73லட்சம் கிலோ கோழி இறைச்சி கழிவுகளை நெசவாக்கி ஜவுளி உலகில் புரட்சி செய்யும் 'சிக்கன் மனிதன்'
ராதேஷ் அக்ரஹாரியின் "கோல்டன் ஃபெதர்ஸ்" ஸ்டார்ட்அப் நிறுவனமானது, 73 லட்சம் கிலோ கோழி இறைச்சி கழிவுகளை மறுசுழற்சி செய்து துப்பட்டா, பெட்ஷீட், மற்றும் ஹேண்ட் மெட் பேப்பர்களாக மாற்றி பெரும் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
ராதேஷ் அக்ரஹாரியின் "கோல்டன் ஃபெதர்ஸ்" ஸ்டார்ட்அப் நிறுவனமானது, 73 லட்சம் கிலோ கோழி இறைச்சி கழிவுகளை மறுசுழற்சி செய்து துப்பட்டா, பெட்ஷீட், மற்றும் ஹேண்ட் மெட் பேப்பர்களாக மாற்றி பெரும் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற இந்திய கைவினை மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் படித்த ராதேஷ் அக்ரஹாரி, ஒருநாள், ஒரு சிறிய பையை எடுத்துக்கொண்டு அவரது வகுப்பிற்குச் சென்றார். பையை திறந்தவுடன் சக மாணவர்கள் வாந்தி எடுக்க, வகுப்பறையை விட்டே வெளியேற்றப்பட்டார்.
மாணவர்களின் வாந்திக்கு காரணம் பையில் வீசிய துர்நாற்றம். மாணவர்கள் மூக்கை மூடினாலும், ஆசிரியர்கள் ராதேஷ் மறுசுழ்சி ஆய்வுக்காக கொண்டு வந்த கழிவுப்பொருளை வரவேற்றனர். ஏனெனில், அவர் எடுத்துவந்தது ஆண்டுக்கு 4.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தியாகும் கோழி இறைச்சி கழிவுகள்.
அதிகம் பேசப்படாமலும், சுற்றுசூழலுக்கு அதீத தீங்கினை விளைவிக்கும் அவற்றை மறுசுழற்சி செய்ய எண்ணிய அவரது சிந்தனையை ஆசிரியர் குழு பாராட்டியது. ஆனால், அதை முறையாக மறுசுழற்சி செய்து புது தயாரிப்பினை உருவாக்க அவருக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது.
இன்று, ராதேஷ், கோழி இறைச்சிக் கழிவுகளை 'கம்பளி போன்ற' நார் மற்றும் கையால் செய்யப்பட்ட காகிதமாக மாற்றும் 'கோல்டன் ஃபெதர்ஸ்' நிறுவனர் ஆவார். இந்த கழிவுகளை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, ஸ்டார்ட்அப் ஆனது, சால்வைகள், குல்ட்கள், ஸ்டோல்ஸ், டைரிகள், மீன் தீவனம் மற்றும் உரம் ஆகியவற்றை தயாரிக்கின்றது.
ஜெய்ப்பூர் மற்றும் புனேவில் தயாரிப்புக் கூடங்களை கொண்டுள்ள இந்நிறுவனம், B2B வணிகத்தில் தயாரிப்புகளை விற்றுவருகிறது இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 1.5 கோடி வருவாயும் ஈட்டுகிறது. மேலும், இதுவரை சுற்றுசூழலை நாசம் செய்யவிருந்த 73 லட்சம் கிலோ கோழி இறைச்சிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அவரது பணிக்காக, ராதேஷ் குறைந்தது 25 தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் ஜெர்மன் வடிவமைப்பு விருது, லெக்ஸஸ் வடிவமைப்பு விருது மற்றும் ஸ்வச்சதா ஸ்டார்ட்அப் விருது ஆகியவை அடங்கும்.
படிப்பு செலவுகளுக்காக, விடுமுறை தினங்களில் கிடைக்கும் பணிகளை செய்வேன். அப்படி, ஒரு சமயம் 3 நாள் வேலையாக ஆக்ராவிற்கு சென்றிருந்தேன். விடுமுறை முடிந்து கல்லுாரிக்கும் வரும் போது பல வகையான கழிவு பொருட்களை ஆாய்ச்சிக்காக எடுத்துவருமாறு கூறியிருந்தனர். வேலை முடிந்து தாமதாக தான் ஜெய்ப்பூருக்கு வர முடிந்தது. அதற்குள், என் வகுப்பு தோழர்கள் பிளாஸ்டிக் முதல் தெர்மாகோல் வரை அனைத்து கழிவு பொருள்களையும் தேர்ந்தெடுத்து விட்டு, எனக்கு எதையும் மிச்சம் வைக்கவில்லை. எந்த கழிவுப் பொருட்களும் கொண்டு செல்லாததால், வகுப்பறையை விட்டு வெளியேற்றி விட்டனர்.
