ரூ.850 கோடி டி சுற்று முதலீடு திரட்டிய சென்னை நிறுவனம் M2P Fintech!
ரூ.6,550 கோடி சந்தை மதிப்பீட்டில், ஹிலியோஸ் இன்வெஸ்ட்மண்ட் பார்ட்னர்ஸ் தலைமை வகித்த டி சுற்றில் ரூ.850 கோடி நிதி திரட்டியுள்ளது எம்டுபி ஃபிண்டெக் நிறுவனம்.
வங்கித்துறை உள்கட்டமைப்பு நிறுவனம் எம்2பி ஃபின்டெக் (M2P Fintech), ரூ.6,550 கோடி சந்தை மதிப்பீட்டில், ஹிலியோஸ் இன்வெஸ்ட்மண்ட் பார்ட்னர்ஸ் தலைமை வகித்த டி சுற்றில் ரூ.850 கோடி நிதி திரட்டியுள்ளது. இதன் தற்போதைய முதலீட்டாளர் பிளரிஷ் வென்சர்ஸ் நிறுவனமும் இதில் பங்கேற்றது.
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு விற்பனையால் திரட்டப்பட்ட இந்த நிதி, ஆப்பிரிக்காவில் எம்2பி செயல்பாடுகளை விரிவாக்க பயன்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த எம்2பி நிறுவனம், தனது தொழில்நுட்ப ஸ்டாக்கை மேம்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்த உள்ளது. ஏஐ மற்றும் தரவுகள் கொள்ளலவிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், நிதி நிறுவனங்களுடான கூட்டு முயற்சிகளையும் மேம்படுத்திக்கொள்ள உள்ளது.

"ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு, சர்வதேச அளவிலான எம்2பி-யின் விரிவாக்க செயல்பாடுகளுக்கு நிதி மற்றும் ஆதரவு வழங்குவதில் ஹிலியோஸ் உற்சாகம் கொள்கிறது. இந்த கண்டத்தில் நிதி நுட்ப சேவைகளை வளர்த்தெடுப்பதில் ஹிலியோசுக்கு நல்ல அனுபவம் உள்ளதால், இந்த முதலீடு அதிக வளர்ச்சி கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் எங்கள் நோக்கத்திற்கு ஏற்ப அமைகிறது,” என ஹிலியோஸ் இன்வெஸ்ட்மண்ட் பார்ட்னர்ஸ், நிதிச்சேவைகள் நிர்வாக இயக்குனர் இலியாஸ் யாஸ்பெக் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவில் அனுபவம் கொண்ட ஹிலியோஸ், இந்த கண்டத்தில் எம்2பி நிறுவன விரிவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, மொபைல் சேவைகளுக்கான தேவை அதிக வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கிறது.

2014ம் ஆண்டு முத்துகுமார்.ஏ, பிரபு.ஆர், மற்றும் மதுசூதனன் ஆகியோரால் துவக்கப்பட்ட ஏபிஐ உள்கட்டமைப்பு நிறுவனம் எம்2பி, 30 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேலான வங்கிகள், 300 கடன் நிறுவனங்கள் மற்றும் 800 நிதி நுட்ப நிறுவனங்களுக்கு சேவை அளிக்கிறது.
"வங்கிச்சேவையை ஒரு சேவையாக வழங்கும் பெரிய நிறுவனம் என்ற முறையில், இந்த நிதி இந்தியாவில் எங்கள் முன்னணி நிலையை உறுதியாக்குவதோடு, எங்கள் சர்வதேச விரிவாக்க முயற்சிக்கும் உதவும்,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ மதுசூதனன் கூறியுள்ளார்.
"வேகமாக வளரும் டிஜிட்டல் பொருளாதாரம், அனைவருக்குமான நிதிச்சேவை சார்ந்த புதுமையாக்க தேவைகள் கொண்ட ஆப்பிரிக்கா, நுதிநுட்ப வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கிறது. ஆப்பிரிக்க சந்தை பற்றி நல்ல புரிந்தல் கொண்ட ஹிலியோசுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் ஆதரவு மற்றும் எங்கள் தொழில்நுட்ப வல்லமை கொண்டு, அனைவருக்குமான நிதிச்சேவைகள், புதுமையாக்கம் சார்ந்த அளிக்கும் எங்கள் நோக்கத்திற்கு உதவும், என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan