ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்கள், ஒரே நாளில் திருமணம்: மனம் தளராத சிங்கிள் மதரின் கதை!
இரட்டையர்களுக்கு திருமணம் நடந்தாலே அதை அதிசயமாக, ஆச்சர்யமாக பார்ப்போம். ஆனால் கேரளாவிலோ ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் செய்து அழகு பார்க்க இருக்கிறார் அவர்களது அம்மா.
வீட்டைக் கட்டிப் பார்... திருமணம் செய்து பார்... என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கடன் கூவி கூவி தருவதால், வீட்டைக்கூட சுலபமாகக் கட்டிவிடலாம் போல, திருமணம் தான் கஷ்டம். நல்ல வரனாகப் பார்த்து, குடும்பத்தைப் பற்றி விசாரித்து, திருமண ஏற்பாடுகளை முடித்து, சொந்தபந்தங்களை அழைத்து, திருமணம் எனும் திருவிழாவை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
ஒரு திருமணத்திற்கே இப்படி என்றால், நான்கு பெண்களின் திருமணத்தை கணவரில்லாமல் தனி மனுஷியாக நடத்தப் போகும் இந்தக் கேரளப் பெண்மணியை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அதுவும் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த நான்கு பெண்களும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் என்பது தான் கூடுதல் சிறப்பு.
திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி. அவரது கணவர் பெயர் பிரேம்குமார். இந்தத் தம்பதிக்கு கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அதில், நான்கு பெண் குழந்தைகள், ஒன்று ஆண் குழந்தை. ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது தான் அப்போது கேரளாவில் தலைப்புச் செய்தியாக இருந்தது.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிடப்பட்டது. கிடைத்த வருமானத்தில் தங்களது ஐந்து குழந்தைகளையும் பஞ்சரத்தினங்களாக குறையில்லாமல் வளர்த்து வந்தனர் இத்தம்பதியினர். ரமாதேவியின் வீட்டைக்கூட பஞ்சரத்தின வீடு என்றுதான் அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.
சிறுவியாபாரியான பிரேம்குமாருக்கு தொழில் முடக்கத்தால் கடன் சுமை ஏற்பட்டது. அதோடு ரமாதேவிக்கும் இதயப் பிரச்சினை ஏற்பட்டதால், ஐந்து குழந்தைகளை வளர்க்க மற்றும் மனைவியின் சிகிச்சைக்காக அவருக்கு அதிகப் பணத்தேவை ஏற்பட்டது. இதனால் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளான பிரேம்குமார், நோயாளி மனைவியையும், தனது ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு, 2005ம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் திடீர் தற்கொலையால் நிலைகுலைந்து போனார் ரமாதேவி. பத்து வயதேயான தனது ஐந்து குழந்தைகளுடன் தனித்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ரமாதேவி. ஆனாலும் மனம் தளராத அவர், ஐந்து குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்து ஆளாக்கினார். இருகோடுகள் தத்துவத்தில் தனது இதயப் பிரச்சினையை மறந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க இரவு பகலாக கடுமையாக உழைத்தார்.
தற்போது அந்த ஐந்து பேருக்கும் 24 வயது ஆகிறது. நான்கு பெண்களில் ஒருவர் டிசைனராகவும், இருவர் அனஸ்தீசியா டெக்னீஷியன்களாகவும் இன்னொருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். மகன் ஐடி ஊழியராக உள்ளார்.
திருமண வயதை எட்டி விட்டதால் தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ரமா. அனைவருக்கும் ஒரே வயது என்பதால் ஒருவரை விட்டு விட்டு மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்க அவருக்கு மனது வரவில்லை. எனவே ஒரே நேரத்தில் நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுத்தார்.
ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதென்றாலே அதில் ஆயிரம் விசயங்கள் யோசிக்க வேண்டி இருக்கும். அப்படி இருக்கையில் நான்கு பெண்களுக்கென்றால் சும்மாவா? ஒரு வழியாக சல்லடைப் போட்டுத் தேடி தனித்தனியாக அனைத்து மகள்களுக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்வு செய்தார்.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி 4 பேருக்கும் 4 மாப்பிள்ளைகளுடன் ஒரே நாளில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களது திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து இந்த நான்கு பெண்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற உள்ளது.
நான்கு மகள்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கப்போவதை நினைத்து ஒருபுறம் ரமாதேவி சந்தோசப்பட்டாலும், மறுபுறம் ஒரே நாளில் நான்கு மகள்களும் இத்தனை நாள் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்துவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு செல்லவிருப்பதும் ரமாதேவிக்கு வருத்தமாகத் தான் இருக்கிறதாம்.
"எந்தப் பண்டிகையாக இருந்தாலும் நாங்கள் நால்வரும் ஒரே நிறத்தில், ஒரே மாடல் ஆடைதான் அணிவோம். திருமணத்தின்போதும் ஒரேவித ஆடையில், ஒன்றாக மணமேடை ஏற வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை,'' என ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் அந்த நான்கு பெண்களும்.
சகோதரிகளின் திருமணம் முடிவடைந்த பிறகு அவர்களின் ஒரே சகோதரர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருக்கிறாராம். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கும் திருமணம் செய்து வைக்க ரமாதேவி திட்டமிட்டிருக்கிறார்.
ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறப்பது என்பதே உலகில் எப்போதாவது நடைபெறும் ஒரு அரிய நிகழ்வு தான். அப்படி இருக்கையில், ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்களுக்கு ஒரே நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அந்த சகோதரிகளின் திருமணத்தைப் பார்க்க உறவினர்களும், நண்பர்களும் ஆர்வமாக உள்ளனர்.