இந்திய விவசாயிகளின் சந்தை வீச்சை ஏஐ துணையோடு அதிகமாக்க உதவும் அக்ரி-டெக் ஸ்டார்ட்-அப் Mulyam!
2022 டிசம்பரில் நிறுவப்பட்ட புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், விநியோக சங்கிலியின் காரணமாக 30-35 சதவீத காய்கறிகள், பழங்கள் வீணாகும் பிரச்சனைக்கு தீர்வு காண, விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி அமைப்புகள் தொலைதூர சந்தையை அணுக வழி செய்கிறது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் யோகேஷ் கேதாரி, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை, குறிப்பாக விளைச்சலை விற்பதில் உள்ள சவால்களை நன்கறிந்திருந்தனர்.
விநியோக சங்கிலியில் உள்ள போதாமைகள் காரணமாக, 30 முதல் 35 சதவீத காய்கறிகள், கனிகள் வீணாவதை அறிந்திருந்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வேட்கையும் கொண்டிருந்தனர்.
இந்த ஊக்கம் காரணமாக 2022 டிசம்பரில், கேதாரி சகோதரர்கள், ப்ரிதேஷ் தத் மற்றும் சந்தோஷ் ஷிடோலே ஆகியோருடன் இணைந்து விவசாய விநியோக சங்கிலி சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் 'முல்யம்' (Mulyam) நிறுவனத்தை துவக்கினர். புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தை இடைவெளிக்கு தீர்வு காண முயற்சிக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் (FPOs) தொலைதூர சந்தைகளை அணுக வழி செய்கிறது.

முல்யம் நிறுவனர்களில் ஒருவரான யோகேஷ், விவசாய வர்த்தக நிர்வாகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் மற்றும் வேளாண் விநியோக சங்கிலியில் 19 ஆண்டு கால அனுபவம் மிக்கவர். மகேஷ், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர். ப்ரிதேஷ் மற்றும் சந்தோஷ், யோகேஷின் முன்னாள் கல்லூரி சகாக்ககள். இவர்கள் விவசாயத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒன்றிணைந்தனர்.
பெரும்பாலான விவசாயிகள் சிறிய நிலங்களை கொண்டுள்ளதால், விளைச்சலை திரட்டுவது பெரும் சவால் என்கிறார் யோகேஷ். எனவே, இந்த ஸ்டார்ட் அப், பெரிய அளவில் விளைப்பொருட்களை திரட்ட, தலைமை விவசாயி அல்லது எப்.பி.ஓ அமைப்புகளை நாடுகிறது.
“என் வர்த்தக வாழ்க்கையில், விவசாயிகள் சந்தைப்பற்றிய எந்த தகவலும் இல்லாமல் பொருட்களை விற்பனை தொடர் பிரச்சனை என்பதை உணர்ந்தேன். உலர் பொருட்கள் ஓரளவு தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது என்றாலும், பசுமை பொருட்கள் குறைந்த காலமும், விலை ஏற்ற இறக்கமும் கொண்டவை. வேளாண் சமூகத்தினர் தங்கள் விளைப் பொருட்களை பணமாக்க, பெரும்பாலும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் திரட்டல் சேவையாளர்களை சார்ந்திருக்கின்றனர்,” என யுவர்ஸ்டோரியிடம் யோகேஷ் கூறினார்.
சந்தை அணுகல் இடைவெளி
வேளாண் மொத்த கொள்முதலாளர்கள் அல்லது எப்.பி.ஓ வலைப்பின்னல்களிடம் இருந்து அனைத்து வகை பொருட்களையும் கொள்முதல் செய்வதில் முல்யம் கவனம் செலுத்துகிறது. இதை நிறுவனமயமாக வாங்குபவர்களுக்கு நேரடியால விற்பனை செய்கிறது மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலம் தொலைதூர சந்தையில் விற்பனை செய்கிறது. இது வரை நாடப்படாத சந்தை என்பதால், இது விவசாயிகளுக்கு நல்ல விலையும் பெற்றுத்தருகிறது.
