Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘அம்மாவின் பூக்கடையில் கற்ற மார்க்கெட்டிங்’ - மாதம் ரூ1.5 லட்சம் வருமானம் ஈட்டும் மகன்!

24 வருடம் ஓலை குடிசையில் வாழ்ந்த நிலையில் இப்போது மழை வந்தால் ஒழுகாத வீட்டிற்கு மாறியுள்ளோம். முதன் முதலில் ப்ளைட்டில் பயணித்தேன். முதன் முதலில் குடும்பத்துடன் காரில் பயணித்தோம். முதன் முதலில் ஓட்டலில் சாப்பிட்டோம்... தன்னம்பிக்கையையும் மட்டுமே நம்பி ஓடி, உழைத்து வெற்றி கண்ட வாலிபரின் கதை!

‘அம்மாவின் பூக்கடையில் கற்ற மார்க்கெட்டிங்’ - மாதம் ரூ1.5 லட்சம் வருமானம் ஈட்டும் மகன்!

Monday September 12, 2022 , 3 min Read

ரோட்டோரத்தில் பூக்கடை வைத்திருக்கும் அம்மா; அப்பா டிவி மெக்கானிக்; அக்கா, தங்கை, தம்பி என 5 பேர் உள்ளடக்கிய குடும்பம்; ஓலைக் குடிசை வீடு; நிரந்தரமற்ற வருமானம் - என ஏழ்மை வர்க்கத்தின் நிலையை பிரதிபலிக்கும் குடும்பத்திலிருந்து கனவுகளையும், தன்னம்பிக்கையையும் மட்டுமே நம்பி ஓடி, உழைத்து வெற்றிக் கண்ட எளிய மனிதரின் வெற்றி கவனித்து பாராட்ட வேண்டியது அல்லவா!?

அதிலும், 20 வயதே ஆன நிர்மல் குமாரின் கதை டிஜிட்டல் லைஃபில் மூழ்கி கிடக்கும் இளைய சமூகத்துக்கு உத்வேகத்தையும் அள்ளித் தரும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இன்டிபென்டட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனலிஸ்ட்டாக மாதம் ரூ1.5லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் நிர்மல் குமார்.

nirmal kumar

பூக்கடை வைத்திருக்கும் அம்மா உடன் நிர்மல் குமார்

டிஜிட்டல் மார்க்கெட்டர் ஆனது எப்படி?

சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார், படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடன்ட். படிப்பை மட்டுமே பிள்ளைகளுக்கு எதிர்கால சொத்தாக வழங்கிட நினைத்த அவரது பெற்றோரின் பெரிய நம்பிக்கை அவர். பள்ளிப்படிப்பினை நன்மதிப்பெண்ணுடன் முடித்த அவருக்கு அடுத்தது என்ன? என்பதில் குழப்பம். இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கல்லுாரியில் சேர்ந்த 4 மாதத்தில் அவருடைய அப்பா, எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்ள வீட்டின் முக்கியமான வருமானம் இல்லாமல் போனது. டீன் ஏஜ் பருவத்திலிருந்த நிர்மல் குமார் அந்நிலையை சரிசெய்ய படிப்பை கைவிட்டு அதிகாலையில் பேப்பர் போடும் வேலையை செய்யத் துவங்கியுள்ளார்.

அந்த செய்தித்தாளின் ஒரு பக்கத்தில் சில புத்தகங்களை பரிந்துரைத்த செய்தி இடம்பெற்றிருந்தது. அதில், ’பவர் ஆஃப் பாசிட்டிவ் தின்க்கிங்’ எனும் புத்தகத்தின் தலைப்பு நிர்மல் குமாரை வெகுவாக ஈர்த்தது. ஏனெனில், நெகட்டிவ் வைப்ரேஷன் சூழ்ந்த நேரத்தில் இருந்தார் அவர்.

"வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான சூழ்நிலைகளிலும் எனக்கு துணையாக நின்றது புத்தகங்கள் தான். 5ம் வகுப்பு படிக்கும் போதே அக்னி சிறகுகள், ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய புத்தகங்களை வாசித்துள்ளேன். சிறு வயதிலிருந்தே எதிலும் பெரிதாக கனவு காண வேண்டும் என்று நினைப்பேன். பள்ளி நாட்களிலிருந்தே அதுபோன்றே என்னை வெளிக்காட்டி வந்துள்ளேன்,” என்கிறார்.

