Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'தமிழ்நாட்டில் ஹிந்தி தெரியாதது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரிய குறை' - Zoho ஸ்ரீதர் வேம்பு கருத்தும்; குவியும் கண்டனங்களும்!

தமிழர்களுக்கு இந்தி மொழி தேவை என்ற Zoho நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தமிழ்நாட்டில் ஹிந்தி தெரியாதது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரிய குறை' - Zoho ஸ்ரீதர் வேம்பு கருத்தும்; குவியும் கண்டனங்களும்!

Thursday February 27, 2025 , 4 min Read

'தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம், என Zoho நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் இந்த ஹிந்தி மொழிக்கு ஆதரவான கருத்திற்கு சமூகவலைதளப் பக்கங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Sridhar Vembu

சர்ச்சையில் சிக்கிய வேம்புவின் பதிவு

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஹிந்தி திணிப்பின் மறுவடிவம்தான் இந்த மும்மொழிக் கொள்கை, என தமிழ்நாடு அரசு விமர்சித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்தக் கருத்துக்கு மொழி ஆர்வலர்கள் பலரும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீதர் வேம்பு,

"இந்தியாவில் ஜோஹோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள், மும்பை, டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக்கொள்ளாதது எங்களுக்கு பெரிய குறைபாடு."
"ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் ஹிந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது ஹிந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலைப் புறக்கணித்துவிட்டு, மொழியைக் கற்றுக்கொள்வோம். ஹிந்தி கற்றுக் கொள்வோம்," என ஸ்ரீதர் வேம்பு அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்து எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல் ஆகி விட்டது. ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்துக்கு எதிராக பலரும் தங்களது கண்டனப் பதிவுகளை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

திமுக கண்டனம்

திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை, இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"உங்கள் பிஸினஸூக்கு ஹிந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுங்கள். உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும்? அதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சனையைத் தீர்க்கும். இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது..." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது மட்டும்தான் வழியா?

“மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பணிபுரிய தமிழ்நாட்டின் பொறியாளர்கள் ஹிந்தி கற்க வேண்டும் என்றால், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பொறியாளர்கள் தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்களுடன் பணியாற்ற தமிழ் கற்றுக்கொள்கிறார்களா?” என நியாயமான கேள்வியை முன்வைத்துள்ளார் ஒரு பதிவர்.

அதேபோல், டி.முத்துகிருஷ்ணன் என்ற நெட்டிசனோ,

“உங்கள் ஊழியர்களுக்கு ஹிந்தி அறிவு தேவைப்பட்டால், அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். தமிழகம் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் தனக்கு விருப்பமான எந்த மொழியை கற்கத் தடையில்லை. அதை யாரும் தடுக்க மாட்டார்கள். 3 மொழிகள் கற்பதைக் கட்டாயமாக்கும் செயல்பாட்டில், ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்குவதைத்தான் மாநில அரசு எதிர்க்கிறது,” என காட்டமாக இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது எப்படி சாத்தியமானது?

இதேபோல், வேம்புவின் மற்றொரு பதிவிற்கும், இந்த இந்தி பிரச்சினையை மையமாக வைத்து பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்பி புதுக்கோட்டை அப்துல்லா. அப்பதிவில் அவர்,

“அன்புள்ள திரு.வேம்பு சார், சவுதி அரேபியாவில் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்! அரேபிய மொழியைக் கற்காமல் நீங்கள் இதை எப்படி அடைந்தீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. அரபி தெரியாமல் இதை விரிவு செய்யும் நீங்கள்.. இப்போது தமிழர்கள் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டும் ஏன்?” என நாசூக்காக வேம்புவிடம், அவரது இந்தி மொழி கற்பது புத்திசாலித்தனம் என்ற கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Sridhar Vembu

நெட்டிசன்களின் கண்டனம்

முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்களும் வேம்புவின் இந்தப் பதிவிற்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தி படிப்பது புத்திசாலித்தனம் என ஏற்கனவே வேம்பு வெளியிட்ட பதிவே, இணையத்தில் காரசார விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்த்து கட்டணம் செலுத்தும் வசதியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்தி கற்றுக் கொள்ள வைக்கிறார்கள், என புதிய கருத்தை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வேம்பு.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கூட சிபிஎஸ்இ பள்ளிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன, அவை அனைத்தும் இந்தியைக் கற்பிக்கின்றன. கட்டணம் செலுத்தக்கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிக்கு அனுப்ப விரும்புகிறார்கள். கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே அரசு அல்லது உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று இந்தி கற்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நாங்கள் நிறைய மாணவர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். இவையே அப்பட்டமான உண்மைகள்,” என வேம்பு தெரிவித்துள்ளார்.

கண்மூடித்தனமான பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் லட்சுமி ராமசந்திரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

“எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது திரு.வேம்பு. எல்லா மக்களும் இதைத்தான் சொல்கிறார்கள். முதல் தலைமுறை மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்வி சவால்களை பற்றி அவர் அறிவார். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் சூழலில் மொழி முற்றிலும் இல்லாத நிலையில் அவர்களுக்கு இரண்டாம் மொழியைக் கற்பிப்பது எவ்வளவு கடினம் என்பதும் அவருக்குத் தெரியும். ஐயா, ஒருவர் ஆதரிக்கும் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை எப்போதும் கண்மூடித்தனமாக எடுக்க வேண்டியதில்லை. உங்களைப் போன்றவர்கள் களத்தில் இருந்து பெற்ற அறிவைக் கொண்டு அரசாங்கங்களுக்கு வழிகாட்ட வேண்டும். நகர்ப்புற தமிழ்வழிப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்திலிருந்து நான் எழுதிய இந்தப் பகுதியைப் படிக்கவும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 58 ஆயிரம் பள்ளிகளில், தனியார் பள்ளிகள் 12,690. அதில் சிபிஎஸ்இ பள்ளிகள் 1,835 மட்டுமே, எனவே அந்த 3 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்தி பெரிதாகத் தெரிகிறது. தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்... என புள்ளி விபரங்களையெல்லாம் குறிப்பிட்டு ஒருவர் வேம்புவின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இப்படி மொழிப் பிரச்சினைகளில் சிக்கி வேம்பு சர்ச்சைக்கு ஆளாவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ‘பெங்களூருவுக்கு வருபவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற கருத்தைக் கூறி, கண்டனங்களுக்கு ஆளானார் என்பது நினைவுகூரத்தக்கது.