IKEA-வில் விற்பனை ஆகும் மதுரை கைவினைப் பொருட்கள்!
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படும் Ikea அதன் சமீபத்திய பிரத்யேக தயாரிப்பு தொகுப்புகளுக்கு இண்டஸ்ட்ரீ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
ஸ்ரீதேவி மதுரையைச் சேர்ந்தவர். இவர் தினமும் காலை ஏழு மணிக்கு தன் வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்புகிறார். மதுரைக்கு அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள இண்டஸ்ட்ரீ (Industree) நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் இவர் பணிபுரிகிறார். இவருக்கு 8,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்கிறது. குடும்பச் செலவுகளுக்கும் இவரது ஏழு வயது மகனின் படிப்புச் செலவிற்கும் இந்தத் தொகை உதவுகிறது.
இவர் நெசவுப் பணியில் நிபுணத்துவம் பெற்றவர். தனக்குப் பணி வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறார்.
“இங்கு பணிபுரிவதால் எனக்கு வாழ்வாதாரம் கிடைப்பதுடன் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை நிர்வகிக்கவும் முடிகிறது,” என்றார்.
ஸ்ரீதேவி போன்றே நூற்றுக்கணக்கான பெண்கள் இங்கு பணிபுரிகின்றனர். 10,000 சதுர அடி கொண்ட இந்த மையத்தில் நெசவுப் பணி மட்டுமின்றி இயற்கையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு கிண்ணம், கூடை, குவளை போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.
இவர்கள் ஸ்வீடன் ஃபர்னிச்சர் பிராண்டான Hantverk தயாரிப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது Ikea-வின் பிரத்யேக தயாரிப்பு வகைகளுக்கானது. இதில் குஷன் கவர், த்ரோ, கூடைகள், கிண்ணங்கள், குவளைகள் போன்றவை வாழை இழைகள், கைகளால் தயாரிக்கப்படும் பேப்பர், பீங்கான், பருத்தி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து செயல்படுகிறது
தமிழ்நாட்டில் உள்ள மதுரை கோயில்களுக்குப் பிரபலம். அதுமட்டுமின்றி இந்தப் பகுதி ஜவுளி மற்றும் பருத்திக்கான மையமாகவும் விளங்குகிறது. இது தற்போது Ikea-வின் முக்கிய மையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு உள்ளூர் கைவினைஞர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
நீலம் சிப்பர் (Neelam Chhiber) இண்டஸ்ட்ரீ ஃபவுண்டேஷன் நிறுவனர். இந்நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. 2018-ம் ஆண்டு இந்நிறுவனம் அதன் பிராடக்ட் மையத்தை மதுரைக்கு மாற்றியது. இதன் பிரபல பிராண்ட் ‘மதர் எர்த்’. இநிநிறுவனம் 2008ம் ஆண்டு முதல் Ikea உடன் இணைந்து செயல்படுகிறது.
பெங்களூரு போன்ற ஈரப்பதமான பகுதியில் வாழை இழைகளைக் கையாள்வது கடினம் என்பதால் இண்டஸ்ட்ரீ உற்பத்தி மையம் மதுரைக்கு மாற்றப்பட்டது. இழைகளைத் தரமான பொருளாக மாற்ற மறு பயன்பாட்டிற்கு உட்பத்தாமல் போனால் அவை வீணாகிவிடும். அதுமட்டுமின்றி மதுரைப் பகுதியானது வாழைத் தோட்டத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் அவற்றை கொண்டு வருவதும் எளிதாகிறது.
இந்திய செயல்பாடுகள்
Ikea 2017-ம் ஆண்டு அதன் இந்திய சில்லறை வர்த்தகச் செயல்பாடுகளை ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த ஃபர்னிச்சர் பிராண்ட் பிரத்யேகமான தயாரிப்புகளை உருவாக்க சில காலமாகவே உள்ளூர் கைவினைஞர்களை இணைத்துக்கொண்டது. இது குறித்து Ikea India தகவல் தொடர்பு மற்றும் உள்துறை மேலாளர் மியா ஆல்சன் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் கூறும்போது,
“Ikea உலகம் முழுவதும் உள்ள அதன் ஸ்டோர்களுக்கு கடந்த 39 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இந்திய டிசைன் சார்ந்த தொகுப்புகளை உருவாக்க Ikea எண்ணற்ற இந்திய கைவினைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இந்தியாவில் இருந்து மூலப்பொருட்களை வாங்குவது மட்டுமல்லாது விற்பனைக்குத் தயார்நிலையில் இருக்கும் பொருட்களையும் வாங்கி உலகளவில் செயல்படும் ஸ்டோர்களில் விற்பனை செய்கிறது. கம்பளம், தரைவிரிப்புகள், ஜவுளி, ஃபர்னிச்சர் மற்றும் இதர வீட்டு அலங்காரப் பொருட்கள் இதில் அடங்கும். சமீபத்தில் தனித்துவமான இந்திய வடிவமைப்பு கொண்ட தொகுப்புகளை உருவாக்க Ursprungling, Innehallsrik, Anglatara போன்ற இந்திய கைவினைஞர்களுடன் Ikea பணியாற்றியுள்ளது,” என்றார்.
