‘தேடல்களை வாய்ப்பாக்கிய புத்திசாலிகள்’ - 2021ல் வெளியான பெண் தொழில் முனைவோர்களின் சக்சஸ் ஸ்டோரிஸ்!
ஏதோ பல காரணங்களுக்காக தொடங்கிய தேடலை, நல்லதொரு வாய்ப்பாக மாற்றி வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக மாறிய பெண்களைப் பற்றி, 2021ல் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
நகரத்தில் இருந்தால்தான் தொழில் முனைவோராக முடியும், படித்தால்தான் அத்துறையில் வெற்றி கிடைக்கும், குடும்ப உறுப்பினர்களின் உதவி இருந்தால் தான் சாதிக்க முடியும் என பல்வேறு எண்ணத் தடைகளைத் தகர்த்து, தங்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பினால் இன்று சமூகத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக வலம் வருகின்றனர் பல பெண்கள்.
வாய்ப்புகள் நம்மைச் சுற்றி நிரம்பிக் கிடக்கிறது. அதனை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அப்படித்தான் தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போய், அதில் கிடைத்த அனுபவத்தையே தங்களது தொழிலுக்கு விதையாக்கி, இன்று அதனை விருட்சமாக்கி இருக்கின்றனர் இந்த தொழில்முனைவோர்கள்.
யுவர்ஸ்டோரி தமிழ் 2021-இல் வெளியிட்ட அத்தகைய பெண் தொழில்முனைவர்களின் கதைகளில் சில இதோ:
மெனோபாஸ் மன அழுத்தத்தால் தொழில்முனைவோர் ஆன நீலிமா தாகுர்!
47 வயதில் மெனோபாஸ் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக, இணையத்தின் உதவியுடன் மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி எனக் கற்றுக் கொண்டவர் காரைக்காலைச் சேர்ந்த 55 வயது நீலிமா தாகூர்.
தான் தயாரித்த மூலிகை எண்ணெய்க்கு வரவேற்பு கிடைக்கவே, 'ஷைன் ஹெர்பல்ஸ்' என்ற பெயரில் ரூ. 3 லட்ச முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கி விட்டார். தற்போது கூந்தல் பராமரிப்பிற்கான எண்ணெய் வகைகளையும், சரும பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்கிறார்.
இப்படி ஒரு லிட்டர் எண்ணெயை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்ததில் தொடங்கிய இவரது வணிக பயணம் பலனடைந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே உலகளவில் 6,500 வாடிக்கையாளர்கள் என்கிற அளவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
Read more: 47 வயதில் தொழில் முனைவர் ஆகி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் நீலிமா தாகுர்!
ஃபேஸ்புக் லைவ் மூலம் பெண்கள் சம்பாதிக்க வழிகாட்டும் ‘ஃபேஷன் வித் கீர்த்தி’
லாக்டவுன் தொழில்முனைவர் தொடங்கி, பிசினஸ் மேக்னட்கள் வரை ப்ரோமோஷனுக்காக வலைவீசி தேடும் சோஷியல் மீடியா மார்கெட்டிங் கிங்தான் கீர்த்தி ஜெயகாந்த். ஃபேஸ்புக்கில் அவரது 'ஃபேஷன் வித் கீர்த்தி' ’Fashion with Kirthi' பக்கம் படு பிரபலம்.
20 வருடத்தில் ஆயிரக்கணக்கான கடைகள், லட்சக்கணக்கான பொருள்களுக்கு நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கும் கீர்த்தி, சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியும்கூட. லாக்டவுன் காலத்தில் மகளின் யோசனையால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த பேஷன் வித் கீர்த்தி பேஸ்புக் பக்கம்.
தொடங்கிய ஒரு வருடத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கீர்த்தியின் பக்கத்தை பின்தொடர்கின்றனர். மாதம் ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டுகிறார் கீர்த்தி.
Read more: ஃபேஸ்புக் லைவ் மூலம் பெண்கள் சம்பாதிக்க வழிகாட்டிய ‘ஃபேஷன் வித் கீர்த்தி’
3. காலத்தின் கட்டாயத்தால் தொழில்முனைவோர் ஆன அர்ச்சனா கார்த்திகேயன்!
‘நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. தேவையும் அதிகம் உள்ளது. ஆனால் அசலான, நம்பகமான இயற்கைத் தயாரிப்புகள் அதிகரித்துள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை’ என்ற தனது ஆதங்கத்தையே தொழிலுக்கான விதையாக மாற்றி வெற்றி பெற்றவர் கரூரைச் சேர்ந்த அர்ச்சனா கார்த்திகேயன்.
Thaai Herbals என்கிற இவரது பிராண்ட் ரசாயனங்கள் இல்லாத இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்கிறது. இதன்மூலம் 5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளார் அர்ச்சனா. குழந்தை பிறந்த 45வது நாளில் இந்தத் தொழிலை அவர் தொடங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரசாயனங்கள் இல்லாத இயற்கைப் பொருட்களுக்கான ஒரு தனிநபரின் தேடல், இன்று குறிப்பிடத்தக்க வணிகமாக மாறியுள்ளது.
