'AI புரட்சியால் பாரம்பரிய வேலைகள் புத்துயிர் பெறும்' - ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை!
செயற்கை நுண்ணறிவு ஆங்காங்கே தலைகாட்டியதற்கே பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்துள்ள நிலையில், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீதர் வேம்பு ஏஐ என்னும் புரட்சி மரபான வேலைகளை மீட்டெடுக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே தலைகாட்டியதற்கே சிலபல நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்துள்ளார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ஜோஹோ கார்ப்பரேஷன் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு என்னும் புரட்சி மரபான வேலைகளை மீட்டெடுக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டதாவது,
“இந்த AI புரட்சியின் தாக்கங்கள் என்ன? மனிதர்கள் என்ன வேலைகளைச் செய்வார்கள்? விந்தையாக பாரம்பரிய வேலைகள் புத்துயிர் பெறும் சாத்தியம் உள்ளது. அது நல்ல வாங்கும் திறன் கொண்ட சம்பளத்தையும் உருவாக்கலாம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், உற்பத்தி தானியங்கியாகும் போது பொருட்கள் மற்றும் சேவைகள் மலிவாகும்,” என்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
இது அடிப்படைப் பொருளாதார கோட்பாடுகளுக்கு முரணானது என்று ஏற்கெனவே பல பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். முதலில் உற்பத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி ஆனால் பல வேலைகள் பறிபோகும், அப்படியிருக்கையில் எப்படி பாரம்பரிய வேலைகளை மீட்டெடுக்கும்? ஒருவேளை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலக்கட்ட வேலைகளை மீட்டெடுக்குமா? அப்படி மீட்டெடுக்க அந்த வேலைகளுக்கான பயிற்சி எங்கு கிடைக்கும், எங்கு இருக்கும்? மீண்டும் பட்டறைத் தொழில் உயிர் பெறுமா? போன்ற கேள்விகளையெல்லாம் தாண்டி பாரம்பரிய வேலைகள் புத்துயிர் பெறும் என்று ஸ்ரீதர் வேம்பு கருதுவது பொருளாதாரக் கோட்பாடு, தொழிற்துறை நடைமுறைகளின் வரலாற்றின் படி தவறு என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அவர் மேலும் தன் எக்ஸ் தளப் பதிவில் கூறும்போது, பாரம்பரிய வேலைகள் என்பதை விவரிக்கிறார்,
“உதாரணமாக, மண், நீர் மற்றும் வேளாண் பண்ணைகளை கவனித்துக் கொள்பவர்கள், கண்ணியமான கூலியைப் பெறுகிறார்கள். ஏனென்றால், இயற்கைக்கு ஏற்ற சிறிய அளவிலான பண்ணை உணவுகளுக்கு மக்கள் நல்ல விலை கொடுக்க விரும்பலாம். இதேபோல், உள்ளூர் விழாக்களில் பல்வேறு கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். AI அதைச் செய்ய முடிந்தாலும், அதை செயற்கை நுண்ணறிவு செய்து விட யாரும் விரும்ப மாட்டார்கள். சிறந்த ஆசிரியர்கள் மதிப்புமிக்கவர்கள் - மனித ஆசிரியர்கள் AI-ஐப் பயன்படுத்துவார்கள், ஆனால் குழந்தைகள் இன்னும் மனிதனைத்தான் விரும்புகிறார்கள்.“
சமீபத்திய ஆண்டுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளில் ஒரு பெரிய ஏற்றம் உள்ளது, பதிவுசெய்யப்பட்ட இசையின் எல்லையற்ற தேர்வு கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைக்கிறது. நேரடி கச்சேரி அனுபவத்தை மனிதர்கள் விரும்புகிறார்கள். எனது கருத்து என்னவென்றால், தொழில்நுட்பம் பல வேலைகளை மாற்றுவதால், முன்பு இடம்பெயர்ந்த வேலைகள் மீண்டும் தோன்றக்கூடும் என்பதே.
"இன்று தொழில்நுட்பத்தில் செய்யப்படும் மிகப்பெரிய முதலீடு "சேவையே-மென்பொருளாக" என்ற துறையில் ஏற்பட்டுள்ளது அல்லது அதை எளிய மொழியில் சொல்வதானால், வேலை செய்யும் மனிதர்களை AI மாற்றுகிறது." AI-பாரா-லீகல், AI கால் சென்டர் முகவர்கள், AI கணக்காளர்கள், AI வீடியோ தயாரிப்பு வல்லுநர்கள், AI மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பல," என்று வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்யும்.
அதன் ஒரு பகுதி அரசியல் பொருளாதாரக் கேள்வியும் கூட - செயற்கை நுண்ணறிவின் உற்பத்தித் திறன் விவசாயிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது? என் கருத்துப்படி தவறான பதில் உலகளாவிய அடிப்படை வருமானம் என்பதை நிர்ணயிப்பதுதான். உலகளாவிய அடிப்படை வருமானம் என்பதை ஏற்றுக்கொள்வது அரசியல் பொருளாதாரத்தின் தோல்வியை குறிக்கும். அடிப்படை உலகளாவிய வருமானத்தை விடவும் சிறப்பாக எங்களால் செய்ய முடியும்.
"உலகளாவிய அடிப்படை வருமானம் என்பதை விட சிறப்பான முறையில் வருமானம் விநியோகப்பட முடிய வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு என்னும் துறை ஒருசிலர் நிபுணர்கள் கையில் மட்டுமே இருக்கக் கூடாது, செயற்கை நுண்ணறிவு ஏகபோக உரிமையை மறுத்து விடுங்கள் சரியாகி விடும்,” இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
'இந்தியாவுக்கு தேவை 100 கோடி டாலர் வருவாய் கொண்ட நிறுவனங்கள்' – ஸ்ரீதர் வேம்பு கருத்து!