ஆதரவற்ற குழந்தைகளுக்கு வெளிச்சமாய் இருக்கும் சென்னை அமைப்பு!
சமூகத்திற்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உள்ளது. அக்கேள்விக்கு பதிலாய் பிறந்தது தான் நண்பர்கள் குழுவால் துவங்கப்பட்ட ’ரஞ்சிதம் க்ரூப்’ என்னும் அரசு சாரா தன்னார்வலர் அமைப்பு.
சமூகத்திற்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உள்ளது. ஒரு சிலர் அந்த கேள்விக்கான விடைக்காணும் பாதையை ஏற்படுத்திக் கொள்கின்றனர், ஒரு சிலர் சூழ்நிலையின் காரணமாக விட்டுவிடுகின்றனர். அந்த வகையில் இப்படி ஒரு கேள்விக்கு பதிலாய் பிறந்தது தான் நண்பர்கள் குழுவால் துவங்கப்பட்ட ’ரஞ்சிதம் க்ரூப்’ என்னும் அரசு சாரா தன்னார்வலர் அமைப்பு.
’ரஞ்சிதம் க்ரூப்’ சமுதாயத்தில் ஆதரவற்று, ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, உணவு என வெளிச்சமாய் நிற்கும் ஓர் அமைப்பு. இவ்வமைப்பை அருண் தனது நண்பர்களுடன் இணைந்து 2010இல் துவங்கினார், கல்லூரி படிக்கும்பொழுதே இதுப்போன்ற ஒரு முயற்சியை கையில் எடுக்க முக்கியமான காரணம், ’நாம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம்’ என்ற கேள்வி தான்.
“எனக்கு என் பெற்றோர்கள் செய்தார்கள், இல்லாதவர்களுக்கு யார் செய்வார்கள் என்ற கேள்வி இருந்தது. என்னால் முடிந்தவரை சமூகத்திற்கு எதோ ஒரு வகையில் உதவ வேண்டும், தனியாக முடியாது என நண்பர்கள் குழுவோடு இணைந்து துவங்கினோம்,” என்கிறார் அருண்.
இதனால் முதலில் அருகில் இருக்கும் ஒரு குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு அங்கு இருக்கும் சூழல் என்ன? என்ன தேவை என்பதை அறிந்துக்கொண்டனர்.
“ஒரு பள்ளி, கல்லூரி என எடுத்துக்கொண்டால் அங்கு சிறந்த கல்வி வழங்கப்படும், ஆனால் இது போன்று இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த அளவு கல்வி கிடைப்பதில்லை. இதனால் முதலில் கல்வி பயிற்சியில் துவங்கினோம்.”
தமிழ் வழிக் கல்வியை படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுகொடுக்க துவங்கினோம், பின் கணினி அறவியல் போன்ற பாடங்களை எடுத்து வார இறுதியில் அந்த காப்பகத்திற்கு சென்று கற்றுக் கொடுக்க துவங்கியதாக தெரிவிக்கிறார் அருண். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சில காப்பகங்களை அணுகி அங்கிருக்கும் நிலைமைக்கு ஏற்றவாறு தங்கள் பாடத்திட்டத்தை அமைத்து பாடம் எடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள் குழு.
“ஒரு காப்பகதிற்குள் சென்று பார்த்த பிறகு தான் தெரிகிறது இவர்களுக்கு தேவை கல்வி மட்டுமல்ல, ஊட்டச்சத்தான உணவும் கூட...”
இதனால் கல்விக்காக துவங்கிய தங்களது அமைப்பை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். வழக்கமாக ஒரே உணவை உண்ணும் குழந்தைகளுக்கு மாற்றம் ஏற்படுத்த மாதம் ஒரு முறை ’உபசரிப்பு’ என்னும் நிகழ்வை நடத்தி ஊட்டசத்தான விருந்தை வழங்குகின்றனர்.
எல்லா காப்பகத்திற்கும் தங்கள் உதவிக்கரத்தை இக்குழு நீட்டுவதில்லை; எங்கு இவர்களது தேவை அதிகமாக இருக்கிறதோ அவ்விடத்தை ஆராய்ந்து உதவுகின்றனர்.
சென்னையில் 7 காப்பகங்களை எடுத்துக்கொண்டு கல்வி மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். எந்த உதவியும் காப்பகத்திற்கு செல்லாமல் நேரடியாக குழந்தைகளை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது இக்குழு. 10 நபர்களோடு துவங்கிய இவமைப்பில் 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். தங்கள் சேவைக்காக நிதி உதவி அளிக்கவும் நன்கொடையாளர்களை பதிவுசெய்து வைத்துள்ளனர்.
கல்வியும் உணவும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கக் கூடிய அடிப்படைத் தேவை, இதை தாண்டி என்ன வேண்டும் என்று யோசிக்காமல் அக்குழந்தைகளுக்கான ஆசைகள் மற்ற குழந்தைகள் போல் இருக்கும் என்பதை உணர்ந்து “பயணம்” என்னும் நிகழ்வை செய்துவருகின்றனர்.
“காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் காப்பகத்தை தவிர மற்ற இடங்கள் பரிட்சியம் இருக்காது. இதனால் வருடத்திற்கு ஒரு முறை ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறோம்,” என்கிறார்.
ஊர் சுற்றி பார்ப்பது பல குழந்தைகளின் ஆசையாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடுவது, விளையாட்டு பொம்மை வாங்குவது போன்ற ஆசைகளும் இருக்கும். இதற்காக குழந்தைகளின் ஆசைகளை கேட்டு நிறைவேற்றுகிறது இவ்வமைப்பு.
“இலவசமாக ஒரு பொருள் கிடைத்தால் அதற்கு மதிப்பு தெரியாது, அதனால் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியை நடத்தி அவர்கள் திறமையை வெளிப்படுத்தச் சொல்லி அதற்கு பரிசாக அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை வழங்குகின்றனர்.”
சென்னை மட்டும் இன்றி பல கிராமங்களில் படிப்பிற்கு நிதி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றனர். இதை தவிர்த்து வருடாவருடம் ஊரக பள்ளியில் போட்டிகள் நடத்தியும் குழந்தைகளை ஊக்குவிக்கின்றனர்.
மேலும், மரங்கள் நடுவது, பொது இடங்களை சுத்தம் செய்வது போன்ற பிற சமூக வேலைகளையும் அக்கறையுடன் செய்துவருகிறது இந்த பட்டாளம். இதற்காக தனி அலுவலகம், மாதம் இரு முறை சந்திப்பு என்று நேரத்தை ஒதுக்கி ஈடுபடுகின்றனர்.
முகநூல்: ரஞ்சிதம் குழு