பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்; கைது அச்சுறுத்தல் - FedEx Scam நடைபெறுவது எப்படி?
இணைய வழியில் இயங்கும் மக்களை குறிவைத்து மோசடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் 1: பெங்களூருவை சேர்ந்த தம்பதியினரை ஒரு ஓட்டலில் இருவேறு அறைகளில் தனித்தனியாக விசாரணை என்ற பெயரில் இரண்டு நாட்கள் வைத்து, அவர்களிடமிருந்து ரூ.1.98 கோடி பணம் பறித்துள்ளனர் சைபர் கிரைம் மோசடியாளர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வீடியோ அழைப்பு மூலமாக பேசி இதை செய்துள்ளனர்.
சம்பவம் 2: சென்னையில் ஒரே குடும்பத்திடம் கடந்த நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரையிலான நாட்களில் ரூ.1.5 கோடியை எட்டு வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். அந்த எட்டு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 105 வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணம் அடுத்த சில நொடிகளில் மாற்றப்பட்டுள்ளது. இதுவும் மோசடியாளர்களின் கைவரிசை தான்.
இது அன்றாடம் நாம் கடந்து செல்கின்றன சைபர் கிரைம் மோசடி குறித்த செய்தி தானே என நாம் எண்ணக்கூடும். ஏனெனில், உலக மக்களில் பெரும்பாலானோர் தகவல் தொடர்பு முதல் பல்வேறு பணிகளை எளிதான வகையில் மேற்கொள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் இணைய வழியில் இயங்கும் மக்களை குறிவைத்து மோசடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது அனைவரும் அறிந்தது. நாம் ஹைலைட் செய்துள்ள அந்த இரண்டு மோசடி சம்பவங்களும்
Scam எனும் பார்சல் மோசடியாகும். இந்த மோசடி குறித்து விரிவாக பார்ப்போம்.FedEx Scam?
தொலைபேசி அழைப்பு வழியே தெரியாத/அறியாத எண்ணில் இருந்து FedEx கூரியர் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் பிரதிநிதி என தங்களை அறிமுகம் செய்து கொண்டு மொபைல்போன் பயனர்களிடம் பேசுவார்கள். உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பட்டுள்ளது, அதில் போதை பொருள் இருப்பதாக தெரிவிப்பார்கள்.
“ஐந்து பாஸ்போர்ட், மூன்று கிரெடிட் கார்ட் மற்றும் 300 கிராம் எம்டிஎம்ஏ பார்சல் உங்கள் பெயரில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்டிஎம்ஏ (MDMA) என்றால் தங்களுக்கு என்னவென்று தெரியுமா? அது போதை வஸ்து. உங்களது ஆதார் எண்ணை கொண்டு அனுப்பப்பட்டுள்ளது...” என மோசடியாளர்கள் சொல்வார்கள். கூடவே ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிடுவார்கள். அந்த அழைப்பை பெறுகின்ற நபருக்கு என்ன செய்வதென்று தெரியாது. ஏனெனில், மறுமுனையில் பேசிய நபர் தெரிவித்த ஆதார் விவரம் தங்களுடையது என்ற காரணம் தான்.
தொடர்ந்து மோசடியாளர்கள் தங்களது உயர் அதிகாரிக்கு அழைப்பை டிரான்ஸ்ஃபர் செய்வதாக சொல்வார்கள். அதையடுத்து, வீடியோ/ஆடியோ கால் மூலம் உயர் அதிகாரி என தொடர்பு கொண்டு பேசும் நபர்,
“பார்சல் உங்கள் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதன் காரணமாக நீங்கள் சிறை செல்ல வேண்டி இருக்கும். அதை தவிர்க்க செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும். அனைத்து சிக்கலும் முடியும் வரையில் வெளியில் அதிகம் வர வேண்டாம். யாரிடமும் இது குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதுதான் உங்களுக்கு நல்லது...” எனச் சொல்வார்கள்.
