குறைந்த கட்டணத்தில் கோடிங் பயிற்சி - ‘கோட் பண்ணு’ உருவாக்கிய தூத்துக்குடி பொண்ணு!
குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்கள் கோடிங் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் ‘கோட் பண்ணு’ என்ற இணையதளத்தை ஆரம்பித்து, அதன் மூலமாக உலகில் உள்ள 16 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு கோடிங் சொல்லித் தருகிறார் அனிதா ராமன்.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இன்றைய வாழ்க்கைச் சூழலிலும், கணினி அறிவு என்பது இன்னமும் பலருக்கு எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க செல்போன் கிடைக்காமல் அவதிப்பட்ட பிள்ளைகள் பலர். செல்போனே இப்படி என்றால், கணினி என்பது அவர்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.
அப்படியான சூழலில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் கணினி சார்ந்த மேற்படிப்புகளைத் தேர்வு செய்வது என்பது கேள்விக்குறியே.
ஆனால், எதிர்காலத்தில் இப்படி நம் இளைய தலைமுறையினர் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே, ‘கோட் பண்ணு’ (
) எனும் சமூகநலன் சார்ந்த தொழில்முயற்சி ஒன்றை மேற்கொண்டு, அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டும் வருகிறார் பெங்களூருவைச் சேர்ந்த அனிதா ராமன்.கோட் பண்ணு உருவாக்கிய பொண்ணு
அனிதா தற்போது வசிப்பதுதான் பெங்களூரு என்றாலும், பிறந்தது வளர்ந்தது எல்லாமே தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தான். அப்பா அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனர். அம்மா, அக்கா, அண்ணன் என சிறிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் தான் அனிதா.
பொருளாதார ரீதியாக நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், சிறுவயது முதலே தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு, குறிப்பாக கல்விரீதியாக கஷ்டப்படுபவர்களுக்கு தேவையானதைச் செய்து வந்துள்ளார்.
“இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான் சிறுவயது முதலே எங்களுக்குச் சொல்லி சொல்லி வளர்த்தார் எங்கள் அப்பா. கம்யூட்டர் சயின்ஸில் பொறியியல் படிப்பு முடித்ததும், வேலைக்காக பெங்களூரு சென்றேன். ஆறு ஆண்டுகள் ஐடியில் வேலை பார்த்தபோதும், எனக்காக இடம் இதுவல்ல என என் மனது சொல்லிக் கொண்டே இருந்தது. எனவே, முழுநேர பணியை ராஜினாமா செய்து விட்டு, பகுதிநேர வேலைகளாக எடுத்துச் செய்வதென முடிவு செய்தேன்,” என்கிறார்.
கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, இப்படி பகுதி நேரமாக வேலை பார்ப்பதென்ற என் முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. நான் முட்டாள்தனமான முடிவெடுத்து விட்டதாகவே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்போது நான் எடுத்த அந்த முடிவுதான், என்னை இன்று ஒரு நல்ல மனநிறைவான தொழில்முனைவோராக்கி இருக்கிறது, என்கிறார் அனிதா.
ஆரம்பத்தில் பகுதி நேர வேலையாக பல நிறுவனங்களில் புராஜெக்ட் எடுத்து செய்து வந்துள்ளார் அனிதா. அப்போதே தனக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு, தொழிலில் தன்னால் என்னென்னெ உதவிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்து வந்துள்ளார். படிப்பை முடித்து புதிதாக வேலைக்கு வருபவர்கள், தங்களை இந்தத் துறையில் நிலை நிறுத்திக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்ற இவரது அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலால் பலர் பயனடைந்துள்ளனர்.
இந்த சூழலில்தான், கொரோனா ஊரடங்கு வர, புதிய புராஜெக்ட்கள் எதுவும் எடுக்காமல் ஓய்வில் இருந்துள்ளார் அனிதா. அப்போதுதான், தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில், கணினி அறிவு எல்லா மாணவர்களுக்கு சரிசமமாக போய்ச் சேருவதில்லை என்ற கவலை அனிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தானே, இதனை ஒரு தொழில் முயற்சியாக மேற்கொண்டால் என்ன என அவர் யோசித்துள்ளார். அதன் பயனாக உருவானதுதான் ‘கோட் பண்ணு’ ‘Code Pannu'.
லாக்டவுன் காலத்தில் எல்லாமே ஆன்லைன் வழியே என்றானது. அப்போது ஒருநாள் எனது சீனியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகளின் கல்வியை வைத்து, நடத்தப்படும் வியாபார மோசடிகளைப் பற்றி பேச்சு வந்தது.
”குழந்தைகளை வைத்து மார்க்கெட்டிங் பண்ணக்கூடாது. ஆனால் இன்று பல நிறுவனங்களின் டார்கெட்டே குழந்தைகள் தான். கவர்ச்சிகரமான விளம்பரங்களால் கவரப்படும் பெற்றோர்கள், அதிக கட்டணங்களைக் கட்டி தங்கள் பிள்ளைகளை ஏதாவது வகுப்பில் சேர்த்து விட்டு விடுகின்றனர். ஆனால், அந்தப் படிப்பை குழந்தைகள் விரும்பிப் படிக்கிறார்களா என்றால், அது கேள்விக் குறிதான். கல்வி இப்படி மார்க்கெட்டிங் சார்ந்ததாக இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.”