இந்நிலையில், படிப்பை கைவிட்டு வீட்டில் இருப்பதை பார்த்த பள்ளியில் உடன் படித்தவன் என்னிடம் வந்து, 'இதுக்கு தான்டா தகுதிக்கு ஏத்தமாதிரி எதையும் ஆசைப்படணும்' என்று சொன்னான். அந்த வார்த்தைகள் என் துாக்கத்தை கலைத்தது. கல்லுாரி படிப்பை கைவிட்டது, அந்த பையன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னை சோர்வடைய செய்தது.

வாழ்க்கையை மாற்றிய புத்தகம்

அந்த சமயத்தில் தான், ’பவர் ஆஃப் பாசிட்டிவ் தின்க்கிங்’ புத்தகம் பற்றி தெரிய வந்து, அதை வாசித்தேன். இழந்த தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மீண்டும் சேர்ந்தேன்.

nirmal kumar
”அந்த புத்தகம் தான் திறமையை வளர்த்து கொண்டாலே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உணர்த்தியது. அப்போ எனக்கு என்ன வரும்? என்பதை பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.”

அப்போது தான், அம்மாவுடன் கடையில் வியாபாரம் செய்த நாட்களில் பூ விற்க அவர் செய்யும் சில யுக்திகள் ஞாபகத்துக்கு வந்தன. அவரது மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜிகளும், அத்தனை கடைகளுக்கு மத்தியிலும் தொழிலில் அவர் நிலைத்து நிற்பது என அவரிடமிருந்த கற்றப் பாடங்களின் வழி, மார்க்கெட்டிங் துறையில் எனக்கு அனுபவமும், சிறு அறிவும் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதையே வளர்த்து கொள்ளும் வேலையில் இறங்கினேன்.

அப்போது நான் கல்லுாரி இறுதியாண்டு மாணவன்.கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையும் கிடைத்தது.

”தொடர்ந்து இரண்டு, மூன்று இடங்களில் பணிபுரிந்தாலும், என்னுடைய இலக்கு இதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. துணிந்து மாத சம்பள வேலையை விட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுப்படத் தொடங்கினேன். குடும்பம் இருக்கும் நிலையில் என்னால் மாதம் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டாமலும் இருக்க முடியாது. அதனால், ஃபுட் டெலிவரி வேலை செய்து கொண்டே, டிஜிட்டல் மார்க்கெட்டராக பணிகளையும் துவக்கினேன். முதன் முதலில் ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார். என்னுடைய முதல் மாதச் சம்பளத்தின் 10 மடங்கை வருமானமாக ஈட்டினேன்.”
Nirmal

தன் வீட்டிலேயே அலுவலக செட்-அப் செய்துள்ள நிர்மல்

அடுத்தடுத்த மார்க்கெட்டிங் ஸ்கில்லையும் கற்றுக்கொண்டே தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யத் துவங்கினேன். தொழில் துவங்கி சற்று மேலோங்கி வந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. எண்ணற்ற தொழில் முனைவோர்களுக்கு பெரும் அடியாக இருந்த கொரோனா எனக்கு சாதமாக அமைந்தது. நிறுவனங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பக்கம் திரும்பின.

மாதம் ரூ.1 லட்சம் என்பது என்னுடைய நிலையான வருமானமாகி உள்ளது. 24 வருடம் ஓலை குடிசையில் வாழ்ந்துவந்த நிலையில் இப்போது மழை வந்தால் ஒழுகாத வீட்டிற்கு மாறியுள்ளோம். வாடிக்கையாளர் சந்திப்பிற்காக முதன் முதலில் ப்ளைட்டில் பயணித்தேன். முதன் முதலில் குடும்பத்துடன் காரில் பயணித்தோம். முதன் முதலில் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். இது போன்று என் வாழ்க்கையில் முதன் முதலில் அனுபவிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து சின்னச்சிறு கூட்டுக்குள் சந்தோஷத்தை குடிக்கொள்ள வைத்துள்ளது," என்று நிறைவான வார்த்தைகளுடன் கூறி முடித்தார் நிர்மல்.