Read Also: சருமத்திற்கு இதமான இயற்கைப் பொருட்கள்: ரசாயனமில்லா ப்ராண்ட் தொடங்கிய அர்ச்சனா கார்த்திகேயன்!
4. 'கறுப்பு தங்கம்' மூலம் தொழில்முனைவோரான அழகுதீரன்!
மண்புழு உரத்தின் மகிமையை நன்கு உணர்ந்த விவசாயியின் மகள்தான் அழகுதீரன். அரியலுார் மாவட்டத்தில் உள்ள கோட்டியாள் எனும் சிறு கிராமத்தில் வசிப்பவரான அழகு, எம்.காம், பி.எட் முடித்த பட்டதாரி. விவசாயிகளை இயற்கை உரம் பயன்படுத்த வைக்கவும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு சென்றிட வேண்டும் என்ற முனைப்பில் கடந்த இரு ஆண்டுகளாய் 'கறுப்பு தங்கம்' ஆன மண்புழு உரத்தினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்
சிறிய ஊரில் வசித்தாலும் பெங்களூர், மும்பை என இந்தியாவின் பெருநகரங்களுக்கு, அமேசான் மூலம் மண்புழு உரத்தினை விற்பனை செய்து வருகிறார். இந்தத் தொழில் மூலம் தொழில்முனைவோராக தனக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன், ஐந்து மகளிருக்கும் வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.
Read Also: 'கறுப்பு தங்கம்' தயாரித்து அமேசானில் விற்பனை; மாதம் ரூ.50,000 வருவாய் ஈட்டும் இல்லத்தரசி!
5. மகனுக்காக தொடங்கிய டயாப்பர் தேடலால் தொழில்முனைவோரான முபீன் பாத்திமா!
சமீபகாலமாக குழந்தைகளுக்கு டயாப்பர் போடுவது என்பது தவிர்க்க இயலாதது ஆகி விட்டது. ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் குழந்தைக்குப் டயாப்பர் போட்டுவிடுவதால் சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வளிக்கிறது முபீன் பாத்திமாவின் Bum2bum.
தனது இரண்டாவது குழந்தைக்கு டயாப்பரால் தான் சந்தித்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடி கடைசியில் தானே ஒரு தொழில்முனைவோர் ஆகிவிட்டார் முபீன். சமூகவலைதளங்கள் மூலம் தான் உருவாக்கிய மூங்கில் இழை டயாப்பர்களை மக்களின் கொண்டு சேர்த்துள்ளார்.
இந்த வணிகத்தில் 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டு வருவாயாக 6 லட்ச ரூபாய் வரை ஈட்டப்படுவதாகவும் கூறுகிறார் முபீன்.
Read Also: குழந்தையின் சருமத்தை பூப்போல் பாதுகாக்கும் ‘நவீன துணி டயாப்பர்’ –முபீன் பாத்திமாவின் தொழில் முயற்சி!
6. பாட்டியின் கைப்பக்குவதத்தை மூலதனமாக்கி வெற்றி கண்ட ஹரிணி துரைராஜ்!
ஊட்டி அருகில் உள்ள கூடலூரில் பிறந்தவர் ஹரிணி. மருத்துவராக ஆசைப்பட்டு, அது கூடாமல் போக பயோடெக்னாலஜி சேர்ந்து, அதிலும் பி.ஹெச்டி பாதியில் தடைபட, ஒரு பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார் ஹரிணி.
பாட்டியின் கைப்பக்குவத்தில் ஹரிணி தயாரித்த சமையல் பொடிகள் மற்றவர்களுக்கும் பிடித்துப் போகவே அதனையே தனக்குக் கிடைத்த புதிய வாய்ப்பாக, இன்று வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆகிவிட்டார்.
2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Vidhai Store தொடங்கிய ஹரிணி, 50-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப பொடி வகைகளை தயாரித்து தருவது இவரது சிறப்பம்சம்.
Read Also: ‘விதை என் தொழில் மட்டுமல்ல; என் தன்னம்பிக்கை விருட்சத்துக்கான விதை’ - மாம்ப்ரூனர் ஹரிணி துரைராஜ்!
7. பெண்கள் முன்னேற்றத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ’சிங்கிள் மதர்’ கிருஷ்ணகுமாரி!
மிக இளம் வயதில் கொடுமைக்கார கணவரால் திடீரென வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் கிருஷ்ணகுமாரி. குழந்தைகளோடு தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தவர், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க நினைத்து, கடுமையாக படித்து முதல் முயற்சியிலேயே அரசுப் பணியில் சேர்ந்தார்.
கூடவே தன்னைப் போல் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய பாதையை உருவாக்கித்தரும் வழிகாட்டியாகவும் மாறினார். தன் மகன்களை படிக்க வைத்து செட்டில் செய்துவிட, தன் அரசுப்பணிக்கு விஆர் ஸ் வாங்கிக் கொண்டார்.