11 வருடங்கள் கார்ப்பரேட் வேலை, அதன்பிறகு 5 ஆண்டுகள் ப்ரீலான்சிங் புராஜெக்ட்கள் என ஐடி துறையில் எனக்கு நல்லதொரு அனுபவ அறிவு இருந்தது.
தற்போதைய ஐடி நிறுவனங்களின் தேவை என்ன? அதற்கு மாணவர்கள் எந்த மாதிரியான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருந்தது. இதுவரை சுமார் 400 முதல் 500 பேருக்கு இப்படி நான் வழிகாட்டி இருக்கிறேன். எனவே, என்னை மாதிரியான அனுபவசாலிகள்தான் இந்த பயிற்சி துறைக்குள் வர வேண்டும் என்ற எனது சீனியரின் வார்த்தைகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன்பலனாக ஒரே இரவில் உருவானதுதான் இந்த ’கோட் பண்ணு.காம்’ (codepannu.com) இணையதளம் என தான் தொழில்முனைவோரான தருணங்களை நினைவு கூர்கிறார் அனிதா.
கோட் பண்ணு செய்வது என்ன?
நான்கு வருடம் கணினி அறிவியலில் பொறியியல் படித்தவர்களில் பலருக்கும் கோடிங் எழுதத் தெரிவது இல்லை என்பதுதான் அனிதாவின் கருத்து. பட்டப்படிப்பு முடித்தவுடன் வேலைக்கு வரும் இவர்கள், கோடிங் எழுதத் தெரியாமல் கஷ்டப்படுவதை நேரடியாகவே பார்த்துள்ளார். எனவே, தனது கோட் பண்ணு மூலம் கணினியின் அடிப்படையான கோடிங் எழுதுவதை மாணவர்களுக்கு கற்றுத் தருவது என அனிதா முடிவு செய்தார்.
“ஏற்கனவே இது போன்ற கணினி பயிற்சி நிறுவனங்கள் இங்கு ஏராளம். ஆனால், அவைகளில் இருந்து என்னுடைய இணையதளத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் முதன்மையானது எங்களது தரம். அதற்கு அடுத்தபடியாக நாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணங்கள். ஏனென்றால் எங்களது முக்கியக் குறிக்கோளே குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்கள் கோடிங் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். எங்களது மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தத் துறைக்குச் சென்றாலும் நிச்சயம் இந்த கோடிங் பயிற்சி அவர்களுக்கு உதவும்,” என உறுதியாகக் கூறுகிறார் அனிதா.
நகரத்து குழந்தைகள் மட்டுமின்றி, கிராமத்து குழந்தைகளும் கணினி அறிவைப் பெற வேண்டும் என்பதுதான் அனிதாவின் மிகப் பெரிய ஆசை. இதுவரை சுமார் 16 நாடுகளில் இருந்து 400 மாணவர்கள் இவரிடம் கோடிங் வகுப்புகளைக் கற்றுத் தேர்ந்துள்ளனர்.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனி ஒருவராக எந்தவித முதலீடும் இல்லாமல்தான் ‘கோட் பண்ணு’வை ஆரம்பித்துள்ளார் அனிதா. நண்பர்களின் குழந்தைகள், அவர்களுக்குத் தெரிந்தவர்களின் குழந்தைகள் ஆகியோர் தான் அனிதாவின் முதல் பேட்ஜ் மாணவர்களாக இருந்துள்ளனர். அனிதா சொல்லித் தரும் விதத்தை வைத்து, அவர்களின் வாய்மொழி விளம்பரங்கள் வாயிலாகவே மேலும் பல மாணவர்கள் கோட் பண்ணுவில் இணைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் முதலீடு இல்லாமல்தான் இந்த இணையதளத்தை ஆரம்பித்தேன். குறைந்த கட்டணம் என்பதால், மற்ற நிறுவனங்களுக்கு நிகரான லாபம் எதையும் எதிர்பார்க்க முடியாது.. அது கூடவும் கூடாது என்பதில், ஆரம்பத்தில் இருந்தே நான் தெளிவாக இருந்தேன். எனவே, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அதற்குத் தகுந்த மாதிரி என் குழுவில் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஆரம்பித்தேன்.
“ஓராண்டுக்குப் பிறகுதான் என் சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 5 லட்சத்தை கோட் பண்ணுவிற்காக முதலீடு செய்தேன். இப்போது என்னிடம் 20 பேர் வேலை பார்க்கிறார்கள். மார்க்கெட்டிங் என தனியாக எதுவும் செய்யவில்லை. ஏற்கனவே பயனடைந்தவர்கள் வாய்மொழி விளம்பரம் வழியாகவே 16 நாடுகளையும் சென்றடைந்துள்ளோம்,” என்கிறார் அனிதா.
தனது வகுப்பில் சேர்வதால் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதித்து விடாத வகையில், கோர்ஸ்களை அமைத்திருப்பதாகக் கூறும் அனிதா, குடும்பச் சூழல் காரணமாக ஐடி வேலையை விட்டு விட்டு, வீட்டில் இருக்கும் அனுபவசாலியான பெண்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பகுதி நேர வேலை அளிப்பதையும் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம் மூலம் குழந்தைகளுக்கு கோடிங் செய்யக் கற்றுக் கொடுக்கும் 11 வயது மாணவி!