தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை: HDFC வங்கியின் கதை!
HDFC தொடங்கியது முதல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ள ஆதித்ய பூரி வரும் அக்டோபர் ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு அடுத்து யார்?
பத்திரிகையாளனாக பல துறையைச் சார்ந்தவர்களுடன் உரையாடி இருக்கிறேன். குறிப்பாக நிதித் துறையில் பல தலைவர்களுடன் சந்தித்து பேசி இருக்கிறேன். நேரடியாக கேள்வி பதிலாக அல்லாமல் உரையாடலாகவே அந்த நேர்காணல் இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கித்துறை தலைவர் ஒருவரை சந்தித்து உரையாடினேன். அப்போது ஹெச்டிஎப்சி வங்கி குறித்த பேச்சு எழுந்தது. ஹெச்டிஎப்சி வங்கியின் வளர்ச்சியை மற்ற வங்கிகள் அடைய முடியவில்லையே ஏன் என்று கேட்டதற்கு, ‘ஹெச்டிஎப்சி வங்கியின் செயல்பாட்டினை பார்த்து வியக்கலாம், ஆனால் அதனை மற்ற வங்கிகள் பிரதி எடுக்க முடியாது,’ எனக் கூறினார்.
இந்த ஸ்டேட்மெண்டை கூறியது யாராக இருக்கும் என்று யோசிப்பதை விட்டுவிட்டு, ஹெச்டிஎப்சி வங்கி எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்...
சில மாதங்களுக்கு முன்பு Tamal Bandyopadhyay எழுதிய ஹெச்டிஎப்சி 2.0 புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். முழுமையாக வாசிக்க முடியவில்லை. இந்த லாக்டவுண் நேரத்தில் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்க முடிந்தது. வங்கி குறித்த பல விஷயங்கள் புரிந்தது.
HDFC தொடக்கக் காலம் : 1994
1991ம் ஆண்டு நிதித்துறையில் இருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. தற்போது பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் பல தனியார் வங்கிகள் இந்த காலக் கட்டத்தில் தொடங்கப்பட்டவையாகும்.
வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Housing Development Finance Corporation (HDFC) வங்கி தொடங்க முடிவெடுத்தது. அப்போது ஹெச்டிஎப்சியின் தலைவராக இருந்தவர் தீபக் பரேக். வங்கி தொடங்குவதற்கான பணிகளை அவர் கவனித்தார். அனுமதி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமானவுடன் தலைமைச் செயல் அதிகாரியை தேடும் பணியைத் தொடங்குகிறார்.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் அதிக கிளைகள் உள்ளன. ஆனால் அதிகமான ப்ராடக்ட்கள் இல்லை. அதே சமயம் அப்போது இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு வங்கிகளில் அதிக ப்ராடக்ட்கள் இருந்தன, ஆனால் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. அதனால் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் ப்ராடக்ட்கள் இருக்க வேண்டும், அதே சமயம் அவை இந்திய தன்மையுடன் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறார். அதனால் வெளிநாட்டு வங்கிகளில் பணிபுரியும் திறமைசாலியை கண்டறியும் பணியை தீபக் ப்ரேக் தொடங்குகிறார்.
அப்போது சிட்டி வங்கியின் மலேசியா பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியான ஆதித்யா பூரியை சி.இ.ஓவாக நியமிக்கத் திட்டமிடுகிறார். இதற்காக மலேசியா சென்று அவருடன் பேச்சு வார்த்தையை தொடங்குகிறார். மலேசியாவில் வாங்கும் சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் பங்குகள் கொடுக்கிறேன் எனக் கூறி, தலைமைப் பொறுப்பை ஏற்க சம்பதிக்கிறார் ஆதித்யா பூரி. (இந்த வங்கியின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும் இவரே. இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற இருக்கிறார். சர்வதேச அளவில் ஒரே வங்கியில் இத்தனை ஆண்டு காலம் தலைமைச் செயல் அதிகாரியாக யாரும் இருந்ததில்லை.)
தலைவர் யார்?
