உலக சாம்பியன் ஆன ஏழை விவசாயி மகன் - அடுத்தடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவின் வாழ்க்கைக் கதை.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்குமே மிகப்பெரிய கனவுதான். அப்படி ஒருமுறை பதக்கம் வெல்வதே கனவு என்றால், அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு, கடந்தமுறை தங்கம், இந்தமுறை வெள்ளி என தொடர்ந்து பதக்கம் வெல்வதெல்லாம் சாதாரண சாதனையில்லை.
ஆனால், அப்படிப்பட்ட மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் தங்கமகனாக போற்றப்படும் தடகளவீரர் நீரஜ் சோப்ரா. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்திய தடகள விளையாட்டில் யாருமே இதுவரை செய்யாத மகத்தான சாதனையாக, அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்றவர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
கடந்தமுறை தங்கம்.. இந்தமுறை வெள்ளி
1900ம் ஆண்டு தொடங்கிய இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், 2008ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கப்பதக்கமே, இந்தியாவிற்காக ஒரு தனிநபர் வென்ற முதல் மற்றும் கடைசி தங்கப்பதக்கமாக இருந்தது. இந்த வரலாற்றையும் மாற்றி எழுதியவர் நீரஜ் தான். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கத்தை தட்டிச்சென்று, இந்தியாவிற்கான இரண்டாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
இந்தமுறையும் தங்கம் வென்று மற்றுமொரு இமாலயச் சாதனையைப் படைப்பார் எனப் பெரிதும் மக்கள் எதிர்பார்த்தநிலையில், கடந்த ஒலிம்பிக்கைவிட இம்முறை அதிக தூரம் ஈட்டி எறிந்தபோதும், அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்துள்ளது.
ஆம், 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, அவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர்.
தனது பெஸ்ட்டைக் கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றபோதும், தொடர்ச்சியாக அடுத்தடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் நீரஜ்.
நீரஜ் சோப்ரா பின்னணி
ஹரியானாவில் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா எனும் சிறிய கிராமத்தில் 1997ம் ஆண்டு விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. அவரது பெற்றோர் சதீஷ்குமார் மற்றும் சரோஜ் தேவி தம்பதி ஆவர். வாழ்க்கையில் ஜெயித்து வரலாறு படைத்த பல வெற்றியாளர்களைப் போலவே, சிறுவயதில் இருந்தே பொருளாதார ரீதியாக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார் நீரஜ். வறுமை ஒருபுறம் வாட்ட, மறுபுறம் உடல்ரீதியான பிரச்சினைகளும் நீரஜைத் துரத்தியது.
மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாடி விளையாட முடியாமல், 11 வயதில் சுமார் 90கிலோ எடையுடன் கஷ்டப்பட்டார் நீரஜ். மகனின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவரது எடையைக் குறைக்க திட்டமிட்ட நீரஜின் தந்தை சதீஷ், அவரை அருகிலுள்ள நகரமான மட்லாடாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்தார். ஆனால், அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது தங்களது செல்ல மகன், பின்னாளில் இந்தியாவின் தங்கமகனாக மாறுவான் என்று.
ஆர்வம் தந்த ஆசை
உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஆரம்பித்த நீரஜுக்கு, அதன் அருகில் இருந்த சிவாஜி ஸ்டேடியம் மிகவும் பிடித்தமான இடமாகிப் போனது. அங்கு அவரின் சகவயதுடைய மற்ற குழந்தைகள் ஈட்டி எறிவதை வேடிக்கை பார்ப்பதில் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தவருக்கு, ஒரு கட்டத்தில் தானும் அதேபோல் கையில் ஈட்டியை ஏந்த வேண்டும் என்ற ஆசை உண்டானது.
ஆனால், நீரஜை ஈட்டி எறிதல் பயிற்சியில் சேர்த்துவிடும் அளவிற்கு அவரது தந்தையின் பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. விவசாயத்தில் கிடைத்த சொற்ப பணத்தில் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, நீரஜை உடற்பயிற்சிக்கும் செலவழித்து, அவரை ஈட்டி எறிதல் பயிற்சிக்கும் கட்டணம் செலுத்த மிகவும் கஷ்டப்பட்டார் சதீஷ்குமார். ஆனாலும் தன் மகனின் கனவிற்கு தங்களால் ஆன உதவியைச் செய்வதில் உறுதியாக இருந்தார் அந்த ஏழை விவசாயி. அவருக்கு உறுதுணையாக அவரது கூட்டுக்குடும்பமும், அவரது கிராமமும் இருந்தது.
