Neu Flash - விரைவு வர்த்தகத்தில் நுழையும் டாடா டிஜிட்டல்!
மளிகை சாமான்கள் மட்டுமல்லாது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் வகைகளையும் நியூ ஃபிளாஷ் வழங்கவிருக்கிறது.
Neu Flash உடன் விரைவான வர்த்தகத்தில் டாடா டிஜிட்டல் நுழைகிறது. டாடா டிஜிட்டலின் சூப்பர் செயலி டாடா நியூ-வில் இந்த நியூ ஃபிளாஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. இது தொடர்பாக யுவர்ஸ்டோரி ஊடகம் டாடாவுடன் தொடர்பு கொண்ட போது டாடா டிஜிட்டல் உடனடியாக பதில் எதையும் கூறவில்லை.
முதன் முதலில் நியூ ஃபிளாஷ் பற்றி தி இகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. மளிகை சாமான்கள் மட்டுமல்லாது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் வகைகளையும் நியூ ஃபிளாஷ் வழங்கவிருக்கிறது. சந்துபொந்துகளுக்கெல்லாம் டெலிவரி செய்யும் வாய்ப்புக் கொண்ட ஹைபர் லோக்கல் செயல்பாடுகளைக் கொண்ட பிக் பாஸ்கெட்டுடன் இதுவும் இணைக்கப்படவுள்ளது.
பிக்பாஸ்கெட் ஏற்கனவே வலுவான வர்த்தகப் பிணைப்புக் கொண்ட மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் இந்த நியூ ஃபிளாஷ் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக விவரம் தெரிந்த ஒருவர் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார். பிக்பாஸ்கெட்டில் அழகு சாதனப் பொருட்கள் ஒரு வகையாக ஏற்கனவே இருப்பதால், சோதனைக்காக டாடா க்ளிக் காலணிகளைக் கொண்டு வரப் பார்த்து வருகிறது.
Big Basket-இன் ஹைப்பர்லோகல் டெலிவரி செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது Neu Flash என்பதால் முதலில் நீண்ட நாள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களும் தீவிர விரிவாக்க முயற்சியில் நிதி ஆதாரங்களைத் திரட்டி வருகின்றன. ஆதித் பலிச்சா தலைமையிலான Zeptoplans கடந்த ஆறு மாதங்களில் $1 பில்லியன்களை திரட்டியுள்ளது. மீண்டுமொரு சுற்று நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது.
பிளிங்கிட் மூலம் விரைவுகதி வர்த்தகத்தில் செயல்படும் Zomato நிறுவனத்தின் போர்டு, 1 பில்லியன் டாலர்களை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில், முதல் பங்கு வெளியீட்டிற்குத் தயாராகி வரும் Swiggy இந்த ஆண்டின் இறுதிக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிட தயாராகி வருகிறது.