இப்படியாக மக்களை மிரட்டும் வகையில் அழுத்தம் கொடுப்பார்கள். அது நம்பும் வகையிலும் இருக்கும். முக்கியமாக தங்களது உரையாடலை எமோஷனல் ரீதியாக கையாள்வார்கள்.
இப்படியான அழைப்புகள் இந்தியா முழுவதும் உள்ள பல மக்களை குறிவைத்து ரேண்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், விஞ்ஞானிகள் என போன்றவர்கள் கூட மோசடியாளர்களின் வலையில் சிக்கி உள்ளனர்.
அதோடு, கோடிக்கணக்கான ரூபாயை பாதிக்கப்பட்டவர்கள் இழந்தும் உள்ளனர். சமயங்களில் தங்களை சுங்கத்துறை அதிகாரி, காவல் துறை அதிகாரி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி என மோசடியாளர்கள் தெரிவிப்பார்கள். சமூகத்துக்கு அஞ்சி பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்த பிறகுதான் அது மோசடி என்ற விவரமே அவர்களுக்கு தெரியவரும்.
இப்படியாக தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்கள், புலித்தோல் போன்றவற்றை குறிப்பிட்டு அது வெவ்வேறு நாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லி ஒவ்வொருவரிடமும் பேசி பணம் பறிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஐடி நகரம் என போற்றப்படும் பெங்களூருவில் கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் இந்த மோசடி சார்ந்து காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படி ஆதார் விவரங்கள் கிடைக்கிறது?
மக்கள் தங்களது ஆதார் விவரங்களை இணைய வழியில் பண பரிமாற்றம் மேற்கொள்ளும் போது வலைதளத்தில் KYC போன்ற காரணங்களுக்காக அதை உள்ளிட்டு இருக்கலாம். தங்கும் விடுதிகளில் அறை எடுக்க ஆதார் விவரங்களை கொடுத்திருக்கலாம். இப்படி பல்வேறு வழிகளில் தனி நபர்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த விவரங்கள் திருடப்பட்டு இருக்கும். இந்தியாவில் பிரைவசி மற்றும் தரவு சார்ந்த பாதுகாப்பு பலமாக இல்லாததும் இதற்கு காரணம்.
FedEx மோசடியாளர்கள் தொடர்பு கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
- தெரியாத எண்ணில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பிலோ அல்லது மெசேஜிலோ தங்களைப் பற்றிய விவரத்தை பயனர்கள் பகிரக் கூடாது.
- 1930 அல்லது தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
- தெரியாத அல்லது சந்தேகத்துக்கு உரிய எண்களில் இருந்து வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம்.
- காவல் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை போன்ற அமைப்புகள் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஒருபோதும் பேசாத என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியேனும் சூழல் இருந்தால் அதற்கென உள்ள சட்ட முறைப்படி தான் அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
- பார்சல் குறித்து மெசேஜ் ஏதேனும் வந்தால் அதில் உள்ள ஷிப்மெண்ட் டிராக்கிங் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று அதை உள்ளிட்டு விவரத்தை சரிபார்க்கவும்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் தான் FedEx. பயனர்கள் ஆன்லைன் செக்யூரிட்டியில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது.
இந்த வகை மோசடியில் ஈடுபடும் நபர்கள் வெளிநாட்டு ஐபி அட்ரஸ்களை அடிப்படையாக வைத்து செயல்படுகின்றன. மோசடி வேலை மூலம் பெறப்படும் பணத்தை நொடிப்பொழுதில் வேறு நாடுகளுக்கு மாற்றி, அதை கிரிப்டோ கரன்சிகளாக அங்கு வைத்திருக்கின்றனர். அதனால் இவர்களை அடையாளம் காண்பது, பணத்தை மீட்பது சவாலான காரியமாக உள்ளது.
காவல் துறையில் புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் தயங்குவதுதான் இவர்களுக்கான சாதகம். சைபர் கிரைம் மோசடியை பொறுத்துவரையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் விரைந்து புகார் அளித்தால் இழந்த பணத்தை விரைந்து மீட்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Edited by Induja Raghunathan