'நடனமாடி இளமையை மீட்டெடுத்து, தனிமையை நீக்கும், இன்ஸ்டாவின் 'வைரல் பாட்டிகள்'
ஊதா நிற புடவை அணிந்த ஏழு பெண்கள் குழு, 'தௌபா தௌபா' பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ படு வைரலாகியது. இதில் பியூட்டி என்னவெனில், நடனமாடிய அனைவரும் பாட்டிகள்.
ஒரு மாதத்திற்கு முன்பு, ஊதா நிற புடவை அணிந்த ஏழு பெண்கள் குழு, பாலிவுட் திரைப்படமான 'பேட் நியூஸி'ல் இருந்து 'தௌபா தௌபா' பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ படு வைரலாகியது. இதில் பியூட்டி என்னவெனில், நடனமாடிய அனைவரும் பாட்டி. இதுவரை, 9.7 மில்லியன் வியூஸ் பெற்று இணையத்தில் 'வைரல் தாதீஸ்' என்று அழைக்கப்படும் அவர்கள், முதியோர் இல்லத்தில் வாழும் பாட்டிகள்.
கர்நாடகாவின் பெல்காமில் உள்ள "சாந்தை விருத்தாஷ்ரம்" எனும் முதியோர் இல்லத்தில் வாழும் அவர்கள், நடனத்தின் வழியாக இளமைக்காலத்துக்கே சென்று மகிழ்ச்சியுடன் தனிமையை விரட்டுகின்றனர்.
அனைத்திற்குமான தொடக்கம்...
சிறுவயதிலே அவரது தந்தையை இழந்தவர் விஜய் மோர். அப்போது அவர் கல்லுாரி படிப்பைக்கூட முடிக்கவில்லை. ஆயினும், அவரது தாய் மற்றும் 3 சகோதரிகளை கொண்ட குடும்பத்தினை கவனிக்கும் பொறுப்பு அவரது தலைக்கு வந்தது. காலை முழுவதும் கல்லுாரி, பாடப்புத்தகம் என கழிய, இரவில் ஓட்டலில் வெயிட்டராக பணிபுரிந்து சம்பாதித்துள்ளார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் இருந்தபோதிலும், விஜய் மோர் அவரால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். அப்படி தான், பெல்காமில் உள்ள ஜூனியர் சிவாஜி பார்க் யுவக் மண்டல் அறக்கட்டளையில் அவரது நண்பர் விஜய் பாட்டீலுடன் சேர்ந்து அவர் பணியாற்றி வந்தார். அறக்கட்டளையில் முதியவர்களைக் கவனித்து கொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். இத்துடன் அவருடைய சமூக சேவை நின்றிடவில்லை.
பெல்காமில் சொந்தப் பந்தங்கள் உரிமை கோரப்படாத நிலையிலிருந்த 1,000 பேரின் உடல்களை தகனம் செய்ய உதவியிருக்கிறார். இருப்பினும், உதவியை எதிர்நோக்கி பல வயதான பெரியவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.
"குழந்தைகளின்றி, பணமின்றி, வயதான காலத்தில் பராமரிக்க குடும்பம் இல்லாத முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். அந்நிலையில் தவிப்பவர்களுக்கு அவர்களுக்கான வீடு என்று அவர்கள் உணரும் வகையிலான ஒரு இடத்தை உருவாக்க எண்ணினேன்," என்று கூறினார்.
1998ம் ஆண்டு "சாந்தை விருத்தாஷ்ரம்" எனும் பெயரில் முதியோர் இல்லத்தை அவரது நண்பர் விஜய் பாட்டீலுடன் இணைந்து நிறுவினார். இரும்புக் கொட்டகையுடன் ஒரு சிறுக்கூடமாகத் தொடங்கிய முதியோர் இல்லம் இன்று, பெண்களுக்கான மூன்று அறைகள், ஆண்களுக்கு ஒன்று, தியான மையம், ஒரு விழா மண்டபம், ஒரு பூஜை அறை மற்றும் சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2004ம் ஆண்டில், விஜய் மோர் பெல்காமில் கார்ப்பரேட்டராகவும் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 12 மாதங்களில் அவர் மேயராக ஆனார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2008ம் ஆண்டில், முதியோர் இல்லத்தின் மீது கவனம் செலுத்துவதற்காக அரசியலில் இருந்து விலகினார்.
32 பெண்கள், 8 ஆண்கள் என சாந்தை விருத்தாஷ்ரத்தில் மொத்தம் 40 முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் முதியோர் இல்லத்தில் இருக்கிறோம் என தனிமை உணர்வே இருப்பதில்லை. ஒன்றாக பணிகளைப் பகிர்ந்து கொள்வது, சிரித்து மகிழ்வது, அரட்டை அடிப்பது என அவர்களது ஒவ்வொரு நாள் பொழுதும் நிறைவாக கழிகிறது.
