பிரச்சாரத்தின்போது தனக்கு முடி வெட்டிய தொழிலாளிக்கு ராகுல் காந்தி தந்த சர்ப்ரைஸ்!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரேபரேலி தொகுதியில் தனக்கு முடி வெட்டிய நபருக்கு, தற்போது சலூனுக்குத் தேவையான சில பொருட்களைப் பரிசாக அனுப்பி நெகிழ வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல்காந்தி.
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டாலே, வேட்பாளர்கள் பஜ்ஜி போடுவது, துணி துவைத்துத் தருவது, குழந்தையைக் குளிப்பாட்டுவது, கறி, மீன் போன்ற கடைகளில் வேலை பார்ப்பது என களத்தில் இறங்கி வேலை செய்வார்கள். தேர்தல் முடிந்ததும் இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே மாறிவிடும். இது சட்டசபைத் தேர்தலுக்கு மட்டுமல்ல.. மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தும்.
ஆனால், பிரச்சாரம் முடிந்து, அத்தொகுதியில் வெற்றியும் பெற்று விட்டபிறகு, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, பிரச்சாரத்தின்போது தனக்கு முடி வெட்டிவிட்ட சவரத் தொழிலாளி ஒருவருக்கு, பரிசுப் பொருட்களை அனுப்பி அசர வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி.
வைரலான வீடியோ
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார் ராகுல்காந்தி. அப்போது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு இடங்களுக்காகச் சென்ற அவர், மே மாதம் 13ம் தேதி, அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடி வெட்டிக்கொண்டார்.
தனக்கு முடி வெட்டிய அந்த கடை உரிமையாளர் மிதுனிடம் ராகுல்காந்தி, நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று அப்போது சமூகவலைதளப் பக்கங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்நிலையில், தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல்காந்தி, அப்போது தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை மற்றும் இன்வெர்ட்டர் போன்றவற்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
மகிழ்ச்சி
தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ராகுல்காந்தி தன்னை நினைவில் வைத்து, தன் கடைக்குத் தேவையான பொருட்களைப் பரிசாக வழங்கி இருப்பது, தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள மிதுன், இதற்காக தனது நன்றியையும் ராகுல்காந்திக்கு கூறியுள்ளார்.
“மூன்று மாதங்களுக்கும் மேலான நிலையில், திடீரென்று வியாழக்கிழமை, என் கடையின் அருகே ஒரு வாகனம் நின்றது. அதில் இருந்து இறங்கிய இரண்டு பேர், அந்த வாகனத்திலிருந்து இரண்டு நாற்காலிகள், ஒரு ஷாம்பு நாற்காலி மற்றும் இன்வெர்ட்டர் செட் போன்றவற்றை இறக்கி, என்னிடம் அதனை ஒப்படைத்தனர்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மிதுன்.
இது குறித்து, உத்தரபிரதேச காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறுகையில்,
“ராகுல் காந்தி எப்போதும் பல்வேறு தரப்பு மக்களைச் சந்திப்பார். அப்போது அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் பணியினை புரிந்துகொள்வார். அப்படித்தான் மக்களவைத் தேர்தலின் போது, ரேபரேலியின் லால்கஞ்சில் உள்ள மிதுனின் சலூனிற்கு சென்று, ராகுல் காந்தி தனது தலைமுடி மற்றும் தாடியை வெட்டிக் கொண்டார். தற்போதும் மிதுனை நினைவில் கொண்டு, அவருக்கு ஷாம்பு நாற்காலி, இரண்டு முடி வெட்டும் நாற்காலிகள், இன்வெர்ட்டர் பேட்டரி உட்பட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார்,” எனத் தெரிவித்துள்ளார்.
காலணி தயாரிக்கும் இயந்திரம்
கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பும் இதேபோல், சுல்தான்பூரில் காலணி தயாரிக்கும் ஏழைத் தொழிலாளியான் ராம் சைத் என்பவருக்கு, காலணி தயாரிக்கும் இயந்திரத்தை (தையல் இயந்திரம்) அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தார் ராகுல்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சை கருத்து கூறியது தொடர்பான அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது, உதவி கோரியிருந்த அத்தொழிலாளியை அவரது வீட்டிலேயே சந்தித்தார் ராகுல். சுமார் 30 நிமிடங்கள் அவருடன் உரையாடிய ராகுல், அப்போதும் நிச்சயம் உதவி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
உறுதி அளித்தது போலவே, அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு காலணி தயாரிக்கும் இயந்திரத்தை அனுப்பி வைத்தார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.