ரூ.250- 500 கோடி முதலீட்டில் டிஜிட்டல் பரப்பில் முழுவீச்சில் இறங்கும் Aakash Educations!
ஆகாஷ் டிஜிட்டல் சிறிய மற்றும் தொலைவான நகரங்களில் உள்ளவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி முதலீட்டுடன், முழுவீச்சில் ஆன்லைன் வகுப்புகளில் நுழைய இருப்பதாக அறிமுவித்துள்ளது ஆகாஷ்.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி அளிக்கும் 'ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்' தனது டிஜிட்டல் மேடையான ஆகாஷ் டிஜிட்டலை வளர்த்தெடுக்க ரூ.250 கோடி ஒதுக்கீட்டுடன், முழுவீச்சில் ஆன்லைன் வகுப்புகளில் நுழைய இருப்பதாக நிறுவன உயர் அதிகாரி கூறியுள்ளார்.
ஜனவரி மாதம், ஆகாஷ் இன்விக்டஸ் எனும் திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்தது, எனினும், இது ஐஐடி-ஜேஇ.இ வகுப்புகள் மட்டுமே கொண்டிருந்த நிலையில், ஆகாஷ் டிஜிட்டல் நிறுவனம் வழக்கமான வகுப்புகளில் வழங்கும் அனைத்து பாடத்திட்ட பயிற்சிகளையும் கொண்டிருக்கும்.
ஆகாஷ் டிஜிட்டல் அறிமுகத்தை அறிவித்த, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.தீபக் மேரோத்ரா, நிறுவனம் தனது 36 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இந்த மேடையை உருவாக்கியிருப்பதாக கூறினார்.

"தொழில்நுட்பம் மற்றும் ஏஐ-க்காக ரூ.250 முதல் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளோம். இதில் பெரும் பகுதி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. தேவை எனில் இதை அதிகரிப்போம். 150 ஆசிரியர்கள் குழுவுடன் துவங்குகிறோம். நாங்கள் நினைக்கும் அளவை எட்டியவுடன் டிஜிட்டல் மற்றும் இரண்டும் கலந்த முறையை ஆதரிக்க குறைந்தது 500 ஆசிரியர்கள் கொண்டிருப்போம்,” என்றும் அவர் கூறினார்.
நிறுவனத்தின் மொத்த வருவாயில் டிஜிட்டலின் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவு என்றாலும், அடுத்த 2-3 ஆண்டுகளில் டிஜிட்டல் பரப்பு நிறுவன வருவாயில் 25-30 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
"அதே நேரத்தில் ஆகாஷின் ஒட்டுமொத்த வருவாயும் அதிகரித்திருக்கும்," என்றும் கூறினார்.
ஆகாஷ் டிஜிட்டல் சிறிய நகரங்கள் மற்றும் தொலைவான நகரங்களில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியவர், 2ஜி இணைப்பிலும் செயல்படும் வகையில் தங்கள் மேடை உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
ஆகாஷ் டிஜிட்டலின் முன்னோட்ட வடிவம் ஒராண்டுக்கு முன் அறிமுகமானது. முன்னோட்ட காலத்தில் வழக்கமான வகுப்புகளை விட டிஜிட்டல் வகுப்புகளில் அதிக மாணவர்கள் இருந்தனர் என்கிறார் அவர்.
"சிறிய நகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள், டிஜிட்டல் வகுப்புகளை நாடும் போது, உணவு, தங்குமிடம் என பல விதங்களில் செலவை குறைக்க முடியும். எங்கள் ஸ்காலர்ஷிப் மற்றும் இதர திட்டங்களுக்கு பிறகு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான கட்டணம் வழக்கமான வகுப்புகளை விட 10 முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும்," என்றார்.
செய்தி- பிடிஐ