Zoho புதிய சி.இ.ஓ - யார் இந்த ஷைலேஷ் குமார் தேவே?
ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஐடி நிர்வாக பிரிவான மேனேஜ் இஞ்சின் பொறியியல் துணைத்தலைவராக ஷைலேஷ் குமார் தேவை பொறுப்பு வகித்து வருகிறார்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, திடீர் முடிவாக சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இணை நிறுவனர்களில் ஒருவரான ஷைலேஷ் குமார் தேவே குழுமத்தின் புதிய சி.இஒ.ஓ ஆக பொறுப்பேற்கிறார்.
ஸ்ரீதர் வேம்பு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எனும் பொறுப்பில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
"இன்று புதிய அத்தியாயம் துவங்குகிறது. ஏஐ துறையில் அண்மைக்கால முக்கிய மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு மற்றும் மேம்பாடு பணிகளிலும், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவது ஏற்றதாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜோஹோ நிறுவன சி.இ.ஓ.பொறுப்பில் இருந்து விலகி, ஆழமான ஆய்வுகளில் கவனம் செலுத்த முதன்மை விஞ்ஞானியாக புதிய பொறுப்பு ஏற்க இருக்கிறேன்,” என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஷைலேஷ் குமார் தேவே?
ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஐடி நிர்வாக பிரிவான மேனேஜ் இஞ்சின் பொறியியல் துணைத்தலைவராக ஷைலேஷ் குமார் தேவை பொறுப்பு வகித்து வருகிறார். 1990-களில் மத்தியில் இந்நிறுவனத்தை இணை நிறுவனராக இருந்து துவக்கியவர், வலைப்பின்னல் நிர்வாகத்திற்கான நிறுவனத்தின் ரேபிட் அப்ளிகேஷன் டெவலப்மண்ட் டூலை வடிவமைத்து உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
மேனேஜ் எஞ்சின் பிரிவு, முழுமையான ஐடி மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் நிர்வாக தீர்வுகளை உலக நிறுவனங்களுக்கு அளிக்கிறது. கிளவுட் மற்றும் அலுவலக பரப்பில் இதை அணுகலாம். ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களில் 9 நிறுவனங்களுக்கு சேவை அளிக்கிறது மேஜேஜ் எஞ்சின்.
ஜோஹோவில், தேவே சாதனங்கள் வெண்டர்கள் மற்றும் மூல உற்பத்தியாளர்களுக்கு வலைப்பின்னல் நிர்வாக சேவைகளை உருவாக்கும் குழுக்களை வழிநடத்தியிருக்கிறார். பெரிய அளவில் தரவுகளை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாண்டிருக்கிறார். நிறுவனம் தழுவிய அளவில் பொறியியல் செயல்முறையை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஜோஹோவுக்கு முன்னதாக, டாடா- ஐபிஎம்-இல் ஒராண்டு வலைப்பின்னல் தொடர்பான திட்டங்களில் பங்கு வகித்திருக்கிறார். ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் என்பதோடு, மெடாலுகரியில் பிடெக் மற்றும் தொழிற்சாலைகள் நிர்வாகத்தில் எம்டெக் பட்டம் பெற்றுள்ளார்.
தேவே குஜராத்தி- தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முன்னதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
டிராக்ஸன் தகவல்படி, தேவே, சிம்பிளிபை (Simplifii) நிறுவன இயக்குனர் குழுவில் அங்கம் வகிக்கிறார். பேமெண்ட் தீர்வு நிறுவனம் சப்-கே ஏஞ்சல் நிதிச்சுற்றில் பங்கேற்றதோடு, கல்வி நுட்ப நிறுவனம் விஸ்கிட்ஸ் மீடியா விதை நிதிச்சுற்றில் பங்கேற்றிருக்கிறார்.
Edited by Induja Raghunathan