Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நண்பரிடம் வாங்கிய 1000 ரூபாய் கடனை ரூ.2 கோடி மதிப்பு பங்குகளை வழங்கி திருப்பி செலுத்திய IDFC சிஇஒ வைத்தியநாதன்!

தனது நெருக்கடியான கால கட்டத்தில் உதவிய சில நண்பர்களுக்கு ரூ.5.5 கோடி மதிப்பிலான 7 லட்சம் ஐடிஎஃப்சி வங்கி பங்குகளை பரிசாக வழங்கி அசத்தியிருக்கிறார் ஐடிஎஃப்சி சிஇஓ வைத்தியநாதன்.

நண்பரிடம் வாங்கிய 1000 ரூபாய் கடனை ரூ.2 கோடி மதிப்பு பங்குகளை வழங்கி திருப்பி செலுத்திய IDFC சிஇஒ வைத்தியநாதன்!

Tuesday March 26, 2024 , 3 min Read

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது-

இந்தத் திருக்குறளின் பொருள் உற்ற காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும் என்பதாகும்.

அப்படி பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல், தனது நெருக்கடியான காலகட்டங்களில், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உதவி செய்த ஐந்து நண்பர்களுக்கு, தனது நன்றிக் கடனைச் செலுத்தும் விதமாக, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) வி.வைத்தியநாதன், ரூ.5.5 கோடி மதிப்பிலான 7 லட்சம் ஐடிஎஃப்சி வங்கி பங்குகளை வழங்கி இருக்கிறார்.

Vaidyanathan

இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில்,

“நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான வி.வைத்தியநாதன் ஐடிஎஃப்சியின் 7 லட்சம் பங்குகளை 5 பேருக்கு மார்ச் 21,2024 அன்று வழங்கியுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த நண்பர்கள்?

ராணுவ வீரராக இருந்து ஓய்வுபெற்றவர் சம்பத்குமார். இவரிடம் நீண்ட காலத்துக்கு முன்பு வைத்தியநாதன் ரூ.1,000 கடனாக வாங்கியுள்ளார். அதனைத் தற்போது நினைவில் கொண்டு, உற்ற சமயத்தில் உதவிய தன் நண்பருக்கு, பதில் நன்றியாக 2.5 லட்சம் பங்குகளை வைத்தியநாதன் வழங்கியுள்ளார். இதனை சம்பத் குமாரின் மருத்துவ தேவைகளுக்காக வைத்தியநாதன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, கனோஜியா என்ற நண்பர், வைத்தியநாதன் வீடு வாங்கும்போது சில உதவிகளைச் செய்துள்ளார். எனவே, அதற்கு நன்றிக்கடனாக, கனோஜியாவுக்கு 2,75,000 பங்குகளும், கூடுதல் பரிசாக 50,000 பங்குகளையும் சேர்த்து வழங்கியுள்ளார் வைத்தியநாதன்.

vaidyanathan

இதுதவிர, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கியதோடு, மனரீதியான ஆதரவும் அளித்ததற்காக நண்பர் சமீர் மாத்ரேவுக்கு 50,000 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகளையும், மயங் மிர்னால் கோஷ் என்ற நண்பருக்கு 75,000 பங்குகளையும் வழங்கி வைத்தியநாதன் தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

மார்ச் 21ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தில் இந்த பரிசுகளை அவர் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த பரிசுகள் மூலம் வைத்தியநாதனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித ஆதாயமும் பெறப்படவில்லை என்றும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையல்ல..

இப்படி வைத்தியநாதன் தனது நண்பர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவது இது முதன்முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை ஐடிஎஃப்சியி்ல் தன் கைவசமுள்ள மொத்த பங்குகளில் ஏறத்தாழ 40 சதவீத பங்குகளை, இப்படி தன் ஆரம்பகால வாழ்க்கையில் உதவி செய்த நண்பர்களுக்குத் தேடித் தேடி வழங்கி வருகிறார்  வைத்தியநாதன்.