வழக்கமான வேளாண் விநியோக சங்கிலியில் குறைந்தது மூன்று இடைத்தரகர்களை விலக்குவதாக யோகேஷ் தெரிவிக்கிறார். இதன் மூலம், நிறுவனம் சீரான, செலவு திறன் மிக்க செயல்முறையை உருவாக்கி, விவசாயிகளுக்கு நல்ல விலை பெற்றுத்தருகிறது.
மேலும், நிறுவனம் ஏஐ சார்ந்த சேவைகளை தரம் மற்றும் பொருள் கையாள்வதில் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு அவர்கள் பொருட்களுக்கான சிறந்த விலை கிடைக்கிறது. ஏஐ மூலம் தரத்தை துல்லியமாக அறிய முடிகிறது. இதற்கேற்ப வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்ற முடிகிறது.
“லாஜிஸ்டிக்ஸ், தரம் பிரிக்கும் சேவைகள், நிதி என வேளாண் விநியோக சங்கியில் அனைத்து கட்டங்களிலும் மதிப்பை கூட்ட முயற்சிக்கிறோம். இது தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பலன் தருகிறது. எங்களின் ஏஐ துணை கொண்ட முடிவெடுத்தல் அமைப்பு, விவசாயிகள் மற்றும் வாங்குபவர்கள் என இருத்தரப்பினருக்கும் உதவுகிறது. சந்தை அலசல் மற்றும் தரவுகள் சார்ந்த ஆய்வு அளித்து, லாபத்தை அதிகமாக்கி, நிச்சயமற்றத்தன்மையை குறைக்கிறோம்,” என்கிறார் யோகேஷ்.
குறிப்பிட்ட பொருட்களுக்கான பி2பி சந்தையையும் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் பசுமை விளைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய உதவுகிறது. இதுவரை 600 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் 4000 மெட்ரிக் டன் உருளை, 18000 மெட்ரிக் டன் வெங்காயம் ஆகியவற்றை நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் சேவை
44 பேர் கொண்ட அணியுடன் செயல்படும் முல்யம், இப்போது இந்தியாவில் 3000 விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது. எட்டு மாநிலங்களில் 10,000 விவசாயிகளை சென்றடைய இலக்கு கொண்டுள்ளது.
விவசாயிகளை இணைப்பதற்காக, அதன் மேலாளர்கள் தனிப்பட்ட முறையில் விவசாயிகளை சந்தித்து, ஆவணங்கள் சரி பார்த்து, சப்ளையர்களாக இணைவதற்கான மற்ற செயல்முறைகளையும் நிறைவேற்றுகின்றனர். பொருட்கள் முல்யம் தர மையங்களில் சரி பார்க்கப்பட்ட பிறகு, பேக் செய்யப்பட்டு 17 நகரங்களில் உள்ள வாங்குபவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
விவசாயிகளை இணைக்க, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பிரத்யேக வர்த்தக மேம்பாட்டு குழுவை நியமித்துள்ளது. இணைப்பதற்கு முன் இந்தக்குழு, சப்ளையர்கள் நம்பகமானவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள பின்னணி சோதனை மற்றும் சந்தை ஆய்வை மேற்கொள்கிறது. சேவையில் இணைந்த பிறகு, ஒவ்வொரு வாங்குபவர்களுக்கும், ஒரு கணக்கு மேலாளர் ஒதுக்கப்பட்டு, தரம், சீரான தன்மை மற்றும் குறித்த நேரத்தில் டெலிவரி உறுதி செய்யப்படுகிறது.
பொருட்களை வாங்கி தரம் பிரித்து பல்வேறு நகரங்களுக்கு வழங்குவதன் மூலம் குவிக் காமர்ஸ் சேவையும் அளிப்பதாக யோகேஷ் சொல்கிறார்.
வர்த்தக மாதிரி
முல்யம் விவசாயிகளிடம் இருந்து பழங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகிக்கிறது. கொள்முதல் மட்டத்தில் தனது லாபவிகிதத்தை குறைவாக வைத்திருந்தாலும், விற்பனையாளர்களிடம் விற்கும் போது கூடுதல் விகிதம் வைத்து வருவாய் ஈட்டுகிறது.
