற்பித்தலை செய்து வருகிறார் கோபிநாத்.
கலை வழிக் கற்றலில் கோபிநாத்
அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் சீருடை அணிந்து வகுப்புக்கு செல்வது, மாணவர்களின் கற்றலை அதிகரிக்க திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் வேடங்களில் சென்று பாடங்கள் எடுப்பது இவரது தனிச்சிறப்பு. திருவள்ளுவர், பாரதியார் போன்ற வேடமிட்டு வரும்போது மாணவர்கள் மிகுந்த உற்சாகமாக கற்றுக்கொள்வதுடன், அவர்கள் பற்றிய புரிதலும் அதிகரிக்கிறது என்பது கோபிநாத்தின் கருத்து. அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தன்னுடைய மகளையும் அதே பள்ளியில் படிக்க வைத்துள்ளார் இவர்.
கோபிநாத் குடும்பமே ஆசிரியர் குடும்பம். அவரது தாய், தந்தை இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சகோதர, சகோதரியும் கூட ஆசிரியர்கள். அவரது மனைவி வெங்கடேஸ்வரியும் குடியாத்தம் காந்திநகர் உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாணவர்கள் நலனில் அக்கறை
“2005ல் நான் என்னுடைய ஆசிரியர் பணியைத் தொடங்குனேன். எனக்கு சின்ன வயசுலேருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம். நான் ஆசிரியராகி விட்டதால் அந்த ஓவியப் பழக்கம் என்னை விட்டு போய்விடக்கூடாது என்று மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது ஓவியங்களாக வரைந்து விளக்கத் தொடங்கினேன். அது அவர்களுக்கு நல்ல புரிதலைக் கொடுத்தது. மாணவர்கள் சோர்ந்து போகாமல் உற்சாகத்தோடு வகுப்புகளை கவனிக்கத் தொடங்கினார்கள். அன்று முதல் கலை வழியே கல்வியை கற்பிப்பதை செய்து வருகிறேன்," என்கிறார் கோபிநாத்.
பொதுவாகவே ஆசிரியர்கள் மாணவர்களிடையே பயம் என்ற ஒரு கோடு இருக்கிறது. அதனை போக்க வேண்டும் என்று விரும்பினேன். என்ன செய்யலாம் என்று எண்ணிய போது மாணவர்களிடையே பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக சீருடை அணிகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க நானும் தினசரி பள்ளிக்கு மாணவர்களின் சீருடையிலேயே சென்றேன்.
”என்னைப் பார்த்த மாணவர்கள், சார் நீங்களும் எங்களை மாதிரியே uniform போட்டிருக்கீங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு இடையில இருந்த இடைவெளி, பயம் மறைந்து ஒரு நல்ல உறவு மலர்ந்ததை உணர்ந்தேன். இதையே எனது நோக்கத்தின் முதல் வெற்றியாக பார்த்தேன்,” என்கிறார் கோபிநாத்.
தெருவிளக்கு
கற்பித்தலில் மட்டுமின்றி தனக்கு தெரிந்த கலைகளான பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு என் எல்லாவற்றையும் மாணவர்களுக்கு கற்றுத் தந்து அவர்கள் பெரும் பாராட்டுகளைக் கண்டு மகிழ்ந்து வருகிறார் கோபிநாத். அசாம் மாநிலத்தில் பொம்மலாட்ட கலையை கற்ற, தோல் பாவை கூத்தும் கற்றுக் கொண்டுள்ளார். தோல் பொருட்களை வாங்கி அதை அழகிய பொம்மைகைளாக மாற்றும் பயிற்சி, தோல்பாவை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்துள்ளார். மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் தோல்பாவை கூத்து பிரிவில் கோபிநாத்தின் மாணவர்கள் இரண்டு முறை இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.
கல்வி எட்டாத நிலையே இருக்கக் கூடாது என்பதற்காக இரவு பள்ளியையும் 'தெருவிளக்கு' என்கிற பெயரில் நடத்தி வருகிறார் கோபிநாத். தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள் மாலை நேரத்தில் கல்வி பெறுவதற்காக இரவுப் பள்ளியை தொடங்கினேன். இங்கு சுமார் 90 பேர் படிக்கின்றனர். ஒரு தெருவிளக்கு தன்னால் எவ்வளவு தூரத்திற்கு வெளிச்சத்தை காட்ட முடியுமோ அப்படி எனது கல்விச் சேவை தொடர விரும்பி தெருவிளக்கு இரவு பள்ளியை நடத்தி வருகிறேன்,’’ என்கிறார் கோபிநாத்.
இதுவே அவரது அடைமொழிப் பெயராக தெருவிளக்கு கோபிநாத் என்றாகிவிட்டது.
நல்லாசிரியர் விருது பெறும் முரளிதரன்
“விருதுகள் நமக்கு ஊக்கத்தைத் தரும், இத்தனை வருடங்களாக யாராவது பாராட்டுவார்கள் என்று நினைத்து உழைக்கவில்லை. மாணவர்களுக்காக நேர்மையாக கற்பித்தலை செய்து வந்தேன்.
“எங்கள் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் முதல் தலைமுறை மாணவர்கள், முழுக் முழுக்க ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை நம்பியே அவர்களின் கற்றல் இருக்கிறது. அவர்களுக்காக நான் என்னுடைய கடமையை நேர்மையாகச் செய்தேன், எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னுடைய குடும்பத்தினர் அனைவருமே ஆசிரியர்கள், என்னுடைய பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த விருதைப் பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரன்.
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தெருவிளக்கு கோபிநாத் மற்றும் முரளிதரன் அவர்களின் விருதை மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு சமர்பித்துள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் இருவருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர்களுக்கு 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார்.