2020ம் ஆண்டு தன்னுடைய பங்குகளை, 500 ரூபாய் கடன் வழங்கிய முன்னாள் கணித ஆசிரியர் ஒருவருக்கு வழங்கினார். அதாவது, வைத்தியநாதன் தனது உயர் படிப்புக்கு ஜார்க்கண்ட் மாநிலம் மெஸ்ராவில் அமைந்துள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் வாங்க, அவரது  கணித ஆசிரியரான குர்தயாள் சரூப் சைனி அப்போது ரூ.500 அளித்து உதவியுள்ளார். அதற்கு நன்றிக்கடனாகத்தான், ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சம் பங்குகளை தனது பள்ளி கணித ஆசிரியருக்கு வைத்தியநாதன் பரிசாக அளித்தார்.

வீட்டு பணியாளருக்கும் பரிசு

அதேபோல், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னிடமிருந்த 9 லட்சம் பங்குகளை 3.95 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, அதனை அவரது உடற்பயிற்சியாளர் மற்றும் வீட்டு வேலை செய்பவர் மற்றும் ஓட்டுநர் உட்பட ஐந்து பேருக்கு பரிசாக வழங்கினார். நண்பர்களுக்கு மட்டுமின்றி, மறைந்த தனது ஊழியர்களின் குடும்பத்திற்காகவும் அவர் நிறைய உதவிகளை செய்துள்ளார்.

வைத்தியநாதன் தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் 1% பங்குகளை வைத்திருக்கிறார், இதன் மதிப்பு சுமார் ரூ.550 கோடி ஆகும். இதுவரை தனது நண்பர்களுக்காக 80 கோடி ரூபாய் வரை வைத்தியநாதன் பரிசளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

vaidyanathan

குவியும் பாராட்டு

ஏற்றி விட்ட ஏணிகளை உயரத்திற்கு ஏறியதும் உதைத்துத் தள்ளும் மக்களுக்கு மத்தியில், வைத்தியநாதனின் இந்த நன்றியுணர்வு நெட்டிசன்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. வைத்தியநாதனின் இந்தச் செயல்கள் அவரது நல்ல மனதையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெருந்தன்மையான மனப்போக்கையும் வெளிப்படுத்துவதாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் பிறந்தவர்

வங்கித்துறையில் கோலோச்சி வரும் வைத்தியநாதன் சென்னையில் பிறந்தவர் ஆவார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அப்பாவுக்கு மத்திய அரசுப் பணி என்பதால், இந்தியாவில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முடித்துவிட்டு, மேஸ்ராவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் இளங்கலை பட்டமும், அதனைத் தொடர்ந்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது மேம்பட்ட மேலாண்மை படிப்பை முடித்தார்.

vaidyanathan

சிட்டி வங்கியில் தனது முதல் பணியைத் துவங்கினார் வைத்தியநாதன். 1990 முதல் 2000 வரை சிட்டி வங்கியின் நுகர்வோர் வங்கியில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவாக இருந்தார், மேலும் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

கேப்பிடல் ஃபர்ஸ்ட்

பல நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றிய வி.வைத்தியநாதன் 2012ல் சொந்தமாக நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி ஒரு NBFC அமைப்பில் பங்கு வாங்கி, இதன் பின் வாப்பெர்க் பின்கஸ் நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் கேப்பிடல் ஃபர்ஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

2018ல் ஐடிஎஃப்சி வங்கி மற்றும் கேப்பிடல் ஃபர்ஸ்ட் இணைப்பு அறிவிக்கப்பட்ட பின்பு ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ பதவியைப் பிடித்தார் வைத்தியநாதன்.

vaidyanathan

தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய வைத்தியநாதன், தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அணில் போல் உதவியவர்களைக்கூட நினைவில் கொண்டு, 2018ம் ஆண்டில் இருந்தே தனது பதில் நன்றிக்கடனைச் செலுத்தி வருகிறார்.

வைத்தியநாதனின் இந்த வளர்ச்சி வங்கித் துறையில் பணியாற்றி வரும் பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு அல்லாமல், உற்ற சமயத்தில் உதவியவர்களை எப்போதும் வாழ்க்கையில் மறக்கக்கூடாது என்ற நல்ல பாடத்தை அனைவருக்கும் உணர்த்துவதாகவும் உள்ளது.