1984ல் கிடைத்த ஐடி பணி; நிராகரித்த ஐஏஎஸ் அதிகாரி - இணையத்தில் வைரலாகிய டிசிஎஸ் ஆஃபர் லெட்டர்...
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது இன்றைய இளம் பட்டதாரிகள் பலரது கனவு. 40 ஆண்டுகளுக்கு முன்பு டிசிஎஸ் எவ்வளவு சம்பளம் அளித்திருக்கும் ஏதேனும் ஐடியா உள்ளதா? 1984ம் ஆண்டில் கிடைத்த டிசிஎஸ் பணியை நோ சொன்னவர் பகிர்ந்த அவரது ஆஃபர் லெட்டர் இணையத்தில் வைரல்.
இந்தியாவின் முன்னணி கார்பரேட் நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது இன்றைய இளம் பட்டதாரிகள் பலரது கனவு. இந்நிலையில், நல்ல சம்பளத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த டிசிஎஸ்-ல் பணிபுரியும் வாய்ப்பை வேண்டாம் என்று உதறி தள்ளியுள்ளார் ஒருவர். அதுவும், இப்போதில்லை 1984ம் ஆண்டில்...
வாட் என வியக்க வைக்கும் அந்த டிசிஎஸ்-ன் ஆஃபர் லெட்டரையும், பணி மற்றும் சம்பள விவரங்களுடன் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட, அப்பதிவு இணையத்தில் வைரலாகியது.
ராஜஸ்தான் கேடரில் 1984ம் ஆண்டு யுபிஎஸ்சி-ல் தேர்வாகியவர் ரோஹித் குமார் சிங். ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அவர் ஐஐடியில் படித்தவர். ஐஐடி பிஹெச்யூ-வில் படிக்கும் இப்போது கேம்பஸ் இன்டர்வியூவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரிதாகவே காணப்பட்ட நிலையிலும், கார்ப்பரேட் பணிக்கு அப்போது மக்கள் மத்தியில் சமூகத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போதே, அவருக்கு மாதம் சம்பளமாக ரூ.1,300 வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஆனால், ரோஹித் அந்த வாய்ப்பை நிராகரித்து யுபிஎஸ்சி தேர்வில் கவனம் செலுத்தி அதில் தேர்ச்சியும் பெற்றார். ஐஏஎஸ் அதிகாரியாக நாட்டிற்காக பணியாற்றத் தொடங்கினார்.
1989ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த அவருக்கு மாதம் ரூ.2,200 சம்பளம் வழங்கப்பட்டது. 35 ஆண்டுகள் ஐஏஎஸ் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், நாஸ்டால்ஜியா நினைவுகளில் மூழ்கி தனக்கு கிடைத்த முதல் வேலையான டிசிஎஸ் ஆஃபர் லெட்டரை எக்ஸ் தளத்தில் பதிவிட, 40 ஆண்டுகளுக்கு முன்பு டிசிஎஸ் எவ்வளவு சம்பளம் அளித்திருக்கும் என்ற ஆர்வம் இணையவாசிகளிடம் அதிகரித்து, அப்பதிவு வைரலாகியது. இதுவரை அப்பதிவை 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் அப்பதிவை பார்வையிட்டுள்ளனர்.
"நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் IIT BHU-வில் கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய முதல் வேலை மும்பை டிசிஎஸ்-ல் கிடைத்தது. மாதம் ரூ.1,300 சம்பளம் தருவதாக கூறினர். அப்போது அது ஒரு பெரியத் தொகையாக கருதப்பட்டது," என்று நினைவு கூர்ந்தார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
நரிமன் பாயிண்டில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தின் 11வது மாடியில் கடலை ரசித்துக் கொண்டே பணிபுரிவது எவ்வளவு மயக்கம் அளிக்கும் என்பதை பகிர்ந்து கொண்டார். அத்துடன் டிசிஎஸ் அளித்த ஆஃபர் லெட்டரை புகைப்படம் எடுத்து பதிவிட, எக்ஸ் தளவாசிகள் கமெண்ட் பகுதியில் டிசிஎஸ் வேலை குறித்து ஃபன்னான உரையாடலைத் துவக்கினர்.
அப்பதிவின் கீழ் ஒரு பதிவர், ஐஏஎஸ் அதிகாரியாக உங்களது முதல் சம்பளத் தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு, ரோஹித் ரூ.2,200 என்று பதிலளித்துள்ளார். மற்றொரு பயனர் 50ஆண்டுகளுக்கு முன்பு 1936ம் ஆண்டில் அவருடைய தந்தைக்கு வந்த டாடா நிறுவனத்தின் ஆஃபர் லெட்டரை பகிர்ந்தார். அடுத்தடுத்து, பல மூத்த பயனர்கள் 80களில் வாங்கிய முதல் வேலை மற்றும் சம்பளத்தை பகிர்ந்து கொண்டு நாஸ்டால்ஜியா நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.