19 வயதில் இமாலய சாதனை
குடும்பம் மற்றும் ஊர்மக்கள் ஊக்குவிப்பால் சிவாஜி ஸ்டேடியத்தில் ஓராண்டு பயிற்சி பெற்ற நீரஜ், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தவ் தேவி லால் விளையாட்டு வளாகத்திற்குச் சென்று பயிற்சியாளர் நசீம் அகமதுவிடமும் பயிற்சி பெற்றார். விளையாட்டில் கவனம் செலுத்தியபோதும், தன் படிப்பையும் அவர் கைவிடவில்லை. ஈட்டி எறிதலில் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டே, சண்டிகரில் பட்டப்படிப்பையும், அதனைத் தொடர்ந்து பஞ்சாப்பில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார் நீரஜ்.
தன் திறமை மட்டுமே தன் குடும்பத்தின் நிலையை மாற்றும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த நீரஜ், 2012ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாம்பியானாக பதக்கம் வென்றார். அது முதற்கொண்டு ஈட்டி எறிதலில் மேற்கொண்டு முன்னேறிக் கொண்டே சென்றார்.
தான் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் பதக்கம் வென்று, 2014ம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியிலும் தன் திறமையால் வெள்ளிப்பதக்கத்தை அவர் தட்டிச்சென்றார்.
தங்கப்பதக்க வேட்டை
அதுதான் அவருடைய முதல் சர்வதேசப் பதக்கம். அதற்குபிறகு, தான் கலந்து கொண்ட 11 தொடர்களில் 9 தங்கப் பதக்கங்களை வென்று குவித்த நீரஜ், இந்திய விளையாட்டில் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றை எழுதத் தொடங்கினார்.
2016ம் ஆண்டு சவுத் ஆசியன் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சோப்ரா, அதே ஆண்டில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று வரலாறு படைத்தார். அதன்மூலம் ‘20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உலக சாம்பியனான முதல் இந்திய தடகள வீரர்’ என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் நீரஜ் கலந்து கொண்டு இந்தியாவிற்கு தங்கம் வென்று தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக தகுதிச் சுற்றில் காயமடைந்தார் நீரஜ். இதனால், அவரால் 2016 ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆனால், அவர் துவண்டுவிடவில்லை. தொடர்ந்து அடுத்த ஒலிம்பிக்கிற்கான தனது பயிற்சியை முடுக்கிவிட ஆரம்பித்தார்.
ராணுவத்தில் வேலை
இதற்கிடையே, நீரஜ்ஜிற்கு 2017ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரி வேலை கிடைத்தது. இதன்மூலம் தனது குடும்பத்தின் வறுமை நீங்கும் என சந்தோசப்பட்டார் நீரஜ்.
அதனை வெளிப்படுத்தும் விதமாக,
“எனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடிந்தது எனக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது,” என அப்போது செய்தியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அதன்பிறகு, முன்பைவிட இன்னும் தீவிரமாக ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதன்பலனாக, 2017ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் முதலிடம், 2018ல் காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசியன் போட்டிகளில் தங்கம் என சாதனைக்கு மேல் சாதனை படைக்கத் தொடங்கினார்.
இந்தியாவின் தங்கமகன்
அவர் எதிர்பார்த்ததுபோலவே, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, தங்கம் வென்ற நீரஜ் இந்தியாவின் தங்க மகனாக மாறினார்.
அதன் தொடர்ச்சியாக, 2022ல் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2022 டைமண்ட் லீக்கில் தங்கம், 2023ல் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2023ல் டைமண்ட் லீக் போட்டியில் வெள்ளி, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என அடுத்தடுத்து தங்கமும், வெள்ளியுமாக பதக்கங்களைக் குவித்து வந்தார்.
எனவே, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் என்ற சாதனையை நீரஜ் படைப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தியர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், தகுதிச்சுற்றின் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நீரஜ்.
ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து, தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து, இரண்டாம் இடம் பிடித்துள்ளார் நீரஜ்.
வெள்ளிப் பதக்கம் வென்ற போதும், இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் மற்றொரு பதக்கத்தைப் பெற்றுத் தந்ததால், நீரஜை தங்கமகனாகவே மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
'ஒலிம்பிக் தங்க நாயகன்' - பாக் கிராம மக்களின் நிதி உதவியுடன் ஒலிம்பிக்கை வென்ற தொழிலாளி மகன் அர்ஷத் நதீம்!