‘அக்காவை போல் வீட்டைவிட்டு ஓடிடுவேன் என என் படிப்பை நிறுத்திய பெற்றோர்’ - தடைகளை தகர்த்த மாணவியின் கதை!
எங்கே அக்காவைப் பார்த்து தங்கையும் அப்படியொரு காரியத்தை செய்துவிடுவாளோ? என்பதற்காக வலுக்கட்டாயமாக பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட சிறுமியின் கதை இது.
எங்கே அக்காவைப் பார்த்து தங்கையும் அப்படியொரு காரியத்தை செய்துவிடுவாளோ? என்பதற்காக வலுக்கட்டாயமாக பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட சிறுமியின் கதை இது.
நான் ஷ்ரதா கோடியாதர், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பகசரா பகுதியில் உள்ள ஹண்டர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவள். எங்களது குடும்பத்தில் மொத்தம் 8 பேர், 5 சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளோம். எனது பெற்றோர் குடும்பத்தை நடத்த விவசாயம் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தையே நம்பியுள்ளனர்.
நான் பாகசராவில் உள்ள சாஸ்திரி வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறேன். கூடுதலாக, பெண்களுக்கான IBM STEM திட்டத்திலும் சேர்ந்துள்ளேன். கொரோனா லாக்டவுன் தொடங்கியதில் இருந்தே எனது வீட்டின் நிலை தலைகீழாக மாறியது, என்னால், பள்ளிக்கோ, IBM STEM நடத்தும் வகுப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கல்வி, படிப்பு மற்றும் தொழில் தேர்வுகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சம வாய்ப்புகளை பெற முடியும் என்பதை நான் நம்புகிறேன். இன்றைய உலகில், பெற்றோர்கள் பெண்களை ஆதரிக்க வேண்டும், அதனால் அவர்கள் தங்கள் கனவுகளை அடைய மற்றும் வெற்றிகரமான பெண்களாக மாற முடியும்.
கொரோனா லாக்டவுனின் போது எனது அக்கா பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாள். எங்கே நானும் அதுபோல் செய்து, குடும்பத்திற்கு அவமானத்தை தேடி தந்துவிடுவேனோ என எனது அப்பா பயந்தார். அதனால் என்னை எந்த வகுப்புகளுக்கும் செல்ல விடாமல் தடுத்தார். எனது செல்போனை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டார். எனது நண்பர்களுடன் விளையாடுவதை கூட நிறுத்திவிட்டனர்.
இதைக் கேள்விப்பட்ட STEM ஃபார் கேர்ள்ஸ் திட்டத்தின் உதவியாளர் எனது பெற்றோரைச் சந்தித்து பேசினார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற எனது கனவை நான் எவ்வாறு அடையாளம் கண்டேன் என்பது பற்றியும், அதற்காக என் உள் வலிமை மற்றும் திறன்கள் எனக்கு எப்படி புலப்பட்டது என்பது பற்றியும் அவர் எனது பெற்றோருக்கு விளக்கினார். ஒரு மாணவியாக எனக்கு பெற்றோரின் ஆதரவு எப்படி தேவைப்படுகிறது, அவர்கள் எனது கல்வியை எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். அப்படி செய்தால் நானும் மற்ற பெண்களைப் போல் மருத்துவர், பொறியாளர், ஏன் ஒரு விஞ்ஞானியாக கூட வர முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
STEM ஃபார் கேர்ள்ஸ் திட்டத்தின் உதவியாளர் பேசியதைக் கேட்டதும் எனது அப்பா, அம்மா தங்களது தவறுகளை உணர்ந்து கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர். உடனே எனது பெற்றோர் ஒரு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தினர்.
என் பெற்றோரின் இந்த புதிய மாற்றம் எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. எனது நிலையை புரிந்து கொண்டு, என் பெற்றோருக்கு சரியான சமயத்தில் புரிய வைத்த Quest Alliance அமைப்பிற்கு எனது நன்றி.
என் பெற்றோர் மட்டும் ஆதரவு வழங்காமல் இருந்திருந்தால், கல்வியறிவு இல்லாமல் என் வாழ்க்கை இருளில் மூழ்கியிருக்கும்.
ஆங்கிலத்தில் - ஷ்ரதா கோடியாதர் | தமிழில் - கனிமொழி