இந்தியாவில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிக்க உதவும் சென்னை ஸ்டார்ட் அப் Welfund
சென்னையைச் சேர்ந்த காலநிலை மாற்ற தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் வெல்பண்ட் சூரிய மின் கூரை வசதிக்கான நிதி வசதியை நுகர்போர் எளிதாக அணுக உதவும் டிஜிட்டல் சந்தை மாதிரியை உருவாக்கி வருகிறது.
உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் 2021ல் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. 2014 மார்ச்சில் நாட்டின் சூரிய மின்வசதி கொள்ளலவு 2.63 GW ஆக இருந்து, 2021 இறுதியில் 49.3 GW ஆக உயர்ந்துள்ளதாக இந்தியா பிராண்ட் ஈக்விட்டி (IBEF) பவுண்டேஷன் தெரிவிக்கிறது.
பெரிய அளவிலான சூரிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், சிறிய வர்த்தக மற்றும் வீடுகளுக்கான சூரிய மின் வசதியில், அமைப்பு, நிதி வசதி போன்ற சிக்கல்கள் இருக்கின்றன.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட ’வெல்பண்ட்’ (
) கூரைகளில் சூரிய மின் திட்டங்களை அமைக்க, நிதி நிறுவனங்கள், பொறியியல், கொள்முதல், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றாக கொண்டு வரும் டிஜிட்டல் சந்தையை உருவாக்கியுள்ளது.இந்த காலநிலை மாற்ற நுட்ப ஸ்டார்ட் அப், இந்த ஆண்டு மே மாதம், ஐஐஎம் இந்தூர் பட்டதாரி சங்கர் சிவனால் துவக்கப்பட்டது.
இந்நிறுவனம் தற்போது இந்திய அளவில், ரூ.765 கோடி மதிப்புள்ள 159 MW கூரை சூரிய மின்வசதி திட்டங்களை செயலாக்கம் செய்து வருகிறது.
இந்த ஸ்டார்ட் அப், ரெபெக்ஸ் கேபிடலிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது. வெல்பண்ட் நிறுவனத்திற்கு முன், சங்கர் அமெரிக்க சூரிய மின்சக்தி நிறுவனம் சன் எடிசனில் முக்கியப் பங்காற்றி வந்தார்.
சூரிய மின்சக்தி துறையில் கிடைத்த நேரடி அனுபவம் காரணமாக, செலவை குறைத்து, பசுமை சுற்றுச்சூழலுக்கு உதவும், சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதில் சிறிய வர்த்தகங்கள் மற்றும் வீடுகள் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை என்பதை சங்கர் உணர்ந்தார்.
சவால்கள்
மாநில அரசுகளின் சாதகமான கொள்கைகள் இல்லாதது மற்றும் இத்திட்டங்களுக்கான எளிய நிதி வசதி இல்லாதது ஆகியவை சூரிய மின்சக்தி பெரிய அளவில் பரவலாகாமல் இருக்க முக்கியக் காரணங்கள் என சங்கர் கருதுகிறார்.
“குடியிருப்புகள் அல்லது சிறிய வர்த்தகங்களுக்கான சூரிய மின்சக்தி கடன் 18-20 சதவீதமாக இருக்கிறது. இது வீட்டுக்கடனை விட அதிகம்,” என்கிறார்.
சூரிய மின் சக்தி கடன்களை தள்ளுபடி செய்யும் வாய்ப்பு நிதி நிறுவனங்களுக்கு இல்லாததால், அவை ஈட்டுறுதி இல்லாத கடனாக அமைந்து அதிக வட்டி கொண்டுள்ளன. மிகச்சில நிதி நிறுவனங்களே சூரிய மின்சக்தி கடன் அளிக்கின்றன. அவற்றுக்கான காலம் பொதுவாக நான்கு ஆண்டுகளாக இருக்கின்றன.
அதே நேரத்தில் சூரிய மின்சக்தி நிறுவனங்கள், சிறிய அளவிலான திட்டங்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை. இதன் பொருளாதாரம் சாதகமாக அமைவதில்லை.
சந்தை மாதிரி
இந்த சவால்களை கருத்தில் கொண்டு வெல்பண்ட், அனைத்து பங்குதாரர்களையும் இணைக்கும் வகையில் சந்தை மாதிரியை உருவாக்கியுள்ளது.
குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் சிறு வர்த்தகர்கள், தங்கள் தேவையை இந்த தளத்தில் தெரிவிக்கலாம். பின்னர், வெல்பண்ட் நிறுவனம், வீட்டுக்கடனுக்கு நிகரான வட்டி விகிதத்தில் கடன் வசதி வாய்ப்புகளை அளிக்கிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இந்த தளத்தின் வாயிலாக பெரிய அளவில் நுகர்வோர் பரப்பை அடைகின்றன.
இந்த சூரிய மின்சக்தி திட்டங்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் சூரிய மின்சக்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகின்றன.
“வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வடிவில் ஈர்த்து, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு நிதி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்க உதவுகிறோம்” என்கிறார் சங்கர்.
ஐந்து நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலையில் நிறுவனம் உள்ளது. தற்போது 85 கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறது. 200 சூரிய மின்சக்தி நிறுவனங்கள் வலைப்பின்னலை கொண்டுள்ளது. 48 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான பரிமாரிப்பு சேவையை நிறுவனம் அளிக்கிறது. மேலும், செயல்படாத அமைப்புகளை மீண்டும் வாங்கிக் கொள்ளும் வாக்குறுதியையும் அளிக்கிறது. தற்போது இபிசி வாயிலாக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது.
“வெல்பண்ட் நிறுவனம் எங்கள் பங்குதாரராக இருப்பதால், விற்பனைக்கான கோரிக்கை மாற்றம் 1.5% ல் இருந்து 5%. ஆக உயர்ந்துள்ளது. நிறுவனம் எளிய கடன் வசதி வாய்ப்பை அளிப்பதால் விற்பனையில் நம்பிக்கை உள்ளது,” என்கிறார் ஸ்மார்ட் சோலார் ஹோம்ஸ் நிர்வாக பாட்னர் ஆலன் பாபு.
நிறுவனம் தற்போது ஐந்து பேர் குழுவைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றும், மற்ற நிறுவனங்கள் வர்த்தக கடன் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
எதிர்காலத் திட்டம்
ஒவ்வொரு கடனும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பிறகு, சேவை கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் பெறும் வர்த்தக மாதிரியை நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்னமும் வருவாய் ஈட்டவில்லை.
“இத்தகைய நீடித்த நிலையான வசதிக்கான அணுகலை அளிப்பதே எங்கள் நோக்கம். என்று கூறும் சங்கர், விவசாயத் துறைக்கான சூரிய மின்சக்தி பம்ப் பிரிவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகக் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்
சூரியசக்தி மின் விளக்குகளை வழங்கி இந்திய கிராமப்புறங்களுக்கு வெளிச்சமூட்டும் பேராசிரியர்!
Edited by Induja Raghunathan