‘பாரம்பரிய உணவுக்கு ஊக்கம்’ - சேலம் 'The Divine Foods'- இல் முதலீடு செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீபத்தில் சருமப் பராமரிப்பு ப்ராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது உணவுத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீபத்தில் சருமப் பராமரிப்பு ப்ராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது உணவுத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
அடுத்தடுத்து அதிரடி முதலீடுகள்:
கோலிவுட் டு பாலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஏற்கனவே தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ’ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் மூலம் ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்து வருகின்றனர் இந்த ஸ்டார்ட் ஜோடி.
முதலில் சாய்வாலா என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்தார் நயன்தாரா. சமீபத்தில் ‘The Lip Balm Company' என்ற ப்ராண்ட் பெயரில் உதட்டில் பூசப்படும் லிப் பாம்’களை பல ப்ளேவர்களில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக, அழகு சாதனப் பொருட்கள் துறைக்குள் நுழைந்தார் நயன்.
9Skin ப்ராண்ட்
கடந்த வாரம் டெய்சி மோர்கன் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழில்முனைவர் டெய்சி மார்கனுடன் கைக்கோர்த்து சருமப் பராமரிப்பு நிறுவனம் ‘9Skin' என்கிற புதிய ப்ராண்டை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்க உள்ளதாக நயன்தாரா அறிவித்திருந்தார்.
இதுதொடர்பான போட்டோஷூட் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகின.
The Divine Foods-இல் முதலீடு செய்யும் நயன் - விக்கி
தங்களது 9Skin ப்ரான் அறிமுகத்தை தொடர்ந்து, நேற்றைய தினம் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளன்று சேலத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான “தி டிவைன் ஃபுட்ஸ்” ( ) ஸ்டார்ட்-அப்’இல் முதலீடு செய்து இணைவதாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
”தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுவகைகளை மீட்டெடுக்க தொடர்ந்து பாடுபட்டு வரும் ‘The Divine Foods’- இல் நானும், நயன்தாராவும் முதலீட்டாளர்களாக இணைகிறோம். இனி பாரம்பரிய உணவுகளை மீட்கும் இம்முயற்சியில் நாங்களும் இணைகிறோம்,” என்று பதிவிட்டார்.
இதுகுறித்து தி டிவைன் ஃபுட்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில்,
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை "The Divine Foods" குடும்பத்திற்கு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டிலிருந்து பூர்வீக பாரம்பரிய உணவுகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் இந்த பணியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்கத் தயாராக உள்ளோம். வாடிக்கையாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் சமூகத்தின் ஆதரவிற்கு முற்றிலும் நன்றியுள்ளவர்களாகவும், மகிழ்ச்சியடைகிறோம்,” என பதிவிட்டுள்ளது.
தி டிவைன் ஃபுட்ஸ் கிருபாகரன்:
சேலம், ஆத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருபாகரன் (கிரு மைக்கப்பிள்ளை), அமெரிக்காவில் எம்பிஏ முடித்துவிட்டு, அங்கு 5 வருடங்கள் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள சூப்பர் மார்க்கெட்களில் உள்ள மஞ்சள் தூள் மிகவும் தரமாக இருப்பதை கண்டுள்ளார். அவை அனைத்தும் இந்திய தயாரிப்புகள் என்பதை அறிந்து கொண்ட கிருபாகரன் நாடு திரும்பியதும் மஞ்சள் தொழிலில் கால் பதித்தார்.
குறிப்பாக இவரது சொந்த ஊரான சேலத்தில் தான் தரமான மஞ்சள் கிடைப்பது கிருபாகரனுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது. நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த மஞ்சளை அதன் தரம், நிறம் மாறாமல் மக்களுக்கு கொடுப்பதற்காக தி டிவைன் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். மஞ்சள் தூள், பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை சேர்க்கப்பட்ட கோல்டன் மில்க், சோப், கேப்சூல்கள். பருத்திப்பால் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்தியாவில் மட்டுமின்றி US, UK, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த முதலீடு பற்றி பேசிய கிரு,
“நான் 6 மாதங்களுக்கு முன் ஏதேச்சையாக விக்னேஷ் சிவன் அவர்களை ஒரு பார்க்கிங் லாட்டில் சந்தித்தபோது எங்களின் பருத்தி பால் டப்பாவை கொடுத்து பயன்படுத்திப் பார்க்கக் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை வாங்கிக்கொண்டார். ஆனால், அதன் பின் திடீரென சில தினங்களுக்கு முன் விக்கி அவரின் இன்ஸ்டா ஸ்டோரீஸில் எங்களின் பருத்திப்பால் நன்றாகவும், குழந்தைப்பருவத்தை ஞாபகப்படுத்தியதாகவும் பதிவிட்டு எங்களை டேக் செய்திருந்தார்.”
இதைத்தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட கிருவை விக்னேஷ் சிவன் நேரில் சந்தித்து விரிவாக பேசியபிறகு, இந்த முதலீட்டு அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தார். அவர்களின் முதலீட்டை மார்க்கெட்டிங் மற்றும் தயாரிப்பின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார் கிரு.
தி டிவைன் ஃபுட்ஸ் யுவர் ஸ்டோரியின் வேகமான 100 D2C நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும், இந்நிறுவனம், கிராமப்புறத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்டார்ட்அப் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசிடமிருந்து TANSEED மானியத்தையும் வென்றுள்ளது.
இப்படிப்பட்ட தரமான பொருளை அதன் பாரம்பரியம் மாறாமல் மக்களுக்கு விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி முதலீடு செய்துளனர். இருப்பினும், முதலீடு எவ்வளவு என்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
மணக்கும் சேலத்து மஞ்சளை மருத்துவ குணம் மாறாமல் தரத்துடன் மக்களுக்கு விற்பனை செய்யும் கிருபாகரன்!