அப்போதிருந்த, சோர்வான மனநிலையை பிடித்த உணவை சாப்பிட்டு சமாதானம் செய்யலாம் என்ற முடிவில், சிக்கன் வாங்க கடைக்கு சென்றேன்.
"1 கிலோ சிக்கன் பேக் செய்யச் சொன்னேன். ஆனால், பாக்கெட்டின் எடை 650 கிராம் மட்டுமே இருந்தது. கடைக்காரரோ ஒரு கிலோவிற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டார். கறி எடை போக மீதி 350 கிராமும் கழிவுகள் என்றார். அதையும் தனியாக பேக் செய்யும்படி சொன்னேன். மறுநாள், இந்த பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றேன். பையைத் திறக்க, அது துர்நாற்றம் வீச, வகுப்பிலிருந்தவர்கள் வாந்தி எடுத்து விட்டனர். பிறகென்ன மீண்டும் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டேன்," என்று கூறி சிரித்தாலும், அவரது ஆய்விற்கு பல ஆண்டுகளை இழந்துள்ளார்.
"இதற்கிடையில், ட்ரைப்ஸ் இந்தியா போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினேன். பணியாற்றி கொண்டே எனது ஆராய்ச்சிப் பணிகளிலிலும் கவனம் செலுத்தினேன். இது எல்லாம் ஒரு கல்லூரி திட்டத்திலிருந்து தொடங்கியது. இந்த திட்டத்தை கையிலெடுத்தவுடன், இந்த கழிவுகள் பற்றிய தரவு பற்றாக்குறை இருப்பதையும், மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி மட்டுமே பேசுவதையும் கண்டேன். எனவே, கசாப்புக் கழிவுகள் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்பினேன்," என்றார்.
நெகிழியைவிட கொடூரமானது
கோழி இறைச்சி கழிவுகள்...
உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரைச் சேர்ந்த ராதேஷ், மருத்துவ குடும்ப பின்னணியை கொண்டவர். அதனாலே, அவரும் மருத்துவ துறையிலே இணைவார் என்று குடும்பத்தார் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், ராதேஷிற்கு வடிவமைப்பு மற்றும் கைவினைகளில் மீதே ஆர்வம். அதனால், மொஹாலியில் உள்ள நார்த் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (என்ஐஐஎஃப்டி) ஜவுளி வடிவமைப்பில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய கைவினைக் கழகத்தில் சேர்ந்தார்.
"பொதுவாக இக்கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்கள் வசதிபடைத்த மற்றும் உயர்ந்த பின்னணியில் இருந்து வருவார்கள். டிசைன் மற்றும் ஃபேஷன் பற்றி தெரிந்துகொள்ள வருவார்கள். எனது எண்ணங்கள் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை. நான் அவர்களைப் போல் இல்லை. ஆராய்ச்சிக்காக நாள் முழுவதும் இறைச்சிக் கழிவுகளைக் கையாண்டு கொண்டு இருந்ததால், என்மீதும் துர்நாற்றம் வீசியது. மக்கள் என் அருகிலே நிற்க மாட்டார்கள். நான் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன்," என்றார்.
இருந்தபோதிலும், ராதேஷ் அவரது ஆராய்ச்சிப் பணிகளிலிருந்து பின்வாங்கவில்லை. அச்சமயங்களில் தான் அவருக்குப் பிரச்சினையின் தீவிரம் இன்னும் ஆழமாக புரிந்தததாக தெரிவித்தார். "கோழி இறைச்சிக் கழிவுகளானது உலகளவில் மூன்றாவது பெரிய ஈரக் கழிவுப் பிரச்சனையாகும். இது நதி மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த கழிவுகள் குறித்த தரவுகள் சரிவர இல்லை. ஆனால் கங்கை மற்றும் யமுனை போன்ற நதிகளில் உள்ள மொத்த கழிவுகளில் சுமார் 32.17 சதவீதம் கசாப்புக் கழிவுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என்றார்.
சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் (CEE) அறிக்கையின்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது பெரிய பிராய்லர் இறைச்சி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. ஆண்டுக்கு 4.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், "கோழிக் கழிவுகளுக்கு முறையான மேலாண்மை இல்லாததால், அவற்றின்மீது அவசர கவனம் தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"அகமதாபாத் நகரில் மட்டும் ஒரு நாளுக்கு சுமார் 20 டன்கள் கோழி கழிவுகள் உற்பத்தியாகிறது என்றும் மதிப்பிட்டுள்ளது. இந்த கழிவுகளும், சில இறைச்சி பாகங்களும் மீன் தீவனம் மற்றும் உரம் தயாரிப்பிற்காக இடைத்தரகர்களுக்கு விற்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான கழிவுகள் நகராட்சி குப்பைத் தளங்களில் சுத்திகரிக்கப்படாமல் அப்புறப்படுத்தப்படுகிறது. இது சட்டத்திற்கு எதிரானது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்துகிறது," என்றார்.
