டிசிஎஸ் நிகர லாபம் 9 விழுக்காடு உயர்வு- சம்பள உயர்வு அறிவிப்பு!
2024-ம் ஆண்டின் 4-வது காலாண்டில் டிசிஎஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிகர லாபம் 9% அதிகரித்துள்ளது. வருவாய் 3.5% அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளது டிசிஎஸ்.
2024-ம் ஆண்டின் 4-வது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-இன் நிகர லாபம் 9% அதிகரித்துள்ளது. வருவாய் 3.5% அதிகரித்துள்ளது. இதனையடுத்து, ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளது டிசிஎஸ்.
2024 நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ.12,434 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.11,392 கோடி ஆக இருந்தது. அதே போல், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.61,237 கோடி. கடந்த ஆண்டின் இதே காலத்தில் வருவாய் ரூ.59,162 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
13.2 பில்லியன் டாலர் மொத்த ஒப்பந்த மதிப்புடன் (TCV) Q4 ஐ முடித்ததால், நிறுவனம் அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தைப் பற்றி நேர்மறையானதாகவே இருந்தது. மொத்த ஒப்பந்த மதிப்பு என்பது கையில் உள்ள சாத்தியமான புரோஜெக்ட்களின் அளவீடு ஆகும், இருப்பினும் இவை அனைத்தும் வருவாயாக மாறும் என்று கருதுவதற்கிடமில்லை.

நிறுவனத்தின் செயல் திறன் குறித்து டிசிஎஸ் தலைமைச் செயலதிகாரி கே.கீர்த்திவாசன் கூறும்போது,
“எங்களின் வணிக மாதிரியின் வலிமை மற்றும் செயல்பாட்டின் சிறப்பை உறுதிப்படுத்தும் வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளோம். 26% ஆபரேட்டிங் லாபத்துடன் நான்காம் காலாண்டை ஒரு வலுவான நிலையில் நிறைவு செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
மேலும், நிச்சயமற்ற ஒரு வணிகச் சூழலில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வர்த்தகம் நிச்சயம் முன்னேற்றமடையும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடினமான பரந்த பொருளாதாரச் சூழல், டிசிஎஸ் -இன் மிகப்பெரிய வணிக உயர்ச்சியைக் கொடுக்கும் BFSI-யை எதிர்மறையாக பாதித்தது, இது அதன் வருவாயில் 33% பங்களிக்கிறது. ஆற்றல், வளங்கள், பயன்பாடுகள், உற்பத்தி மற்றும் சுகாதார புரோஜெட்களும் வளர்ச்சியைப் பதிவு செய்தன.
சந்தையைப் பொறுத்தவரையில் வட அமெரிக்கப் பிரிவு 2.3% பின்னடைவு கண்டது. பிரகாசமான இடங்கள் என்றால் இங்கிலாந்து, இந்தியாதான். இங்கிலாந்து பிரிவு 15.7%-ம், இந்தியப் பிரிவு 37.9%ம் வளர்ச்சி கண்டன.

”டிசிஎஸ் நிறுவனத்தின் சி.எப்.ஓ சமீர் செக்காரியா கூறும்போது, 2024-ம் ஆண்டு எங்களது கட்டுக்கோப்பான அணுகுமுறையினால் இந்தத் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் லாபத்தை ஈட்ட முடிந்தது. ஒரு சவாலான சூழலில், ஊழியர்களின் திறன்களை மறுசீரமைத்தல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் எங்களின் நீண்ட கால முதலீடுகளைத் தொடர்ந்து செய்தோம். லாபத்துடன் கூடிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பிடிக்க, செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையை நாங்கள் தொடர்ந்து செலுத்துவோம்,” என்றார்.
டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வையும், அதிக செயல்திறன் கொண்டவர்களுக்கு இரட்டை இலக்க உயர்வையும் அறிவித்துள்ளது. மார்ச் 31, 2024 இன் இறுதியில் ஐடி நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 601,546 ஆக இருந்தது, ஒரு வருடத்தில் 13,249 பணியாளர்கள் குறைக்கப்பட்டனர்.