தலைமைச் செயல் அதிகாரிக்கு முன்பாகவே வங்கியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை தீபக் முடிவு செய்துவிட்டார். ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்க நடைமுறை தெரிந்த நபர்தான் தலைவராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒழுங்குமுறை ஆணையங்களுடன் சரியான தொடர்பில் இருக்க முடியும் என்பதால் எஸ். எஸ். தாகுரை தலைவராக நிர்ணயம் செய்யத் திட்டமிடப்படுகிறது.
இவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்திருந்தாலும், அனுமதி கிடைக்கும் சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். தீபக் கேட்டுக்கொண்டதினால் மதிப்பு மிக்க பணி மற்றும் குறைந்த ஊதியத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் தாகுர்.
வங்கியின் பெயர் என்ன?
இப்போது ஹெச்டிஎப்சி என்பது பெரிய பெயராக இருக்கலாம். ஆனால் அந்த சமயத்தில் என்ன பெயர் வைக்கலாம் என்பது பெரும் விவாதமாக இருந்திருக்கிறது. ‘தி பேங்க் ஆப் பாம்பே’ என்பதுதான் தீபக்கின் விருப்பமாக இருந்தது. அதற்குக் காரணம் அப்போது வரையில் பாம்பேவை தலைமையாகக் கொண்டு எந்த தனியார் வங்கியும் செயல்படவில்லை என்பதுதான்.
ஐசிஐசிஐ வங்கி பரோடாவிலும், சென்சூரியன் வங்கி பனாஜியிலும் (கோவா), குளோபல் ட்ரஸ்ட் வங்கி ஹைதராபாத்திலும், இண்டஸ்இண்ட் வங்கி பூனேவிலும், யூடிஐ வங்கி (தற்போது ஆக்ஸிஸ்) அகமதாபாத்திலும் செயல்பட்டு வந்தன. பாம்பேவில் எந்த வங்கியும் செயல்படவில்லை என்றாலும் பேங்க் ஆப் பாம்பே என்பது, பேங்க ஆப் பரோடா என்பது போலவே இருப்பதால் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பெயரில் பாம்பே என்னும் வார்த்தை வர வேண்டும் என தீபக் விரும்பினார். அனைவரும் ஹெச்டிஎப்சி வங்கி என்னும் பெயரையே விரும்பினார்கள். ஆனால் அப்போது ஹெச்டிஎப்சியின் நிர்வாக இயக்குநராக இருந்த தீபக் சாட்வால்கெர், புதிய வங்கியால் ஹெச்டிஎப்சி என்னும் பெயருக்கு பிரச்சினை வரலாம். அதனால் பெயரை மாற்றுமாறு பரிந்துரை செய்திருக்கிறார்.
HDFC வங்கி என்னும் பெயர் இருந்தால் இங்கு பணிபுரிகிறேன். இல்லை என்றால் அடுத்த பிளைட் பிடித்து மலேசியே செல்கிறேன் என தீபக் கூறியதால் ஹெச்டிஎப்சி வங்கி என்னும் பெயர் நிலைத்தது.
இயக்குநர் குழுவில் தீபக் பரேக்?
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் தலைவராக தீபக் பரேக் இருந்தாலும், புதிதாக அமையவிருக்கிற வங்கியின் இயக்குநர் குழுவில் இடம்பெற தீபக் மறுத்துவிட்டார். ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய இரண்டு இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருப்பது எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் தீபக் பரேக், சீமென்ஸ், ஹெச்யூஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இந்தியன் ஓட்டல், கேஸ்ட்ரால் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். வங்கியின் இயக்குநர் குழுவில் இருந்தால், மற்ற நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேற வேண்டும். அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் மற்ற புளூசிப் நிறுவனங்களில் இருந்தால் அதன் மூலம் வங்கிக்கு பலன் என்பதால் ஹெச்டிஎப்சி வங்கியின் இயக்குநர் குழுவில் தீபக் பரேக் இடம்பெறவில்லை.
திட்டமிட்டது போலவே சிமென்ஸ் நிறுவனம் வங்கியின் முதல் வாடிக்கையாளராக இணைந்தது. 1991ம் ஆண்டு காலகட்டத்தில் 113 நிறுவனங்கள் வங்கி தொடங்க விண்ணப்பித்தன. இதில் 10 நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. 1994ம் ஆண்டு ஆகஸ்டில் ஹெச்டிஎப்சி வங்கி தொடங்கப்பட்டது.
