{மாற்றத்துக்கான வேட்பாளர்} வந்தவாசி தொகுதியில் கோல் அடிக்க விரும்பும் இளம் வேட்பாளர் முரளி சங்கர்!
கால்பந்தாட்ட வீரராக , பயிற்சியாளராக வெளிநாடுகளில் பணிபுரிந்தவர் அரூர் அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த முரளி சங்கர். ‘அரசியல், விளையாட்டு என இரண்டுமே ஒரு மனிதனை ஒழுக்கம் தவறாமல் நடக்க வழி நடத்தும்’ என்ற நம்பிக்கையோடு பாமகவில் சேர்ந்து வந்தவாசி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
தமிழக தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர்களில் ஒருவர் தான் தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத்திற்க்குட்பட்ட செங்குட்டை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த முரளிசங்கர். வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்து, விளையாட்டுத் துறையில் சாதித்தவர், இன்று பாமக சார்பில் வந்தவாசி வேட்பாளராகி இருக்கிறார்.
“ஒரு வேளை பாலுக்கே வழியில்லாமல் வறுமையில் தான் வாழ்ந்தேன். அந்த வறுமையின் வலி உணர்ந்தவன் நான். என்னை போன்ற ஏழைகளின் வலி எனக்கு நன்றாக் தெரியும். அவர்களின் வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கு உதவி செய்திட நல்ல அரசியல் கட்சி பாமக-வில் சேர்ந்து என்னால் முடிந்த சமூகப் பணிகளை செய்து வருகின்றேன்,” என தன் அரசியல் பிரவேசத்திற்கான காரணம் பற்றிக் கூறுகிறார் முரளிசங்கர்.

விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர், இன்று அரசியலில் குதித்து வேட்பாளராகி இருக்கிறார். தனது விளையாட்டுத் துறை அனுபவம் நிச்சயம் அரசியலில் கை கொடுக்கும் என நம்புகிறார் முரளி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளால் கவரப்பட்டு பாமக கட்சியில் இணைந்துள்ளார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு தனது இருபத்தாறாவது வயதில் தருமபுரி மாவட்டம் அரூர் சட்டசபைத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் முரளி சங்கருக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் சக மாணவர்களால் கால்பந்து விளையாட தகுதியற்றவர் என ஓரம் கட்டப்பட, பின்னர் அதனையே சவாலாக எடுத்துக் கொண்டு, அத்துறையில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டியவர்.
தனது பத்தாவது வயதிலிருந்து Liverpool Football Club-ன் தீவிர ரசிகரான முரளி சங்கர், 17 வயதில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2007-ல் பெங்களூருவில் Bangalore Kickers FC என்ற கிளப்பில் சேர்ந்து, அந்த அணிக்காக ஒரே சீஸனில் 14 கோல்களை அடித்துள்ளார். அதன் பிறகு எம்பிஏ படிப்பதற்காக தலைநகர் டெல்லிக்குச் சென்றவர், அங்கு Delhi Kop FC க்காக விளையாடியுள்ளார்.
இடையில் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்பட, தனது கால்பந்துக் கனவு அவ்வளவு தான் என நினைத்துள்ளார். ஆனால், விளையாட்டுத்துறை அவரை விடுவதாக இல்லை. பிரெஞ்சு கால்பந்து கிளப்பில் முக்கியப் பதவியில் அமர்ந்தார். ஆறுமாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போதும் வாழ்க்கை அவருக்கான வேறு பாதையைப் போட்டு வைத்திருந்தது.

முரளி சொந்த ஊர் திரும்பி சூப்பர்மார்க்கெட் நடத்த வேண்டும் என அவரது பெற்றோர் விரும்பினார்கள். இதனால் 2015ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். சில மாதங்களிலேயே பாமகவின் அரசியல் பணியால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார்.
2016ம் ஆண்டே அவருக்கு அதே தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அத்தேர்தலில் வெற்றி வசப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக இம்முறை வந்தவாசி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கிராமம் தோறும் விளையாட்டு திடல் அமைத்து இளைஞர்களின் உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்து இருக்க உதவுவேன் என்ற உறுதிமொழியோடு பாமக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார் முரளி சங்கர்.

“மனிதனின் அடிப்படைத் தேவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இதைவிட முக்கியம் கல்வி இவை நான்கையும் கிடைத்திட வழி செய்வேன். மருத்துவர் அய்யா போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலோடு நல்ல அரசியல் நாட்டை தூய்மைபடுத்தும். விளையாட்டு உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்திருக்கும். அரசியல், விளையாட்டு இரண்டுமே ஒரு மனிதனை ஒழுக்கம் தவறாமல் நடக்க வழி செய்யும்,” என வந்தவாசி மக்களுக்கு சேவை செய்திட தனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்தத் தேர்தலைக் கருதுவதாகக் கூறுகிறார் முரளிசங்கர்.
வேட்பாளர் அறிமுகம்
முழு பெயர்: முரளி சங்கர்
கல்வித்தகுதி: எம்.பி.ஏ
கட்சி : பாமக
தொகுதி: வந்தவாசி
தகுதி: மாநில மாணவர் சங்க செயலாளர்
போட்டியாளர்கள்- எஸ்.அம்பேத்குமார் (திமுக), சுரேஷ் (மநீம), க. பிரபாவதி (நாதக), பி.வெங்கடேசன் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)