எப்பிஓக்களை அமைக்க அரசின் அழுத்தம் நிறுவனத்திற்கு நல்ல அடித்தளமாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க பல எப்பிஓக்கள் உண்டாக்கப்பட்டாலும், அவற்றுக்கு இணைப்பு வசதி இல்லை. இந்த இடத்தில் தான் முல்யம் செயல்பட்டு ஒருங்கிணைக்கிறது.
“முக்கிய விவசாய இடங்களில் பார்ட்னர்ஷிப் மற்றும் கள இருப்பு மூலம் பலவகையான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளோம். தனிப்பட்ட சேவை மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை மூலம், அனைத்து பிரிவினருக்கும் திருப்தி அளிக்கிறோம்,“ என்கிறார்.
நிறுவனம் இதுவரை ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 23 நிதியாண்டில் நிறுவனம், ரூ.35 கோடி ஜிஎம்வி பெற்ற நிலையில், இந்த நிதியாண்டில் ரூ.125 கோடி எதிர்பார்க்கிறது. இதுவரை எந்த முதலீடும் நாடவில்லை, ஆரம்ப முதலீடு பத்து லட்சம் நண்பர்கள், உறவினர்கள், சேமிப்பு மூலம் திரட்டப்பட்டது என்கிறார் யோகேஷ்.

எதிர்கால திட்டம்
2024ல் வேளாண் பண்டக சந்தை 9.07 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்ததாக டெக்சை ரிசர்ச் இந்தியா தெரிவிக்கிறது. 2030 வரை 5.15 சதவீத சீரான வளர்ச்சி பெறும், என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் இந்த பிரிவில், விக்ரோ, பைஜாக், வேகூல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. சப்ளை சந்தையில் நிறுவனம் பல சிறிய சப்ளையர்களின் போட்டியை எதிர்கொள்கிறது.
“இது போன்ற 10 நிறுவனங்கள் இருந்தால் கூட எங்களுக்கு நேரடி போட்டி இல்லை என நினைக்கும் அளவுக்கு சந்தை பெரியதாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனிப்பட்ட பலன், பூகோள இருப்பு மற்றும் வர்த்தக இடம் இருப்பதாக,“ யோகேஷ் கருதுகிறார்.
“எங்கள் செயல்பாட்டின் அளவு சாதகமாக அமைகிறது. மொத்த விற்பனை மற்றும் நிறுவனமய விற்பனையை கையாள்வதால் செயல்முறை செலவுகளை குறைத்து, கொள்முதல் செலவையும் குறைக்கிறோம் என்கிறார்.
நிறுவனம் தற்போது, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தில்லி, தெலுங்கானா, ஹரியானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடாகா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுகிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் இரண்டாம் கட்ட நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
லாஜிஸ்டிக்ஸ், வர்த்தக நிதி, தர ஆய்வு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளிக்கும் சந்தையிடத்தையும் உருவாக்கி வருகிறது. வாங்குபவர்களுக்கான செயலி வடிவத்தையும் அறிமுகம் செய்துள்ளது. விற்பனையாளர்களுக்கான வடிவம் தயாராகி வருகிறது.
முல்யம் தனது மேடையை விரிவாக்க மேலும் 40 கொள்முதல் மையங்களை அமைக்க 10 மில்லியன் டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
“தற்போதைய வர்த்தக மாதிரியில் லாபத்தை அடையும் அதே நேரத்தில் எங்கள் மேடையில் மறுமுதலீடு செய்வது எங்கள் இலக்கு. தொழில்நுட்ப மற்றும் வியூக கூட்டு வேளாண் விநியோக சங்கிலியை மாற்றி அமைக்க விரும்பும் எங்கள் நோக்கத்திற்கு உதவும்,“ என்கிறார் யோகேஷ்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்

விவசாயி, நுகர்வோர், சுற்றுசூழல் - ஆரோக்கியமான தீர்வை வழங்கும் பட்டயக் கணக்காளர் விசாலாட்சி!
Edited by Induja Raghunathan