'ஆளில்லா நூலகம்'- 68 வயது மகேந்திர குமார் சென்னையில் துவங்கிய அரிய முயற்சி!
2015 ஆம் ஆண்டு கேஆர் மகேந்திர குமார் ரீட் அண்ட் ரிட்டர்ன் இலவச நூலகத்தை Read and Return Free Library (RFL) துவங்கினார். இதன் தனித்துவம் என்னவென்றால், இதை கவனிக்க ஒரு நூலகர் கிடையாது. இருபத்திநான்கு மணிநேரமும் இந்த நூலகம் திறந்திருக்கும். இதை போன்று இந்தியா முழுவதும் 63 நூலகங்கள் உள்ளன.

ஒவ்வொரு நகரத்திலும் கண்டிப்பாக இரண்டு நூலகங்கள் இருக்கின்றன. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் சில தகவல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் ஒரு நூலகம் இருந்தால்?
அனைத்து வீதிகளிலும் ஒரு நூலகம். அங்கு அனைத்து புத்தகங்களும் இலவசம். இதுவே கேஆர் மகேந்திரன் கனவாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு இந்த எண்ணம் மனதில் தோன்ற, தனது 68 வயதில் ரீட் அண்ட் ரிட்டர்ன் இலவச நூலகத்தை, சென்னையில் தனது இல்லத்தில் துவங்கியுள்ளார்.
இலவச நூலகம் :
அதிகமான படிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை ஊழியர் மகேந்திர குமார் சமூகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக வழக்கத்திற்கு மாறான ஒரு நூலகம் பிறக்க இதுவே காரணம். இதில் இணைவதற்கு கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து புத்தகம் எடுத்துக்கொண்டு செல்லலாம்.
சென்னை திருமுல்லைவாயிலில் சிமென்ட் கடை ஒன்றில் 20 புத்தகங்களோடு 2015 ஏப்ரல் மாதம் இவர் தனது சேவையை துவங்கினர். அந்த கடை முதலாளியோடு மேஜையை பகிர்ந்து கொண்டார்.
ஆனால் விரைவிலேயே சிமென்ட் கடை நூலகத்திற்கு சரியான இடம் அல்ல என்பதை உணர்ந்து, ஒரு ஸ்டீல் அலமாரி வாங்கி அதை தனது இல்லத்திற்கு வெளியே வைத்து அதில் புத்தகங்களை வைத்தார். 30 நூல்கள் கொண்ட இந்த நூலகத்தை துவங்க அந்த பகுதியின் கவுன்சிலர் அழைக்கப்பட்டார்.

"இந்த நூலகத்தை துவங்கியதற்கான காரணம் அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதே. இதன் மூலம் மக்களை மேலும் பொறுப்புடையவர்களாக மாற்ற முயலுகின்றேன். மக்களுக்கு கற்றுத்தர நான் இதனை செய்யவில்லை. செலவு இன்றி மக்களுக்கு புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்கின்றேன்,” என்கிறார் குமார்.
இந்த நூலகத்தில் நூலகர் இல்லை என்பதோடு சேர்த்து, ஒரு புத்தகம் எடுத்தால் அதை வைத்து விட்டு மறுபுத்தகம் எடுக்கவேண்டும் என்ற விதியும் இல்லை. ஒரு நேரத்தில் ஒருவர் எடுக்கும் புத்தகங்களுக்கு எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லை. அதனை எப்போது வேண்டுமானாலும் அவர் திருப்பி வைக்கலாம்.
வாய் வார்த்தையாக பரவுதல் :
இந்த நூலகம் பற்றிய செய்தி வாய்வர்தையாக பல இடங்களுக்கு பரவியது. பலரும் இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் இலவசமாக கொடுக்க துவங்கினர். மேலும் சிலர், தங்கள் இல்லத்திலேயே இந்த நூலகத்தை நடத்த விருப்பப்பட்டனர்.
இந்த யோசனையால் ஈர்க்கப்பட்ட மகேந்திர குமாரின் நண்பர் கேப்டன் வெங்கடரமணன் தீநகரில் தன்னுடைய பகுதியில் இதே போன்ற ஒரு நூலகத்தை துவக்கினார்.

இந்த யோசனை பல இடங்களுக்கு பரவியது. நகரங்கள் தாண்டியும் பரவியது. முதியோர் இல்லம், அடுக்கு மாடி குடியிருப்புகள் என பல இடங்களில் இந்த நூலகம் துவங்கப்பட்டது.
“நூலகத்தை நடத்துபவர் வெளியூர் சென்றிருந்தால், ஒருவர் புத்தகம் எடுக்க அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும். நூலகத்தை பார்த்துக்கொள்ள ஒருவரை நியமிப்பது சாத்தியமில்லை. அந்த மாதிரி தருணங்களில் அருகில் இருக்கும் வேறு ஒரு ஆர்எப்எல் நூலகத்திற்கு சென்று புத்தகம் பெறலாம். விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும்” என்கிறார் மகேந்திர குமார்.
வைக்கப்படுள்ள இடத்தில் வேறுபாடுகள் இருந்தாலும், நடத்தப்படும் விதத்தில் அனைத்து ஆர்எப்எல் நூலகங்கள் ஒன்றாகத் தான் உள்ளன.
மாணவர்களுக்கான இடம் :
ஆர்எப்எல் இணையதளத்தையும் மகேந்திரன் நடத்தி வருகின்றார். எங்கு இப்படி ஒரு நூலகம் திறக்க விரும்பும் ஒருவர், அவரை தொடர்பு கொண்டு பேசலாம் அல்லது அதற்கான வழிமுறைகளை அந்த தளத்தில் காணலாம். மேலும் தேவைப்படும் புத்தகங்களை மாணவர்கள் அந்த தளத்தில் கோரிக்கையாக வைக்கலாம். நகரவாரியாக என்ன என்ன புத்தகங்கள் உள்ளன என்பதையும் அந்த தளத்தில் காணலாம். புத்தகம் கொடுக்க விரும்புவோரும் தங்களிடம் உள்ள புத்தக பட்டியலை தளத்தில் வெளியிட்டு தேவைப்படும் மாணவர்களுக்கு கொடுக்கலாம். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் புத்தகம் கிடைக்க வேண்டும் என்று இந்த திட்டம் செயல்படுகிறது.
“20 புத்தகங்களோடு துவங்கி, தற்போது அவரிடம் 10000 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவரது நலம்விரும்பிகள், நண்பர்கள் கொடுத்ததாகும்."
பல்வேறு தலைப்புகளில் இந்த நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன. தத்துவம், பொது அறிவு, அறிவியல், மதம், கதைகள் மற்றும் சுய முன்னேற்றம் என வேண்டிய அனைத்து தலைப்புகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழ் இருமொழிகளிலும் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 63 இடங்களில் இந்த நூலகம் அமைந்துள்ளது. மேலும் பெங்களுருமற்றும் போபால் நகரங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தர விரும்பும் புத்தகங்களை கொடுக்க ஆர்எப்எல் ட்ராப் பாயிண்ட்ஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
“எனது மனைவியின் ஆதரவு காரணமாகத்தான் இந்த முயற்சி சாத்தியமானது. நான் செய்ததிலேயே சிறப்பான விஷயம் இதுதான் என்று அவள் கூறுகிறாள்,” என முடித்துகொண்டார் மகேந்திரன்.
Read and Return free Library (RFL) முகநூல் பக்கம்
ஆங்கில கட்டுரையாளர்: ஹேமா வைஷ்ணவி | தமிழில்: கெளதம் தவமணி