#100UNICORNS | ‘யுனிக்’ கதை 39 - Glance: லாக் ஸ்க்ரீனில் நவீன் அள்ளிய லாபம்!
ஸ்மார்ட்போனில் உள்ள லாக் ஸ்கிரீன் அம்சத்தை பயனுள்ள தகவல் கொடுக்கும் மையமாக மாற்றி, அதன்மூலம் பணத்தை கொழிக்கும் நிறுவனமே ‘கிளான்ஸ்’ (Glance).
நம்மிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் என்ன தோன்றும்? முடிந்தவரை அந்த மொபைல்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதை பார்ப்போம். ஆனால், அதுவே ஒரு ஸ்மார்ட்போன் பில்லியன் டாலர் பிசினஸ் தொடங்கும் யோசனையை கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு கதைதான் நமது இன்றைய யூனிகார்ன் அத்தியாயம்.
ஸ்மார்ட்போன்களின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு புதுமைக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள லாக் ஸ்கிரீன் என்பது பெரும்பாலும் நாம் கவனிக்கப்படாத ஒரு பகுதி. ஆனால், இதுதான் ஸ்மார்ட்போனுக்கும் நமக்கும் இடையிலான தொடர்புக்கான முதல் புள்ளி. அப்படியான இந்த அம்சத்தை பயனுள்ள தகவல் கொடுக்கும் மையமாக மாற்றி, அதன்மூலம் பணத்தை கொழிக்கும் நிறுவனமே ‘கிளான்ஸ்’ (Glance). ஆம், யூனிகார்ன் தொடரில் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் ‘கிளான்ஸ்’ தான்.
கிளான்ஸ் புரிந்த சாதனையை தெரிந்துகொள்ளும் முன்பும் அதன் நிறுவனரை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். ஆம், இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனமான InMobi-யின் நிறுவனர் நவீன் திவாரியின் அடுத்த புலிப் பாய்ச்சல்தான் இந்த ‘கிளான்ஸ்’.
நவீன் திவாரியும், இன்மொபியும்:
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் நவீன் திவாரி. ஐஐடி-கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான நவீன் திவாரி புகழ்பெற்ற கன்சல்டன்சி நிறுவனமான மெக்கின்சியில் பணியாற்றியவர். ஸ்டார்ட்-அப் கனவில் பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டார். அதன்படி, mKhoj என்கிற ஐடியா செயல்படுத்தினார்.
‘தேடல்’ என்கிற இந்தி வார்த்தையான Mkhoj என்ற பெயரில் குறுந்தகவல் அடிப்படையிலான தேடல் (SMS based mobile search services) வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் அலைபேசிகளில் வரும் விளம்பரம் (Mobile Advertisement Services) சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாக ‘இன்மொபி’ என்ற பெயர் மாற்றம் பெற்றது.
2009-ம் ஆண்டு ‘இன்மொபி’யாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு 2011-ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய நிறுவனமாக மாறியது. வாசிக்க > ‘யுனிக் கதை’ 01 | InMobi - இரு பில்லியன் டாலர் ஸ்டார்ட்-அப்களை உருவாக்கிய கான்பூர் இளைஞர்!
இன்மொபி டு கிளான்ஸ்...
மூன்று ஆண்டுகளில் இன்மொபி செய்த சாதனையை, அதன் துணை நிறுவனமான 'கிளான்ஸ்' (Glance) தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. கிளான்ஸ், Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு, விளையாட்டு, ஃபேஷன் போன்ற துறைகளின் தகவல்களை மொபைல்போன் லாக் ஸ்கிரீனில் வழங்குகிறது.
கிளான்ஸ் தொடங்கப்பட்டது 2019-ம் ஆண்டில்தான். ஆனால், அதற்கான ஐடியாவோ 2016-ல் கிடைத்தது. இன்மொபி-யின் நான்கு பேர் கொண்ட குழு, மொபைல்போன்களில் உள்ள லாக் ஸ்க்ரீனில் சில யோசனைகளுடன் திவாரியை அணுகியது. திவாரியின் அட்வைஸ்படி யோசனையை அவர்கள் மெருகேற்றி கொண்டுவர, அது அவ்வளவாக சரியாக அமையவில்லை. எனினும், லாக் ஸ்க்ரீனில் பெரிய ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியம் இருப்பதை உணர்ந்தார் திவாரி. ஏனென்றால், பெரும்பாலான மொபைல் யூஸர்கள் லாக் ஸ்க்ரீனை ஒரு தடையாகவே பார்த்தனர். .
