ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உலர்ந்த கண்கள் பிரச்சனை ஏற்படும்!
ஏசி அறையில் செயற்கையான காற்றில் நீண்ட நேரம் இருப்பதால் சருமம், நோய் எதிர்ப்பு அமைப்பு தொடங்கி மென்மையான உறுப்பான கண்கள் வரை பாதிக்கப்படுவதாக விவரிக்கிறார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவின் பிராந்திய தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி. ராவ்.
கோடைகாலம் வந்துவிட்டது. நம்மில் பெரும்பாலானோர், ஏர்கன்டிஷ்னர்கள் மற்றும் கூலர்கள் பயன்படுத்தி கோடையின் வெப்பத்தை சமாளிக்கத் தொடங்கிவிட்டோம். கடும் வெப்பக்காற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஒரு நாளில் சுமார் 14 முதல் 16 மணி நேரங்கள் வரை நாம் குளிர்சாதன வசதியுள்ள அறைகளில் நேரத்தை செலவிடுகிறோம்.
குளிர்சாதன பெட்டிகளால் (ஏசி) உருவாக்கப்படும் செயற்கையான காற்று மற்றும் வெப்பநிலை மாற்றம் நமது உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்துகிறது. இதை பலர் அறிவதில்லை.
நீண்ட நேரம் ஏசி பயன்படுத்துவதால் நமது தோல், நோயெதிர்ப்பு அமைப்புமுறை தொடங்கி மிக மென்மையான உறுப்பான கண்கள் வரை பாதிக்கப்படக்கூடும்,” என்கிறார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவின் பிராந்திய தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி. ராவ்.
குளிர்சாதன வசதியுள்ள அறைகளில் இருப்பவர்கள் கண்கள் உலர்ந்த நிலை, எரிச்சல், நறைநறைப்பு, ஒட்டிக்கொள்ளும் தன்மை, அரிப்பு உணர்வு, எரிச்சலுணர்வு மற்றும் கண்களிலிருந்து நீர் வடிதல் ஆகிய பொதுவான பிரச்சனைகளை சந்திப்பதாகக் கூறுகின்றனர்.
’உலர்ந்த கண்’ (Dry eyes) என்று அழைக்கப்படுகின்ற ஒரு பிரச்சனை அவர்களுக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதே அதன் பொருள். மருத்துவத்துறையில் இதை “உலர்ந்த கண் நோய் அறிகுறி” என அழைக்கிறார்கள்.
ஏர்கன்டிஷ்னர் பயன்பாட்டினால் ஏன் உலர்ந்த கண்கள் பிரச்சனை உருவாகிறது?
கண்களில் போதுமான தரத்திலும் அளவிலும் கண்ணீர் இருப்பது கண்களின் மிருதுவான உணர்வுக்கும் செயல்பாட்டிற்கும் அத்தியாவசியமாகும். உலர்ந்த கண்கள் நோய் அறிகுறி என்பது எண்ணெய் பிசுபிசுப்பு (கண்ணின் வெளிப்புறத்தில்), நீர் / நீர் சார்ந்த அடுக்கு (நடுப்பகுதியில்) மற்றும் புரதம் (கண்ணின் உட்பகுதியில்) என கண்ணீர் படலத்தின் மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது.
குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள ஒரு அறையில், குறிப்பாக மிகக் குறைவான வெப்பநிலையில் அது இயங்குகின்றபோது, அறையில் ஈரப்பதம் இருப்பதில்லை. அங்குள்ள காற்று உலர்ந்துவிடுகிறது. இதனால் கண்ணீர் படலத்தின் நீர் சார்ந்த அடுக்கிலிருந்து நீர் ஆவியாகி விடுகிறது. இதன் விளைவாக கண்ணில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி உலர்ந்த கண்கள் பிரச்சனை உருவாகிறது.
அவ்வாறு நீண்டநேரம் குளிர்சாதன வசதியுள்ள இடங்களில் இருப்பதால் கண் இமைகளில் உள்ள சுரப்பிகளிலிருந்து கொழுப்புப்பொருள் உற்பத்தியாவது மாறுபடும். இதன் காரணமாக, கண்ணீர் படலத்தின் தரம் மற்றும் அளவு மாறுபடும். அதன் தொடர்ச்சியாக உலர்ந்த கண்கள் நோய் அறிகுறி பிரச்சனை உருவாகும். நீர்ப்பதம் இல்லையென்றால், அழற்சி மற்றும் தொற்றுபாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இது, மிக மோசமான பாதிப்பு நிலைக்கு வழிவகுத்துவிடும்.
மேலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் இடங்களில் நுண்ணுயிரி மற்றும் பூஞ்சை பல்கிப் பெருக வாய்ப்புண்டு. எனவே இந்தப் பகுதிகளை முறையாக தூய்மைப்படுத்தாத நிலையில் கண்களில் அழற்சி மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
முக்கிய அறிகுறிகள்:
உலர்ந்த கண்கள் மற்றும் உலர் கண்கள் நோய்க்குறியின் அறிகுறிகளாக கண்ணில் எரிச்சல், உலர்ந்த நிலை, நறைநறைப்பு, அரிப்புணர்வு, வலிஉணர்வுகள், கனமானதாக உணர்தல், கண்களிலிருந்து நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இருக்கின்றன. இதுதவிர வாசிக்கும் வேகமும் வெகுவாகக் குறைந்துவிடுவதுண்டு.
உலர்ந்த கண்கள் பிரச்சனைக்கு பிற முக்கியமான காரணங்கள்:
- இயற்கையான வயது முதிர்ச்சி, குறிப்பாக மாதவிடாய் வற்றிப்போதல் பிரச்சனைகள்; எனவே வயது முதிர்ந்த பெண்கள் உலர்ந்த கண்கள் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுபகிறார்கள்.
- நீரிழிவு, தைராய்டு கோளாறுகள் மற்றும் வைட்டமின் ஏ பற்றாக்குறை உட்பட குறிப்பிட்ட சில மருத்துவநிலைகள்.
- திசுநீர் தேக்கி எதிர்ப்பிகள் (ஆன்ட்டிஹிஸ்டாமின்ஸ்) போன்ற குறிப்பிட்ட சில மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
பிரச்சனைகள்:
- காற்று மாசு: புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு அதிகமாக காணப்படுவதால், ஒப்பீட்டளவில் குறைவான காற்று மாசு உள்ள பிற நகரங்களில் உள்ள மக்களை விட, பெருநகரங்களில் உள்ள மக்களுக்கு உலர்ந்த கண்கள் நோய்க்குறி உறுதி செய்யப்படுவது அதிகமாக இருக்கும்.
- கம்ப்யூட்டர் / மொபைல் போன்களை தொடர்ந்து நீண்டநேரம் பயன்படுத்துவது / பார்ப்பது.
உலர்ந்த கண்கள் பிரச்சனை வராமல் தடுப்பதற்கான ஆலோசனை குறிப்புகள்:
- குளிர்சாதன வசதியுள்ள அறைகளில் செலவிடுகின்ற நேரத்தை குறைக்க முயற்சிப்பது; 23 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் இருக்குமாறு ஏசியின் இயக்க வெப்பநிலையை வைத்திருப்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.
- ஏசி-யிலிருந்து காற்று உங்கள் முகத்தில் நேரடியாக படுமாறு அமர்வதை தவிர்க்கவும்.
- ஏர்கன்டிஷ்னர் வசதியுள்ள அறையில் நீங்கள் இருக்கும்போது, அந்த அறையின் மூலையில் திறந்த நிலையில் உள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் புதிய நீரை வைக்கவும். இதன்மூலம் அறையில் நீர்ப்பதத்தைப் பராமரிக்க முடியும். அத்துடன் உலர்ந்த சருமம் மற்றும் உலர் கண்கள் பிரச்சனை வராமல் தடுக்க இயலும்.
- பகல் நேரத்தில் தண்ணீர் உட்பட போதுமான அளவு திரவ பானங்களை அருந்தவும்.
- கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது அடிக்கடி கண்களை சிமிட்டவும். கண்ணீர் படலம் உரியவாறு பரவுவதற்கு இது உதவும்.
- கண்களுக்குப் போதுமான ஓய்வு தருவதற்கு ஒரு நாளில் 7-8 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.
- வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடிகள் அல்லது பாதுகாப்பிற்கான கண்ணாடிகளை அணிவது நல்லது.
- கண் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துவக் குறிப்புகள் மற்றும் அலுவலகத்தில் கடைப்பிக்கவேண்டிய நடைமுறைகளை தவறாது பின்பற்றவு. இதனால் கண் எரிச்சல் குறையவும் அழற்சி ஏற்படாமல் பாதுகாக்கவு அதிகளவில் கண்ணீர் சுரக்கவும் வழிவகுக்கும்.
- கண் மருத்துவர் பரிந்துரைக்கும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும்; அதன் பிறகு மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசனைகளைப் பெறுவதும், கண்களை பரிசோதித்துக் கொள்வதும் சிறந்தது.
இதுபோன்ற வழிகாட்டல்களைப் பின்பற்றினால் கண் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த கண்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து முறையான சிகிச்சை பெறாமல் நாட்களைக் கடத்தினால் கருவிழியின் மேற்பரப்பில் சேதம், கருவிழியில் நைவுப்புண் மற்றும் கடுமையான பார்வைத்திறன் பிரச்சனைகள் உருவாகக்கூடும். கண்களை முறையாகப் பராமரித்து வருமும் தற்காத்துக் கொள்வதே சிறந்தது.