நதிகளை தாயாக வணங்கும் நாட்டில் தான், குடல், ரத்தம், தோல், உள் செல்கள், இறகுகள் அடங்கிய கசாப்புக் கழிவுகளும் கலக்கப்படுகிறது. அவை நதிகளை மாசுபடுத்தி, தொற்று நோய்களையும் பரப்புகிறது என்றார்.
"மாட்டு இறைச்சியில் கழிவாகும் அதன் தோல், லெதர் தயாரிப்பிலும் செல்லப்பிராணி உணவு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை, கோழி இறைச்சிக் கழிவுகளோ எரிக்கப்படுகின்றன அல்லது நிலப்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் கழிவுகளாக கொட்டப்படுகின்றன."
எரிப்பு செயல்முறை அதிக அளவு கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது. இன்று, உலகமே பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக உழைத்து வருகிறது. ஆனால், கோழி இறைச்சிக் கழிவுகள் பற்றி பேசுவது கூட இல்லை. நீர்நிலைகளை சுத்தப்படுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக, அடிப்படை காரணங்களைத் தீர்க்க நாம் உண்மையில் அடிமட்டத்திலிருந்து வேலை செய்ய வேண்டும், என்றார்.
துப்பட்டா, பெட்ஷீட், காகிதங்களாகும் கோழி இறைச்சி கழிவுகள்...
அவரது நெடுங்கால நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் 2019 ஆம் ஆண்டு ராதேஷ் அவரது நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் செயல்பாட்டை பற்றி அவர் விளக்குகையில்,
"முதலில், நாங்கள் இறைச்சிக் கூடங்களில் இருந்து கழிவுகளை சேகரித்து, பின்னர் 100 டிகிரி நீராவி செயல்முறையைப் பயன்படுத்தி, பல்வேறு புழுக்களைக் கொல்லும் வகையில் சுகாதாரமான முறையில் கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்துகிறோம். எங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இயற்கையான பொருட்களை கொண்டு கழிவுகளை பஷ்மினா போன்ற கம்பளி போன்ற நார்களாக மாற்றுகிறோம்.
"ஒரு கோழி ஆனது மற்ற பறவைகளைப் போன்ற இறகுகளைக் கொண்டுள்ளது. இறகுகள் எடை குறைந்தவை. அதை பயன்படுத்தி பருத்தி, சணல், கம்பளி மற்றும் பட்டு போன்ற இயற்கையான நார்களை உருவாக்க முடியும். இந்த கம்பளி ஃபைபர் மென்மையானது, சூடு மற்றும் நீடித்தது," என்று அவர் கூறினார்.
இதற்காக, ராஜஸ்தானின் 1,200 பழங்குடியினப் பெண்களுக்கு, கழிவுகளை நார்களாக நெசவு செய்து சுழற்றும் பயிற்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நூற்புக்கு ஏற்பற்ற இறகுகள் கையால் செய்யப்பட்ட காகிதங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன அல்லது குல்ட்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் தலையணைகளுக்கு நிரப்பிகளாக மாற்றப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில், கோழி இறைச்சிக் கழிவுகளின் துணைப்பொருளானது உரமாகவும், மீன் தீவனமாகவும் மாற்றப்படுகிறது.
"தனிப்பட்ட முறையில், வடிவமைப்பாளராக இருந்து ஒரு கண்டுபிடிப்பாளராக மாறிய இந்த பயணம் எனக்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஏனெனில் நான் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்யவே பாடுபட்டேன். அதற்காக பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் தற்போது பெற்றுள்ளேன். நாங்கள் ஒரு சிறிய அளவிலே வேலை செய்கிறோம், ஆனால் இந்த பரந்த இந்தியா முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.
"ஆனால், நிலையான மறுசுழற்சி மாதிரியை நிறுவுவதற்கும் எங்கள் பணியை மேலும் மேற்கொள்வதற்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இதன்மூலம் இந்த கழிவுகளை பெரிய அளவில் திசைதிருப்ப முடியும். கோழி இறைச்சிக் கழிவுகள் நீர்நிலைகள் அல்லது நிலப்பரப்புகளில் வீசப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் கொள்கைகளை வடிவமைப்பதுடன், பெண் தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தால், நாங்கள் தொடர்ந்து பணியாற்ற உதவியாக இருக்கும்," என்று கூறி முடித்தார்.
தகவல் மற்றும் பட உதவி : தி பெட்டர் இந்தியா
சிப்ஸ் பாக்கெட் கவர்களை மறுசுழற்சி செய்து ‘கூலிங் கிளாஸ்’ தயாரிக்கும் கலக்கல் ஸ்டார்ட் அப்!