குப்பையில் தொலைத்த வைர நகை; ரெண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த துப்புரவுத் தொழிலாளர்!
வைரங்கள் விலைமதிப்பானவை தான், ஆனால் நேர்மை அதைவிட விலைமதிப்பானது என்பதை செயலால் உணர்த்தி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் அந்தோணிசாமி.
“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. குணம் அவரவர் செயலால் சில நேரங்களில் பணத்தை விட உயர்வானது என்பதை காட்டி விடுகிறது. இதற்கு உதாரணமாய் சென்னையில் நடந்திருக்கிறது ஒரு நிகழ்வு.
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையிலுள்ள விண்ட்சர் பார்க் அபார்ட்மென்ட்டை சேர்ந்தவர் இசையமைப்பாளர் ஆர்.தேவராஜன். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால் வீட்டில் இருந்த குப்பைகளை சேகரித்து அன்று காலையில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளரிடம் கொடுத்திருக்கிறார்.
மற்ற வேலைகளைச் செய்யப் போனவர், மகளுக்காக தன்னுடைய தாயார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வைர நெக்லெசை தேடி இருக்கிறார். வீட்டில் எங்குமே கிடைக்காத நிலையில் அதிர்ச்சியான தேவராஜன், ஒரு வேளை குப்பைகளோடு கலந்திருக்கலாமோ என்று சந்தேகப்பட்டார். அந்த டைமண்ட் நெக்லசின் மதிப்பு ரூ.5 லட்சம்.
உடனடியாக சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் கழிவு மேலாண்மை நிறுவனமான உர்பேசர் சுமீத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி இருக்கிறார் தேவராஜன். அந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர் அந்தோணிசாமியை அழைத்து உதவி கேட்டிருக்கிறார். இதனை உடனடியாக அவருடைய அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.
சேகரித்த குப்பைகளை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்றி துப்புரவுப் பணியாளர்கள் அவற்றை மறுஆய்வு செய்யக்கூடாது என்று உர்பசேரில் ஒரு விதி இருக்கிறது. விஷயத்தை கேள்விபட்டு உர்பேசரின் வார்டு சூப்பர்வைசர் அஜய் மற்றும் யூனிட் அதிகாரி ஜோசப் அந்தப் பகுதிக்கு வந்தனர். அவர்களின் மேற்பார்வையில் ஆரோக்கியசாமி, அந்தப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைத் தொட்டிகளில் இருந்த குப்பைகளையும் கொட்டி தேடத் தொடங்கினார்.
சுமார் 2 மணி நேரம் எல்லா குப்பைகளையும் சல்லடை போட்டு தேடியவர் ஒரு காய்ந்த மாலையோடு அந்த மெல்லிய டைமண்ட் நெக்லஸ் ஒட்டிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்தார். நெக்லஸ் கிடைத்த போது நிம்மதியடைந்த தேவராஜன் மிகவும் மகிழ்ந்து, ஆரோக்கியசாமி மற்றும் உர்பசேருக்கு நன்றி தெரிவித்தார்.
ஒரே நாளில் தன்னுடைய நற்பண்பினால் உயர்ந்த 35 வயது அந்தோணிசாமி ரியல் லைஃப் ஹீரோவாகி இருக்கிறார். அந்தோணி சாமியின் செயலை சென்னை மாநகராட்சி மேயர் நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு ஊக்கத்தொகையும் அளித்திருக்கிறார்.
தாய், தந்தை இல்லாத நிலையில் தனித்து வாழும் அந்தோணிசாமி, 2020 கொரோனா காலகட்டத்தில் வேறு பணி கிடைக்காததால் உர்பசேரில் பணிக்கு சேர்ந்தவர்.
“4 வருஷமா எனக்கு சோறு போடுறது இந்த துப்புரவுப் பணி தான். நான் உழைத்து சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும், மற்றவர்கள் பொருள் மீது எனக்கு ஆசை இல்லை. துப்புரவுப் பணியாளர்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்தாமல் இருக்க வேண்டும், அவர்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் தான் என்ற மரியாதையை கொடுத்தால் அதுவே தனக்கு போதும்,” என்று கூறும் அந்தோணிசாமியிடம் நேர்மையும், தொழில் மீதான மதிப்பும் வெளிப்படுகிறது.