ஓய்வு ஊதியத்தில் ஓர் காட்டையே உருவாக்கிய ஆசிரியை: மரங்களை குழந்தைகளாக பாவிக்கும் தாயம்மாள்!
மரங்களை வெட்டித் தள்ளி மனைகளாக மாற்றும் இக்காலத்தில் தனது நிலத்தில் ஓர் காட்டையே உருவாக்கி, மரங்களைத் தனது குழந்தைகளைப் போல வளர்க்கும் இவரைப் போன்ற தாயம்மாக்கள் பெருகினால்தான் தமிழகம் பசுமையாகும்.
இன்று மழை வளம் குறைந்ததால் மரம் வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் திருப்பூர் போன்ற தொழில் வளம் உள்ள பகுதியில் தன்னுடைய ஓய்வூதியம், சேமிப்பு போன்றவற்றை பணம் கொழிக்கும் தொழிலில் போட்டு மேலும் பணமாக்க விரும்பாமல், நிலம் வாங்கி மரம் வளர்க்கும் எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.
விவசாயிகளுக்கு மட்டுமே இத்தகைய எண்ணம் வரும். ஆம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர், தன்னுடைய வாழ்நாள் உழைப்பு மற்றும் ஓய்வூதியம் என அனைத்து சேமிப்பையும் கொண்டு, தனியொரு பெண்ணாக இன்று ஓர் சிறு வனத்தையே உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஓய்வு பெற்ற ஆசிரியையான தாயம்மாள். தனது பெயருக்கேற்றவாறு தாய்மையுணர்வுடன் ஓர் வனத்தையே உருவாக்கி, அதில் உள்ள மரங்களையெல்லாம் ஓர் தாயைப் போல பார்த்து பார்த்து பராமரித்து வருகிறார்.

தான் வளர்த்த வனத்தில் தாயம்மாள்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
“அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், 37 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் இருந்துவிட்டு, 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நானும், எனது கணவர்
நாராயணசாமியும் இணைந்து சேமித்த பணத்தில் 10 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். கடும் வறண்ட பண்படாத நிலமாக இருந்த அப்பகுதியை கொத்தி, நிலத்தை பண்பட்ட நிலமாக மாற்றி, அதில் ஓர் பகுதியை தென்னந்தோப்பாக மாற்றினோம்,” என்றார்.
இந்நிலையில் 2003ம் ஆண்டு இவரது கணவர் உயிரிழந்தார். சில ஆண்டுகளில் இவரது மகனும் ஓர் விபத்தில் உயிரிழந்தார். கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டு பெரியார் காலனியில் உள்ள தனது சொந்த வீட்டில் தனி மரமாக இருந்துள்ளார்.
அப்போதுதான் வாழ்க்கையைப் பசுமையாக்க ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து எஞ்சியிருந்த நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு காடு வளர்க்க முடிவெடுத்தேன் என்கிறார்.
தற்போது 75 வயதான அவர் தனது மகள், மருமகன் மற்றும் பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும், ஓரிரு நாள்களுக்கு ஓர் முறை சென்று அவரின் தோட்டம் மற்றும் அங்கு வளர்ந்துவரும் மரங்களைப் பார்த்தால்தான் அவருக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

தாயம்மாள் | image courtesy- TheBetterIndia
தொழில் நகரமான திருப்பூர் நகரை பசுமையாக்கும் திட்டத்துடன் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் என்ற என்ஜிஓ நிறுவனத்தின் உதவியுடன் இவர் தனது தென்னந்தோப்பில் எஞ்சிய நிலத்தில் 2016ம் ஆண்டு சுமார் 220 மலைவேம்பு, மற்றும் 230 இதர மர வகைகள் என மொத்தம் 450 மரங்களை நட்டு, பராமரித்து வருகிறார். இவை இன்று வளர்ந்து ஓர் சிறு காடாக மாறியிருக்கிறது. இதுதவிர மேலும் பல்வேறு மூலிகைச் செடிகளையும் நட்டு வளர்த்து வருகிறார்.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் தோட்டத்தில் உள்ள ஆழ்குழாயில் கூட தண்ணீர் வற்றி விடும். அப்போதெல்லாம் காசு கொடுத்துதான் தண்ணீர் வாங்கி மரங்களுக்கு விடுவேன்.
தற்போதுகூட ரூ.80 ஆயிரத்துக்குத் தண்ணீர் வாங்கி, எனது மரங்களுக்கு பாய்ச்சியுள்ளேன் எனக் கூறும் தாயம்மாளின் தோட்டத்தில் இதுவரை ஓர் மரம் கூட பட்டுப்போனதில்லையாம். அந்தளவுக்கு ஓவ்வொரு மரத்தையும் கண்ணும்கருத்துமாக பராமரித்து வருகிறார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலாரைப் போல, எனது மரங்கள் அனைத்தையும் நான் எனது குழந்தைகளைப் போலவே வளர்த்துள்ளேன். அவை நீரின்றி வாடினால் என் மனம் வாடி விடும். அதனால் காசு செலவு செய்தேனும் தண்ணீர் வாங்கி பாய்ச்சுவேன். கடந்தாண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து தண்ணீர் பாய்ச்சினேன். மேலும், அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் வசதி கிடைக்க சொட்டுநீர் பாசன வசதியும் செய்துள்ளேன். மேலும், களை பறித்து, உரம் வைத்து, மருந்து அடித்து மரங்களைப் பாதுகாக்கிறேன் என்கிறார்.

தாயம்மாள் உருவாக்கிய சிறு காடு.
இதற்கெல்லாம் ரொம்ப செலவாகுமே என்றதற்கு, ஆமாம், அதற்காக குழந்தைகள் போல வளர்த்த மரங்களை அப்படியேவா விட முடியும். எனது ஓய்வூதியத் தொகையில் ஓர் பங்கை இதற்காக செலவிடுகிறேன். மேலும், எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்துதான், இக்காட்டைப் பராமரிக்கிறேன். மேலும், எனது மகள், மருமகன் மற்றும் உறவினர்களும் எனக்கு முழு ஓத்துழைப்பு அளித்து உதவுகின்றனர் என்கிறார். மேலும், அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏதேனும் உதவிகள் செய்ய முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்.
மரங்களை வெட்டித் தள்ளி மனைகளாக மாற்றும் இக்காலத்தில் தனது நிலத்தில் ஓர் காட்டையே உருவாக்கி, அதில் உள்ள மரங்களைத் தனது குழந்தைகளைப் போல கருதும் இவரைப் போன்ற தாயம்மாக்கள் பெருகினால்தான் தமிழகம் பசுமையாகும்.