அடையாற்றில் தத்தளித்த 3 பேரை மீட்பு - வீரதீர செயலுக்கு அண்ணா பதக்கத்தை வென்ற வெற்றிவேல்!
76வது குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை சென்னையை சேர்ந்த தீயணைப்பு துறை வீரர் க.வெற்றிவேலுக்கு வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ரவி ஜனவரி 26 அன்று தேசியக்கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகிறது. இந்த பக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
அதன்படி, இன்றைய நிகழ்ச்சியில் வீரதீர செயலுக்கான பதக்கம், மதநல்லிணக்க விருது, நெல் உற்பத்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. காவல்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அது போல், சிறந்த காவல் நிலையங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த தீயணைப்பு துறை வீரர் கே.வெற்றிவேல் என்பவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
அண்ணா பதக்கம் வென்ற வெற்றிவேல்
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேல், கடந்தாண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி, அடையாறில் உயிருக்கு போராடிய மூன்று பேரைக் காப்பாற்றியதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
அன்றைய தினம், மாலை 5.40 மணி அளவில் அடையாறு எம்.ஜி.எம். மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் 3 பேர் உயிருக்குப் போராடி வருவதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக முன்னணி தீயணைப்பாளர் வெற்றிவேல் தலைமையில் மெரினா மீட்புக் குழுவினர், அவசர கால மீட்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சம்பவ இடத்தை அடைந்ததும், வெற்றிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஆற்றில் இறங்கி ஆற்றில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்டனர். வெற்றிவேலின் துணிச்சலான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது திறமையான மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 42), குமார் (22), செல்வி (43) ஆகியோர் காப்பாற்றப்பட்டனர்.
தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வெற்றிவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது துணிச்சலான செயலை பாராட்டி கே.வெற்றிவேலுக்கு 2024-ம் ஆண்டிற்கான வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை இன்று வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.
மதநல்லிணக்க பதக்கம்
இன்றைய விழாவில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு மத நல்லிணக்க பதக்கமும், நாராயணசாமி நெல் உற்பத்தி திறன் விருது தேனியைச் சேர்ந்த விவசாயி முருகவேலுக்கும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் மகாமார்க்ஸ், விழுப்புரம் காவல் ஆய்வாளர் சின்னகாமணன், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கார்த்தி, ஆயுதப்படை காவலர்கள் சிவா, பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை மாவட்டத்திற்கும், இரண்டாம் பரிசு திருப்பூர், மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கி ஸ்டாலின் சிறப்பித்தார்.