'அம்மாவுக்காக படிச்சோம்' - ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்!
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சிவகங்கை மாவட்டம் கமலை கிராமத்தை எல்லோருக்கும் அடையாளப்படுத்தி இருக்கின்றனர் அரசுப் பள்ளியிலேயே படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ள ரவி மற்றும் நாகராஜ்.
உலகத்தை மாற்றக் கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி என்று கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறி இருக்கிறார் தென்ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. கல்வியே ஒருவருக்கான அடையாளத்தை உருவாக்கும், அது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் அடையாளப்படுத்தும் என்பதை உண்மையாக்கி இருக்கின்றனர், சிவகங்கை மாவட்ட மாணவர்கள்.
செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து கஷ்டப்படும் அம்மாவுக்காக விடாமுயற்சியுடன் படித்து நீட் தேர்வில் வென்று மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி இருக்கிறார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ். சாக்கோட்டை அருகே கமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமியின் 17 வயது மகன் நாகராஜ்.
மாற்றுத்திறனாளியான இவர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சொந்த ஊரிலேயே இருந்த ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை கற்றார். மேல்நிலைப் படிக்க வேண்டுமெனில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீர்க்கலைக்காடு அரசு மாதிரி பள்ளியில் தான் படிக்க வேண்டும்.
தினமும் பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லை, எனினும் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளில் சென்று 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வந்தார். நகரத்து மாணவர்களைப் போல படிப்பு ஒன்றே வேலை என்றெல்லாம் படிக்கவில்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டில் மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிப்பு செய்தும், விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்த்தும் நாகராஜ் படித்து வந்தார்.
பிளஸ் 2 தேர்வில், 435 மதிப்பெண்கள் பெற்ற நாகராஜை நீட் பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர் ஆசிரியர்கள். அவர்களின் வழிகாட்டுதல்படி, அமராவதி புதுார் உழவர் பயிற்சி மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இலவச 'நீட்' பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றார். இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்காக நடந்து முடிந்த 'நீட்' தேர்வில் 720க்கு 136 மதிப்பெண் எடுத்துள்ளார் நாகராஜ், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் இவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாகராஜ் எம்பிபிஎஸ் படிக்க இடம் பெற்றிருப்பது அவரின் குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த கிராமத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது-
“எனக்காக என்னுடைய அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களுக்காக நான் படிச்சு நல்ல நிலைக்கு வரனும்னு நினைச்சு படிச்சேன். முழுக்க முழுக்க அரசுப் பள்ளியில் தான் படித்தேன், ஆசிரியர்கள் வழிகாட்டுதலால நீட் தேர்வுலயும் என்னால வெற்றி பெற முடிஞ்சுது. என்னால சரியா நடக்க முடியாது அதுக்கு வைத்தியம் பாக்க மருத்துவமனைக்கு போனப்போ, காலை சரி பண்ண அதிக பணம் செலவாகும் உங்களால கட்ட முடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. பணம் இல்லாததால எனக்கு மருத்துவ உதவி கிடைக்கல, அதனால நான் மருத்துவம் படிச்சு என்னைப் போல இருக்குறவங்களுக்கு இலவசமா மருத்துவம் பாக்கனும்னு நினைச்சு படிச்சேன்,“ என்கிறார்.
நான் படிச்சு முதல் நிலைக்கு வற்றது மற்ற மாணவர்களுக்கும் உதாரணமா இருக்கும்னு என்னுடைய Headmaster ஊக்கப்படுத்துனாரு. எனக்காக மட்டும் இல்ல என்னைப் போன்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களால முடியலன்னு சோர்ந்து போயிடக்கூடாதுன்னு ஒரு சவாலா நீட் தேர்வை எழுதினேன், அதுல தேர்ச்சி பெற்று மதுரை மருத்துவ கல்லூரியில இடம் கிடைச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்று தெரிவித்துளளார் நாகராஜ்.
“என்னுடைய மகன் நல்லா இருக்கனும்னு தான் நான் செங்கல் சூளையில வேலை செஞ்சு, கூலி வேலைன்னு செஞ்சு பணம் சம்பாதிக்கிறேன். அவன் படிக்கனும் அதுக்காக நான் இன்னும் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிப்பேன். அவனுக்காக நான் இன்னும் உழைச்சு அவன படிக்க வைப்பேன். எங்களுக்கு சொந்தமா விவசாய நிலம் இல்லை, எங்க ஊர்ல நீர் பாசன வசதி, மின்சார வசதின்னு எதுவும் கிடையாது. அன்றாடம் வேலைக்கு போனா தான் எங்களுக்கு சாப்பாடு, ஆனாலும் என்னோட மகன் படிச்சு டாக்டராகி இந்த ஊர் மக்களுக்கு இலவசமா வைத்தியம் பாக்கனுங்கிறது தான் என்னோட ஆசை அது நிறைவேறி இருக்கு,” என்று நெகிழ்கிறார் நாகராஜின் தாயார்.
ஒரே கிராமத்திலிருந்து இரு நீட் தேர்ச்சியாளர்கள்
நாகராஜின் கமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான உடையப்பனின் 18 வயது மகன் ரவியும் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி இருக்கிறார். ரவியும் பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தவர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காத நிலையில் இரண்டாவது முறை முயற்சிக்குமாறு ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்து நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தனர்.
2வது முறை எழுதிய 'நீட்' தேர்வில் 597 மதிப்பெண் பெற்றதோடு, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ரவி.
“என்னுடைய அம்மா புற்றுநோயால இறந்துட்டாங்க, அவங்களோட இறப்பு எனக்கு பெரிய வலிய தந்துச்சு. எப்படியாவது படிச்சு நான் மருத்துவராகனுங்கிற எண்ணம் அப்போ தான் எனக்கு தோணுச்சு. அரசோட இலவச நீட் பயிற்சி எடுத்துகிட்டேன், ஆசிரியர்கள் தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டுதலும் நீட் தேர்வுல அதிக மதிப்பெண் எடுக்க உறுதுணையா இருந்துச்சு,” என்று ரவி தெரிவித்துள்ளார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பஸ் வசதி கூட இல்லாத நிலையில் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று, தங்கள் மருத்துவக் கனவை நனவாக்கியதை கிராம மக்களும், ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான சாலை, பஸ் வசதியை ஏற்படுத்தித் தந்தால் தங்களைப் போன்று பல மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் படிப்புகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர் இந்த சாதனை மாணவர்கள்.
நீட் தேர்வில் 639 மதிப்பெண் - டாக்டர் கனவை நினைவாக்கிய பூக்கடைக்கார் மகள்!