இந்த எண்ணம் அடுத்த தீப்பொறிக்கு வழிவகுத்தது. இறுதியாக மொபைல் லாக் ஸ்கிரீன் மூலமாக யூஸர்களுக்கு பயனுள்ள தகவல் வழங்கும் ஐடியா கிடைத்தது.
இன்றைய வேகமான உலகில், நேரம் மிக முக்கியமானது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் இல்லாவிட்டாலும், நாம் போன்களை அவ்வப்போதுனாலும் பார்க்கிறோம். அந்த தருணங்களில் விசுவல் எஃபெக்ட் உடன் புதுப்புது தகவலை வழங்கினால் எப்படி இருக்கும்?
இப்படியான புதுமையான அணுகுமுறைக்கு உத்வேகம் கொடுத்தனர். எனினும், உடனடியாக அவற்றை செயல்படுத்த முடியவில்லை.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து 2019-ல் தான் ‘கிளான்ஸ்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே 2019-ல் தான் கொரோனா தாக்கம் உலகை ஆட்டிப் படைத்தது. பல நிறுவனங்கள் கடையை காலி செய்தன. இன்மொபியும் இதே எண்ணத்தில்தான் இருந்தது. ஆனால், கொரோனா இன்மொபி-க்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அதேதான் கிளான்ஸ்க்கும். கொரோனாவால் வீடுகளில் முடங்கிய மக்கள் கைகளில் மொபைல் போன் அதிக நேரம் இருக்க கிளான்ஸுக்கான ரீச்சும் அதிகமாக இருந்தது.
அபார வளர்ச்சி
2020-ஆம் ஆண்டு ஆண்டு 100 மில்லியன் பயனாளிகளை கிளான்ஸ் கடந்தது. கூகிள் மற்றும் மித்ரில் கேப்பிட்டல் (Mithril capital) நிறுவனங்களிடம் இருந்து 145 மில்லியன் டாலர் முதலீடு திரட்டி இந்த நிறுவனமும் பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கடந்தது. இதன்மூலம் ஒரு தசாப்தத்தில் திவாரியின் இரண்டாவது யூனிகார்னாக கிளான்ஸ் உருவெடுத்தது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் கிளான்ஸ் தகவல் சேவை வழங்குகிறது. ஃபேஷன் தொடங்கி விளையாட்டு வரை செய்திகளை விஷுவல் எபெக்ட் உடன் வழங்குகிறது.
வளர்ச்சி அதிகரிக்க, 2022-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ 200 மில்லியன் டாலர்கள் கிளான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதன் விளைவாக அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிளான்ஸ் கடையை விரித்தது. நோஸ்ட்ரோ என்னும் விளையாட்டு செயலியை கிளான்ஸ் அறிமுகப்படுத்தியது. நோஸ்ட்ரா (nostra) செயலியானது 82 மில்லியன் பயனர்களுடன் இந்தியாவின் மிகப் பெரிய கேமிங் ஆப்-ஆக மாறியது. 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை ஜியோ சினிமா நிறுவனம் வழங்க கிளான்ஸ் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.
“பணம் என்பது புதுமைகளை உண்டாக்குவாதில்லை. புதுமைகளே மேலும் புதுமைகளை கொடுக்கிறது. வாடிக்கையாளர் தேவை என்ன, அந்தத் தேவையை நாம் எவ்வளவு வேறுபடுத்தி நிறைவு செய்கிறோம் என்பதே புதுமையின் அடிப்படை.
உங்களுடைய யோசனை அல்லது செய்யும் தொழில் புதுமையானது என்பதற்கு வெளிப்புற ஒப்புதல் எதையும் தேடவேண்டாம். நீங்கள் முழு மனதாக புதுமையை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் அது புதுமையானதுதான். புதுமைகளை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். அதில் நீங்கள் தோல்வியடைந்தாலும், எந்தவொரு தொழில்முனைவோருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு, தைரியத்துடன் லட்சியத்துடன் இருப்பது” - இது நவீன் திவாரியின் கூற்று.
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையாகி இருப்பது என்பதற்கு நவீன் திவாரியின் வளர்ச்சியே சான்று.
Edited by Induja Raghunathan