பின்னர், SWAN பவர் பிரெய்ன் அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தையல் கலை, ஆரி கலைப்பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, மான்டிசோரி பயிற்சி, மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அபாகஸ், வேதிக் கணிதப் பயிற்சிகளை கற்றுத் தந்து வருகிறார்.
Read Also: பெண்கள் முன்னேற்றத்துக்கு வாழ்க்கையை அற்பணித்த சிங்கிள் மதர் கிருஷ்ணகுமாரி!
8. கிராமத்தில் இருந்தும் பேஷன் டிசைனராகலாம்.. நிரூபித்த சுரேகா!
தேனி கம்பம் பகுதியைச் சேர்ந்த சுரேகா, டெக்ஸ்டைல் டிசைனிங்கில் முதுகலைப்பட்டம் முடித்தவர்.
கணவரின் வேலை காரணமாக கிராமத்தில் இருக்க வேண்டிய நிலை. எதையாவது சாதிக்க வேண்டும் என நினைத்தவருக்கு இது ஒரு தடையாக இருக்கவில்லை. ஆன்லைனில் ‘Ping Pong' ’பிங் பாங்’ என்கிற பெயருடன் சிறியளவில் தொடங்கி, 4-5 செட் ஆடைகளை மட்டும் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஆன்லைனோடு நேரடியாக கடை ஒன்றையும் ஆரம்பித்து துணி வியாபாரம் செய்து வருகிறார் சுரேகா. மேக் ஓவர் சேவை உட்பட மணமகளுக்குத் தேவையான முழுமையான சேவையையும் அளித்து வருகிறார். கிராமத்தில் செயல்படும் இவரது கடைக்கு வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
Read Also : தேனியில் இருந்து ஒரு ஃபேஷன் டிசைனர்: சாதிக்கும் வேட்கையில் திரையுலகம் வரை பிரபலமான சுரேகா!
9. ஜெர்மனி பற்றி A டூ Z தகவல்களை அள்ளித் தரும் பிரியா ஸ்ரீதரின் ‘வணக்கம் ஜெர்மனி’
நாமக்கலை அடுத்த ராசிபுரத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பிரியா ஸ்ரீதர், திருமணத்திற்குப் பிறகு கணவரின் வேலை காரணமாக ஜெர்மனி சென்றார்.
தனது கணவரின் உதவியால், ஜெர்மனியின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டவர், யாருடைய உதவியும் இல்லாமல் ஜெர்மனி வருபவர்களுக்கு வழிகாட்டிட நினைத்தார். அதன் தொடர்ச்சியாக ’வணக்கம் ஜெர்மனி’ என்ற யூடியூப் சேனலை அவர் உருவாக்கினார். அதில் தொடர்ந்து ஜெர்மனி பற்றிய தகவல்களை பதிவிட்டு வந்ததன் விளைவாக இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளில் இருந்து ஜெர்மனி வருபவர்களும் கூட தன்னுடைய வீடியோக்களில் இருந்து தகவல்களை அறிந்து பாராட்டி பின்னூட்டங்கள் இடுவது தனக்கு உற்சாகத்தை தருவதாகக் கூறுகிறார்.
புதிதாக ஜெர்மனி செல்வோருக்கு A TO Z என அனைத்து விஷயங்களையும் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தருகிறார் பிரியா. வீடியோக்களாக பதிவிடுவதில் தொடங்கிய இவரது ஆர்வமானது தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்குதல் வரை தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது.
Read Also : ஜெர்மனி பற்றி A டூ Z தகவல்களை அள்ளித் தரும் பிரியா ஸ்ரீதரின் ‘வணக்கம் ஜெர்மனி’
10. மாத்தியோசித்து மாதம் ரூ.1.5லட்சம் ஈட்டும் ஐஸ்வர்யா!
'ஈகோ ப்ரெண்ட்லி + ட்ரெண்டி' எனும் பார்மூலாவில், மாற்றி யோசித்து சணல் பை தயாரிப்பில் மாதம் ரூ, 1.5 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிரசாத். பி.டெக் பட்டதாரியான இவர், திருமணத்திற்குப் பின் தொழில்முனைவோராகி இன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ரிட்டன் கிப்ட்டாக மட்டுமே தரப்படும் ஜூட் பைகளில் ஆர்ட் ஒர்க் செய்து அதன் லுக்கை மாற்றியதே அவரது வெற்றிக்கான முதல்படி. 2017ம் ஆண்டில் 2 லட்சம் முதலீட்டில் 'The Chymera Company' எனும் பெயரில் நிறுவனம் தொடங்கிய ஐஸ்வர்யா, இன்று பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்.
Read Also: ட்ரென்டி ஜூட் பேக்குகள்: மாத்தியோசித்து மாதம் ரூ.1.5லட்சம் ஈட்டும் ஐஸ்வர்யா!