Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘போர் முதல் இயற்கைப் பேரிடர்கள் வரை’ - 2023ல் உலக மக்களை நடுங்கவைத்த பயங்கரங்கள்!

2023ம் ஆண்டு உலகை நிலை குலையச் செய்யும் சம்பவங்கள் சில அரங்கேறின. போர், நிலநடுக்கம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்கள் என மக்கள் வருத்தப்படும்படியாக நடந்த முக்கியமான சம்பவங்களைப் பார்க்க்கலாம்.

‘போர் முதல் இயற்கைப் பேரிடர்கள் வரை’  - 2023ல் உலக மக்களை நடுங்கவைத்த பயங்கரங்கள்!

Saturday December 23, 2023 , 5 min Read

2023ம் ஆண்டு உலகை நிலை குலையச் செய்யும் சம்பவங்கள் சில அரங்கேறின. போர், நிலநடுக்கம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்கள் என மக்கள் வருத்தப்படும்படியாக நடந்த முக்கியமான சம்பவங்களைப் பார்க்க்கலாம்.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் பிப்ரவரி 6, 2023ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு தென்மேற்கில் 59 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது, இது 7.5ஆக ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

turkey earthquake

1939ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது அதிபயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 59 ஆயிரத்து 259 பேர் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட துருக்கி மக்கள்தொகையில் 16 சதவிகிதம் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 350,000 km2  அதாவது ஜெர்மனி நாடு அளவிலான நிலப்பரப்பு இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டு வரலாற்றில் இது மறக்க முடியாத ஒரு பேரிடராக பதிவாகியுள்ளது.

ஹமாஸ் -இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீன ஆதரவு குழுக்களில் உள்ள ஆயுதம் ஏந்திய குழு ஹமாஸ். சுமார் 24 லட்சம் மக்களைக் கொண்ட காசா பகுதியைக் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஹமாஸ் படை தான் நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அங்கே ஆட்சிக்கு வந்த பிறகே, காசாவை சுற்றி இஸ்ரேல் தனது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. கடுமையான மோதலுக்கு பிறகே ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

காசா மற்றும் மேற்கு கரை நிர்வகிக்க பாலஸ்தீனிய அதிகார சபை என்ற அமைப்பு இருந்தது. அந்த அமைப்புடன் நடந்த மோதலை தொடர்ந்தே ஹமாஸ் காசா பகுதி முழுக்க தன்வசம் கொண்டு வந்தது. அப்போது முதலே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமானது.

israel hamas

இந்நிலையில், காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள்  அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். முதல் நாள் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 220 இஸ்ரேலியர்கள் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. ஏராளமான உயிரிழப்புகள், மக்கள் பணையக்கைதிகளாக பிடிபடுதல் என்று துயரத்தில் திளைத்தனர்.

நவம்பர் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் செய்யப்பட்டு சில நிபந்தனைகளும் கொண்டுவரப்பட்டன. ஹமாஸ் காசா இடையே சுமூகத் தீர்வு காண உலக நாடுகள் பல பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன.

உக்ரைன் ரஷ்யா போர்

2014 முதல் ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே அவ்வபோது போர் மூண்டு வருகிறது. இந்த ஆண்டு திடீரென உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தியது. போரின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் கணிசமான வெற்றிகளைப் பெற்ற போதிலும், உக்ரேனிய பாதுகாவலர்கள் கெய்வ் மற்றும் பிற முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் முயற்சிகளை முறியடித்தனர்.

இந்தப் போரால் உக்ரைன் கடுமையான மற்றும் ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆளாயினர் பல பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அமெரிக்கா,  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைனில் இருந்த 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாகினர்.

ஓடிஸ் சூறாவளி

வரலாற்றில் காணாத அதிக சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்று வடஅமெரிக்காவின் மெக்சிகோவை புரட்டிப் போட்டது. அக்டோபர் 25, 2023 அன்று, அதிகாலை 1:25 மணிக்கு, ஓடிஸ் சூறாவளி மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் கரையைக் கடந்தது, குறிப்பாக அகாபுல்கோவிலிருந்து ஐந்து மைல் தெற்கே தாக்கியது. தாக்கத்தின் போது, ​​ஓடிஸ் 5 சூறாவளிக் காற்றின் வலிமையோடு, 165 மைல் வேகத்தில் பேய் அடி அடித்து வீசியது. 

otis cyclone

சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் அகாபுல்கோவின் பொருளாதாரம், சூறாவளியால் ஏற்பட்ட பரவலான அழிவின் காரணமாக கடுமையான பின்னடைவை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சீன வெள்ளம்

2023 ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரையில் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்த மழையால் அதிகமான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். ஜூலை தாதத்தில் வடகிழக்கு சுனாவில் பதிவான மழை மற்றும் சூறாவளியால் 16 நகரங்களும் மாகாணங்களும் பாதிக்கப்பட்டன. ஒரு ஆண்டில் சராசரியாகப் பெய்யக் கூடிய மழையில் 60 சதவிகிதம் 83 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.

china floods

தலைநகர் பீஜிங் 140 ஆண்டுகளில் இல்லாத மிக அதிக கனமழையை பதிவு செய்துள்ளது. இதில் 81 பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காணாமல் போனதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 13ல், சியான் சிட்டியில் உள்ள வைசிபிங் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 24 பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தெற்கு சீனாவில் 8 லட்சத்து 80,000க்கும் மேற்பட்ட நபர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உத்தரகண்ட் சுரங்க விபத்து

இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சில்க்யாராவில் சார்தாம் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சில்க்யாரா வளைவு - பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12 அதிகாலை 5:30 மணியளவில் இடிந்து விழுந்தது. சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மேற்புறம் இடிந்து சுரங்கத்திற்குள் பாறைகள் விழுந்ததில், சுமார் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

uttarkhand tunnel

உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறையினர் மீப்புப் பணியில் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஒடிசா ரயில் விபத்து

இந்த ஆண்டின் மிக மோசமான ரயில் விபத்து ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்தது. கடந்த ஜூன் 2-ம் தேதி பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர்.

train accident

1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவறான வயரிங், கேபிள் இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்து, ரயில் விபத்து ஏற்பட்டது. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு’ என்று சுட்டிக்காட்டப்பட்டு இந்த தவறுக்குக் காரணமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் கைது செய்யப்பட்டனர்.

மிக்ஜாம் புயல்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இந்தப் புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. டிசம்பர் 5ல் ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடந்த மிக்ஜாம் புயல் தமிழக வடகடலோரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. டிசம்பர் 3ம் தேதி தொடங்கிய புயல் காற்று நகரும் திசையானது டிசம்பர் 4ம் தேதி தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

chennai rains

தொடர்ந்து பல மணி நேரம் வீசிய காற்று ஒரே நாளில் அதிகபட்ச கனமழை என இயற்கையின் சீற்றத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. எங்கு பார்த்தாலும தண்ணீர் என சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வீடுகளை வெள்ளம் மூழ்கடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தமிழக தென்மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புயல் புரட்டி போட்டச் சுவடு மறைவதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த பேய்மழை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை தண்ணீரில் தத்தளிக்க வைத்தது. கடந்த 17,18ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ள நீரால் பல கிராமங்கள் தனித்தீவாக மாறின. தூத்துக்குடி, திருநெல்வேலி நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை தென்மாவட்டங்கள் சந்தித்துள்ளது ஒரு பக்கம் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதாக மக்கள் சந்தோஷப்பட்டாலும் பலரின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது இந்தப் பெருமழை.