ரூபாய் நோட்டுகள் எதில் இருந்து தயார் செய்யப்படுகின்றது தெரியுமா?
பேப்பரைக் காட்டிலும் காட்டன் வலுவாக இருக்கும் என்பதால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கரன்சி தயாரிப்பிற்கு காட்டன் பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பர்ஸைத் திறந்து பார்க்காமலேயே உங்களால் சொல்லமுடியும் தானே? ஆனால், ஒரு கேள்விக்கு பர்ஸைத் திறந்து பார்த்தாலும் பலரால் பதில் சொல்ல முடியாது. அது என்ன கேள்வி என்கிறீர்களா?
ரூபாய் நோட்டு எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
நம்மில் பலர் இதென்ன கேள்வி பேப்பர்தானே என்று சொல்லுவோம். ஆனால் அது தவறு. பேப்பர் நீடித்திருக்கும் தன்மை கொண்டதல்ல. எனவே, ரூபாய் நோட்டுகள் காட்டன் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.
ஆம், நூறு சதவீதம் காட்டன் கொண்டே ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
பேப்பரைக் காட்டிலும் காட்டன் வலுவாக இருக்கும், எளிதில் கிழியாது. இந்த காரணத்தினால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கரன்சி தயாரிப்பிற்கு காட்டன் பயன்படுத்தப்படுகிறது.
காட்டன் இழைகளுடன் லினென் இழைகள் சேர்க்கப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும்போது காட்டனுடன் ஜெலட்டின் பிசின் சேர்க்கப்படுகிறது. இதனால் நோட்டுகள் நீடித்திருக்கும்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்துள்ளன. இதனால் கள்ள நோட்டுகளை எளிதாக அடையாளம் காண முடிகிறது. அதுமட்டுமல்ல ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை வழங்கும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே உள்ளது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, இதர பங்குதாரர்கள் போன்றோர் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு என்னென்ன மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் எந்த அளவிற்கு தேவைப்படும் என்பதை மதிப்பிடுவார்கள். அதைத் தொடர்ந்து அச்சகங்கள் மூலம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு பெறப்படும்.
ரிசர்வ் வங்கி தரமான நோட்டுகளை மக்களின் புழக்கத்திற்கு வழங்குகிறது. இந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றன. நல்ல ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படும்.
அழுக்கடைந்த, கிழிந்துபோன ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த உகந்ததல்ல என்பதால் அவை அழிக்கப்படும். இதனால் தரமான ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.