ஆதித்யா பூரியின் பங்கு
சர்வதேச அளவில் முக்கியமான பிராண்டாக ஹெச்டிஎப்சி வளர்ந்திருக்கிறது. இதற்கு ஆதித்யா பூரி காரணம் என்று சொன்னால் மிகையாகாது. ஒப்பீட்டளவில் சொல்ல வேண்டும் என்றால் எந்த ஒரு புதிய வாய்ப்புகளையும் ஐசிஐசிஐ வங்கி முதலில் தொடங்கும். ஆனால் அந்த பிரிவின் உச்ச நிலையை ஹெச்டிஎப்சி வங்கி அடையும் என்பது வங்கித்துறை வல்லுநர்களின் கருத்து.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் முக்கியப் பிரிவுகளின் தலைவர்களுடன் உரையாடுவது ஆதித்யா பூரியின் வழக்கம். காலதாமதமாகவோ அல்லது தயாராகவோ இல்லாவிட்டால் பூரியின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என அவருடன் பணியாற்றியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோல மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு செல்லும் முதல் நபரும் பூரியே.
இந்தியாவில் முதல் முறையாக அனைத்து நடவடிக்கையும் கணிப்பொறியில் ஒருமுகப்படித்தியது இந்த வங்கியே. இப்போது அனைத்து வங்கிகளும் ரியல் டைமில் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. ஆனால் அப்போது ஆன்லைன் பரிவர்த்தனையாக இருந்தாலும் ரியல் டைமில் இல்லை.
உதாரணத்துக்கு வங்கியில் ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு, பிறகு ஏடிஎம் சென்றாலும் பத்தாயிரம் ரூபாயை எடுக்க முடியும். அப்போதைய முறையில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சர்வரில் அப்டேட் நடக்கும். ஆனால் வங்கித்துறைக்கு இது ரிஸ்க் என்பதால் முதல்முறையாக ரியல் டைம் பரிவர்த்தனையை அறிமுகம் செய்தது ஹெச்டிஎப்சி வங்கி. இது அதிக செலாகும் விஷயமாக இருந்தாலும் ரியல் டைம் முறை கொண்டுவரப்பட்டது.
சிக்கனம்
ஆதித்யா பூரிக்கு ஒவ்வொரு டீடெய்லும் முக்கியம். சில சாம்பிள்கள் இதோ. காபி மற்றும் டி குடிப்பதற்கு பேப்பர் கப்பின் நாம் தற்போது தவிர்க்கிறோம். ஆனால் 1997-ம் ஆண்டே ஹெச்டிஎப்சி வங்கியில் பேப்பர் கப் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையில் இதற்காக செலவானதால், ஒவ்வொருவரும் காபி மக் எடுத்துவந்தால் மட்டுமே டி/காபி குடிக்க முடியும் என உத்தரவிடப்பட்டது. அதேபோல இயக்குநர் குழு கூட்டம் தவிர மற்ற கூட்டங்களுக்கு பிஸ்கட் கொடுக்கும் வழக்கமும் ஆரம்ப காலத்திலே நிறுத்தப்பட்டது.
பெரிய வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது ட்ரீட் கொடுப்பது கார்ப்பரேட்களில் சர்வ சாதாரணம். ஆனால் பியர்/மது யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் ஆதித்யாவின் அனுமதி முக்கியம்.
இந்தியா முழுவதும் மது சம்பந்தபட்ட பில்களுக்கான தொகை ஆதித்தாவின் அனுமதிக்கு பிறகே வழங்கப்படும். அதேபோல பணியாளர்களின் ஒவ்வொரு செலவுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்குமோ அதே சிக்கனத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பது ஆதித்தாவின் கொள்கை.
தொழிலில் நண்பர்கள் கிடையாது?
கிங்பிஷருக்கு பல வங்கிகள் கடன் கொடுத்தன, ஹெச்டிஎப்சி வங்கியை தவிர. அதேபோல நீரவ் மோடியின் மோசடியும் இங்கு எடுபடவில்லை. தொழிலில் நண்பர்கள் கிடையாது என்பது ஆதித்யாவின் பாலிசி.
