Umagine TN2024: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற Umagine TN 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற Umagine TN 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு:
சமூக நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை சமநிலைப்படுத்தும் அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் “யுமாஜின் (UMAGINE) - வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை” சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது, “UmagineTN” மாநாடு 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (23.2.2024 மற்றும் 24.2.2024) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 120 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஒன்றிய அரசின் IT செயலாளர்கிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், எல்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் அனீஷ் சேகர், HCL Tech நிறுவன மேலாண்மை இயக்குநர் விஜயகுமார், HP India நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இஸ்பிதா தாஸ்குப்தா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், கொரியா, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் தூதரக அதிகாரிகள், ACT நிறுவன தலைமை இயக்க அதிகாரி சந்தீப் மோகன் குப்தா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“நம்முடைய தமிழ்நாட்டில் இந்த துறைகளில் வர்த்தகம் துவக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றவேண்டும்! அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். வளர்ச்சி என்பதை வெறும் எண்கள் மட்டும் அல்ல, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் காட்டுகிறோம். அனைத்து துறைகளும் அதற்கான செயல் திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. அதில் முக்கியமான துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கின்றது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” எனக்கூறினார்.
இலவச வைஃபை சேவை தொடக்கம்:
யுமாஜின் 2024 (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கிவைத்த, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக இலவச வைஃபை திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொழில்நுட்பத்துறை சார்ந்த அறிவிப்புகள்:
- புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்ற புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூரில், புதிய தகவல்தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடியில், ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது.
- அடுத்த 5 ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் செலவில், மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படவுள்ளது.
- மதுரையில், புதிய டைடல் பூங்காக்கள் 6.4 லட்சம் சதுர அடியில 345 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.
- திருச்சியில், 6.3 லட்சம் சதுர அடியில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட இருக்கிறது.
- தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைத்து 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
- 30 கோடி ரூபாயில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலத்தில் இலவச Wifi வசதிகள் என பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினர்.