Hantverk பிராண்டைப் பொறுத்தவரை வடிவமைப்புகளை இறுதி செய்வது, முன்வடிவம் உருவாக்குவது, இறுதி நிலை உற்பத்தி என 18 மாதங்கள் நீண்ட செயல்முறையைத் தொடர்ந்து இண்டஸ்ட்ரீ உடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.
“இண்டஸ்ட்ரீ தரப்பில் முதலில் எங்களுக்கு முன்வடிவம் அனுப்பப்பட்டது. அவற்றை இறுதியாக முடிவு செய்த பின்னர் அவர்கள் தயாரிப்புப் பணியைத் தொடங்கினார்கள். அந்தத் தயாரிப்புகள் தற்போது ஸ்டோர்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது,” என்று மியா விவரித்தார். இந்நிறுவனம் இந்தத் தொகுப்புகளுக்காக தாய்லாந்து, ஜோர்டன், ரோமானியா ஆகிய பகுதிகளில் உள்ள கைவினைஞர்களுடனும் இணைந்து செயல்படுகிறது.
இண்டஸ்ட்ரீ நிறுவனத்தைப் பொறுத்தவரை Ikea போன்ற பிராண்டுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அதிகளவிலான பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.
“நான் தொழில்துறை வடிவமைப்பு படித்து முடித்தபோது இந்திய வடிவமைப்பு குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன். எனவே பாரம்பரிய கலை குறித்து தெரிந்துகொள்ள நாட்டின் தொலைதூர கிராமங்களுக்குச் சென்றேன். இந்தத் துறை அழிந்து வருவதை என்னுடைய பயணம் எனக்கு உணர்த்தியது. இதற்கு முக்கியக் காரணம் இந்த கைவினைஞர்களின் வாடிக்கையாளர்கள் இவர்களது சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. அதைத் தாண்டி மற்ற வாடிக்கையாளர்களை சென்றடைய முடியாத சூழல் காணப்பட்டது. இதுவே இண்டஸ்ட்ரீ தொடங்க உந்துதலளித்தது,” என்றார் நீலம்.
பெரியளவிலான சந்தையை அணுகுதல்
காலம் செல்லச் செல்ல பி2சி சந்தையில் அதிக அளவில் விற்பனை சாத்தியமில்லை என்பதையும் கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அதிக வருவாய் கிடைப்பதை உறுதிசெய்ய வளர்ச்சியடைவது அவசியம் என்பதையும் இண்டஸ்ட்ரீ நிறுவனர் உணர்ந்தார்.
“Ikea உடன் பணிபுரிவது நிலையான பணியையும் வருவாயையும் உறுதிசெய்தது. அதுமட்டுமின்றி இந்த பார்ட்னர்ஷிப் மூலம் உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட செயல்முறைகள் பெரும்பாலான சிறு நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வழிவகுத்தது. நாங்கள் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 6,000 முதல் 8,000 வரை குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை, கிராஜுவிட்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறோம்,” என நீலம் விவரித்தார்.
Ikea நிறுவனத்தின் குழு, தயாரிப்பு மற்றும் பரிசோதனை முறை குறித்து பெண்களுக்கு பயிற்சியளிக்கிறது. பெண்கள் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மேலாண்மை மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. தயாரிப்புகள் உலகம் முழுவதும் உள்ள Ikea ஸ்டோர்களிலும் பிராண்டின் வலைதளத்திலும் கிடைக்கிறது.
Hantverk பிரத்யேக தொகுப்புகளுக்கான முதன்மை வடிவமைப்புகளை Ikea வடிவமைப்பாளரான lina Vuorivirta உருவாக்குகிறார். இது நவீன ஸ்காண்டிநேவியன் வடிவமைப்பிற்கு உள்ளூர் இந்திய கைவினைஞர்கள் உயிர்கொடுக்கும் முயற்சி ஆகும். இந்த தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்க வடிவமைப்பாளர் சமூக தொழில் முனைவோர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
“சமூக தொழில்முனைவோர் முன்வடிவத்தை உருவாக்கி அதை உறுதிசெய்ய வடிவமைப்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். தர பரிசோதனை செய்யப்பட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோர்களுக்கு அனுப்பப்படுகிறது. இண்டஸ்ட்ரீ நிறுவனத்தைப் பொறுத்தவரை வாழை இழைகள் கொண்டு தயாரிக்கப்படும் கூடைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. பேட்டர்ன்களைத் தீர்மானித்தல், தேவையான பொருட்களைத் தேர்வு செய்தல், நெய்தல் என ஒவ்வொரு நிலையையும் தென்னிந்திய பெண் கைவினைஞர்கள் நேர்த்தியாக கையாண்டு தயாரிக்கின்றனர். கைவினைஞர்களையும் அவர்களது கலைத்திறனையும் நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்,” என்றார் மியா.
தற்சமயம் சுமார் 1,050 பணியார்களுக்கு இண்டஸ்ட்ரீ வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதில் 620 பெண்கள் கூடை பின்னுகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கிறார் நீலம்.
உள்ளூர் கைவினைஞர்கள், குறிப்பாக மதுரையின் திருப்பரங்குன்றத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா