அமைதி, ஆசுவாசம், ஆதரவு- இளம் முஸ்லிம் பெண்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் நுாலகம்!
மும்பையின் புறநகர்ப் பகுதியான மும்ப்ராவில் அமைந்துள்ள `ரெஹ்னுமா நுாலகம்`, கல்வியறிவு, தைரியம், போராடும் குணம், மனஅமைதியை பெண்களுக்கு கொடுக்கும் இடமாக விளங்குகிறது.
இமாரா (பெயர் மாற்றப்பட்டது) அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனை பற்றி அவரது பெற்றோரிடம் கூறியபோது கொடூரமாக தாக்கப்பட்டார். அவளது மனநிலை ஒருபுறம் கோபம் மற்றும் கிளர்ச்சி, மறுபுறம் பயம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது ரெஹ்னுமாவின் உதவியை நாடும் வரை...
மும்பையின் புறநகர்ப் பகுதியான மும்ப்ராவில் அமைந்துள்ள ரெஹ்னுமா நுாலகம், கல்வியறிவு, தைரியம், போராடும் குணம், மனஅமைதியை பெண்களுக்கு கொடுக்கும் இடமாக விளங்குகிறது.
நூலகமாக மாறிய இரண்டு அறைகள் கொண்ட கட்டிடத்திற்கு இமாரா போன்ற பல பெண்கள் வந்து செல்கிறார்கள். அங்கு வரும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் புர்காக்களை அங்கு பயனின்றி கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வைத்தவிட்டு, குளுமையாக பரந்துவிரிந்துள்ள தரையில் அமர்கிறார்கள்.
அங்கு, குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் குழுவாக விவாதிக்கிறார்கள், ஆனந்தமாக கவிதைகளையும், கதைகளையும் படிக்கிறார்கள், பாலின பாகுபாடுகள் குறித்த சிந்தனையை பெறுகிறார்கள், குடும்ப பிரச்னைகளுக்கான சட்ட உதவிகளை பெறுகிறார்கள். இவ்வாறு இன்னும் பல வழிகளில் பெண்களின் மேம்பாட்டுக்கான, பாதுகாப்புக்கான இடமாக விளங்குகிறது ரெஹ்னுமா நுாலகம். 85% இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாக அறியப்படும் மும்பையின் புறநகர்ப் பகுதியான மும்ப்ராவில் அமைந்துள்ளது இந்நுாலகம். ரெஹ்னுமா என்றால் உருது மற்றும் இந்தி மொழியில் 'வழிகாட்டி' என்று பொருள்.
பெண்களிடம் சமூக மற்றும் அரசியல் உணர்வுடன், வலுவான அடையாள உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன், 2003ம் ஆண்டு பெண்களை மேம்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ரெஹ்னுமா நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகம் நன்கொடைகள் மற்றும் 'ஆவாஸ் இ நிஸ்வான்' என்ற பிரசாரத்தின் மூலம் பல்வேறு நபர்களிடம் இருந்து பெரும் நிதியினை பெற்று நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும். நுாலகம் அமைந்துள்ள இடமும் அரசு சாரா அமைப்பின் மும்ப்ரா மையமாகும். விவாகரத்து, பலதாரமணம் மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்னைகளுடன் பெரும்பாலான பெண்கள் ரெஹ்னுமாவுக்கு அமைதியினை தேடி வருகிறார்கள். இந்த நூலகத்தின் 350 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் குடும்பப் பெண்கள். பல்வேறு கிராமங்களில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி அவர்களது நுாலக உறுப்பினர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்கின்றனர். அத்துடன், அவர்களது வாழ்வும் புது திருப்பத்தை அடைகிறது.
"புத்தகங்கள் பெண்களுக்கு புது உலகத்தை திறக்கின்றன. எதையும் சுயமாய் எதிர்க்கும் உணர்வை துாண்டுகின்றன. தனியுரிமை பெறுவதற்கான தொடக்கப்புள்ளியினை இடுகின்றன. ரிஃபாத் சிராஜ் மற்றும் ரஸியா பட் ஆகியோரின் வார்த்தைகளில் ஆறுதல் தேடுவதற்காக, ஏராளமான தாய்மார்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரத்தை ஒதுக்கி நுாலகத்திற்கு வருகின்றனர்.
ரிஃபாத்தும், ரஸியாவும் பாலினம் மற்றும் அவர்களது காலத்தின் சிக்கலான சமூக நிலைமைகளைக் கையாண்ட புகழ்பெற்ற பாகிஸ்தானிய எழுத்தாளர்களாவர், என்று கூறினார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ரெஹ்னுமாவில் நூலகராக பணிபுரியும் ஃபைசா ஷேக்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரபலமான பதிப்புகளையும், ஆங்கிய இலக்கியங்களையும் நுாலகத்திற்கு வாங்குவதற்காக ஃபைசா அடிக்கடி நாடு முழுவதும் நிகழும் புத்தகக் கண்காட்சிகளுக்கு பயணப்படுகிறார். சேத்தன் பகத், துர்ஜோய் தத்தா உள்ளிட்ட நவீன இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் சேமித்து வருகிறார்.
உலகத்தை காண்பதற்கான ஜன்னல்!
ரெஹ்னுமாவில், பெண்கள் ஆங்கிலம், கணினி அறிவியல் மற்றும் சட்டக் கல்வியையும் கற்றுக்கொள்கிறார்கள். நூலகத்தில் உள்ள பெண்கள் வன்முறை, அடக்குமுறை போன்ற அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். குடும்பத்திற்கு அவமானம் மற்றும் களங்கம் என்ற காரணங்களால், மறைக்கப்படும் பெண்களின் நீடித்த பிரச்சினைகள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படுகின்றன.
"இன்றும் பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதன் விளைவாய், பலர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து தப்பிக்க காதல் உறவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும், ரஹ்னுமா ஒரு புகலிடமாக உருவெடுத்துள்ளது," என்று கூறினார் ஆவாஸ்-இ-நிஸ்வானின் இயக்குனர் யாஸ்மீன் ஆகா.
மும்ப்ராவை சேர்ந்த இமாராவின் தந்தை குடித்துவிட்டு அவளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரும் அவளுடைய தாயும் அவளை புறக்கணித்தனர். அவள் மெஹந்தி வரைந்து குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிலிருந்து தப்பிக்கவும், ஆசுவாசப்படுத்திய ஆறுதல் வார்த்தைகளால் காதலில் சிக்கி கொண்டார். இமாரா போன்ற பல பெண்களும் இப்படி வழிதவறுகின்றனர்.
அவர்கள் பழகும் ஆண்களும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் நிலையான வேலைகள் இல்லாதவர்கள். இந்த ஆண்களுடன் பழகுவதை நிறுத்துமாறு நாங்கள் பெண்களிடம் கேட்க முடியாது என்றாலும், நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், கல்வியைப் பெறுவதற்கும், வேலை தேடுவதற்கும் அவர்களுக்குள் திறன்களை உருவாக்க வழிநடத்துகிறோம். குடும்ப பிரச்னைகளை தீர்த்து, வறுமையை நீக்க வழி வகை செய்கிறோம், என்றார் ஃபைசா ஷேக்.
குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நம்பிக்கை ஏற்பட்டவுடன், பாலினம் மற்றும் பாலியல், சட்டம் மற்றும் LGBTQIA+ கல்வி போன்றவற்றை கற்றுக் கொள்வதற்காக, இந்தத் துறைகளில் நிபுணர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஃபைசா பெண்களை அழைத்துச் செல்கிறார். 22 வயதான ஊடக மாணவி ஆர் சுமையாவுக்கு, காவல்துறையின் மீதிருந்த பயத்தை விரட்டி, துன்பத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்கு வழிகாட்டக்கூடிய தன்னம்பிக்கையான இளம் பெண்ணாக மாற்றியுள்ளது ரெஹ்னுமா.
"எனது தோழியின் அப்பா அவளுடைய தாயை கொடூரமாக அடிப்பதை நான் பார்த்தபோது எனக்கு எட்டு வயது. நான் அவளுடன் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அந்த அனுபவம் பல ஆண்டுகளாக என்னை வடுத்தது. ரெஹ்னுமாவில், எங்கள் உரிமைகள் மற்றும் பெண்களை ஆதரிக்கும் சட்டங்களை கற்றுக்கொண்டதால், இந்த பயத்தை போக்க முடிந்தது. இந்த அறிவின் மூலம், இப்போது துன்பமான சூழ்நிலைகளிலிருக்கும் மற்றவர்களுக்கு உதவ முடிகிறது," என்றார் சுமையா.
சுமையா போன்ற பல பெண்கள் அவர் விரும்பியதை அணியவும், தனது சமூகத்தில் தடைசெய்யப்பட்ட பிரச்சினைகளில் சுதந்திரமாக ஈடுபடவும், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் பாதுகாப்பான இடமாகவுள்ளது ரெஹ்னுமா நுாலகம்.
தமிழில்: ஜெயஸ்ரீ