அவ்வப்போது மும்பை, கோவா போன்ற இடங்களுக்கு சிறு பயணங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்ள். முதியோர் இல்லத்தில் வசிக்கும் 69 வயதான புஷ்பா நிராஷர் அவரது இளமை காலத்தில் பெல்காமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். அவரது கணவர் மற்றும் மாமியார் காலமான பிறகு, அவர் தனியாக இருந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாந்தை விருத்தாசிரமத்தில் சேர்ந்தார்.
"இங்கிருப்பது என் வீட்டில் இருப்பதை போன்று உணர்கிறேன். காய்கறி வெட்டுவது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் ஒன்றாகச் செய்கிறோம். இங்கே என்னைப் போன்ற பல பெண்கள் இருக்கிறார்கள். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார். வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாக மாறும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை." என்று ஆனந்த கண்ணீருடன் அவர் ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கழியும் முதுமை...
முதியோர் இல்லத்தில் அனைவரும் மகிழ்வுடன் இருந்தாலும், அவர்களது இளமை காலத்தை மீட்டெடுக்கும் எண்ணத்தில் விஜய் மோரின் மகள் செரில் முதியவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து, கடந்தாண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பகிர்ந்துள்ளார். அப்போதே, அந்த முயற்சி பலரது கவனத்தைப் பெற்றது.
அப்போது ட்ரெண்டிங்கில் இருந்த பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ், 8,00,000க்கும் அதிகமான லைக்ஸை பெற்றது. வைரல் வீடியோவின் விளைவாய், முதியோர்களும், முதியோர் இல்லமும் பிரபலமாகியதுடன், பல நன்கொடையாளர்கள் உதவிட முன்வந்தனர்.
"முதியவர்களுக்கான தங்குமிடம் ஒன்றை நான் உருவாக்கினேன். என் மகள் அதை உலகமறிய செய்து, பிரபலமாக்கி விட்டார்," என்று பெருமையுடன் பகிர்ந்தார் விஜய் மோர்.
கோவிட் 19 தொற்றுக்காலத்தில் முதியவர்களின் நலன் கருதி விஜய் மோர், அவரது மகள் செரில், அவரது மனைவி என அனைவரும் குடும்பத்துடன் முதியோர் இல்லத்திலே தங்கி கவனித்துள்ளனர். முதியோர் இல்லத்தில் வசிக்கும் வித்யா திவான், மோர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பது அவர்தன் வீட்டில் இருப்பதை போன்று உணர்வதாக தெரிவித்தார்.
பெல்காமில் உள்ள பல் மருத்துவமனையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்துவந்த வித்யா, திருமணம் செய்து கொள்ளவில்லை. மைசூரில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவரது பெற்றோரும் இறந்துவிடவே, முதியோர் இல்லத்தைப் பற்றி அறிந்து 2010ம் ஆண்டில் அங்கு சேர்ந்திட முடிவெடுத்துள்ளார்.
"நான் இங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு முன்பு நடனமாடத் தெரியாது. ஆனால் விஜய்யின் மகள் என்னை ஊக்கப்படுத்தினார். நானும் முயற்சித்தேன். இப்போது எனக்கு நடனம் பிடிக்கும்," என்று கூறினார் அவர்.
இதன் நீட்சியாய், இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்காய் இருந்த தெளபா தெளபா பாடலுக்கு, முதியவர்களை நடனமாட வைத்துள்ளார் செரில். ஓவர் நைட்டில் வைரலாகிய வீடியோ 9.7மில்லியன் வியூஸை பெற்றது. இப்பாடல் இடம்பெற்றுள்ள பேட் நியூஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் விக்கி கவுஷல், பெண்களின் நடனத்தை பாராட்டினார். அவர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமான பாடல்களில் நடனமாடுவதன் மூலம் தங்கள் இளமையை மீட்டெடுக்கிறார்கள்.
அவர்கள் இணையத்தில் "வைரல் தாதீஸ்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்கள். தாதி என்றால் ஹிந்தியில் பாட்டி என்று பொருள். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர்களை 37,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாவில் பதிவிடும் ஒவ்வாரு நடன வீடியோவும் மில்லியன் வியூஸ்களை அள்ளுகிறது. நடன ரீல்களில் பங்கேற்ற 32 பெண்களில் ஒருவரான நிராஷர், குழுவுடன் மும்பைக்கு பயணம் செய்தபோது, அங்கு பலர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு செல்ஃபி எடுத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"ஒரு நாள் விஜய் சார் எங்களிடம் வந்து நீங்கள் வைரலாகிவிட்டீர்கள் என்றார். எங்களுக்கு முதலில் புரியவில்லை. பின் நடந்ததை விளக்கினார். விஜய் சாரின் மகள் எங்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார், நாங்கள் அவரைப் பின்பற்றுகிறோம். மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.