விஜய் மல்லையாவும், ஆதித்யா பூரியும் நண்பர்கள். ஆனால் விமான நிறுவனங்களுக்கு கடன் கிடையாது என்பது இயக்குநர் குழுவின் முடிவு. அதனால் கொடுக்க முடியாது என்பது திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஹெச்டிஎப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது குழும நிறுவனமாகும். வங்கிக் கிளைகள் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பது என்பது ஒரு விற்பனை முறையாகும். ஆனால் லைஃப் இன்ஷூரன்ஸ் அதிகாரிகளிடம் எங்களுக்கு (ஹெச்டிஎப்சி வங்கிக்கு) என்ன கிடைக்கும் என்பதில் ஆதித்யா உறுதியாக இருப்பார்.
ஒருவேளை குறைந்த தொகையை கூறும்பட்சத்தில் மற்ற லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உங்களை விட அதிக தொகையை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என கூறி நினைத்த கமிஷன் தொகையை ஆதித்யா புரி பெற்றுவிடுவார் என ஹெச்டிஎப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைத்தது?
தற்போதெல்லாம் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகள் அதிக பிரீமிய விலையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் ஹெச்டிஎப்சி பங்கு 1995-ம் ஆண்டு 10 ரூபாயிலே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் முதல் நாளிலே 300 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. பல முதலீட்டாளர்கள் தொடக்கம் முதல் இந்த பங்கின் முதலீட்டை தொடர்ந்து வருகின்றனர். வங்கித்துறையில் ஹெச்டிஎப்சி அளவுக்கு வருமானத்தை வேறு எந்தவங்கியும் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கவில்லை.
விமர்சனமே கிடையாதா?
ஹெச்டிஎப்சி வங்கியுடன் டைம்ஸ் வங்கி இணைக்கப்பட்டது. முதலீட்டாளர்களிடம் இந்த இணைப்புக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சென்சூரியன் வங்கியை இணைத்தது. இந்த இணைப்பால் ஹெச்டிஎப்சி வங்கிக்கு எந்த பயனும் இல்லை என்னும் கருத்து இருந்தது. இணைப்புக்குப் பிறகு ஹெச்டிஎப்சி வங்கி பங்கும் சரிவை சந்தித்தது.
டெரிவேட்டிவ் புராடக்ட்களை சரியாகக் கையாளவில்லை, இவை தவறாக விற்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி 19 வங்கிகளுக்கு அபராதம் (2011-ம் ஆண்டு) விதித்தது. இந்த பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கியும் இருந்தது.
அதேபோல ஐபிஓ முறைகேட்டிலும் ஹெச்டிஎப்சி வங்கி சர்ச்சைக்குள்ளானது. 2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இந்திய பங்குச்சந்தையில் பல நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. முதல் நாளில் அதிகத் தொகைக்கு வர்த்தகமானது. அதனால் சிறுமுதலீட்டாளர்கள் என்னும் பெயரில் பலர் போலியான டிமேட் கணக்குகளை தொடங்கி, ஐபிஓவில் விண்ணப்பித்து லாபம் பார்த்தனர்.
போலிக் கணக்குகளை கண்காணிக்க ஹெச்டிஎப்சி வங்கி தவறிவிட்டது என செபி அபராதம் விதித்தது. அதைவிட குறிப்பிட்ட மாதங்களுக்கு புதிய டிமேட் கணக்குகளை தொடங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதேபோல 2014, 2016-ம் ஆண்டுகளிலும் சில சர்ச்சைகளில் வங்கியின் பெயர் அடிபட்டது.
ஆதித்யாவுக்கு பிறகு யார்?
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துவிட்டார். வரும் அக்டோபர் 26-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு அடுத்து யார் என ஹெச்டிஎப்சி வங்கி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வங்கித்துறை எதிர்பார்த்து காத்திருக்கிறது. காரணம் ஆதித்யா பூரியின் செயல்பாடுகள். வங்கிக்குள் இருந்தும் சர்வதேச அளவில் இருந்தும் பல பெயர்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வரும் மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Small things make Perfection, But, Perfection is no small thing என்பது போல அவர் செய்த ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் புதியவர் செய்ய முடியுமா? வங்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை விட ஆதித்யா பூரியை விட சிறப்பாக செயல்படுவாரா என்பதை சோதிக்கவே பலரும் தயராக இருக்கிறார்கள்.
தகவல் உதவி: Tamal Bandyopadhyay's HDFC Bank2.0