சூப்பர் மேனாக மாறிய டெலிவரி மேன்; எரியும் நெருப்பில் 5 குழந்தைகளைக் காப்பாற்றி அசத்தல்!
25 வயதான பீட்சா டெலிவரி செய்யும் நபர் பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டில் சிக்கிய 5 குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு சூப்பர் மேனாக மாறியுள்ளார்.
25 வயதான பீட்சா டெலிவரி செய்யும் நபர் பற்றி தெரிந்து கொண்டிருந்த வீட்டில் சிக்கிய 5 குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு சூப்பர் மேனாக மாறியுள்ளார்.
சூப்பர் மேனாக மாறிய பீட்சா டெலிவரி மேன்:
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தீயில் சிக்கிக் கொண்டு போராடும் நபர்களை ஹீரோவோ, சூப்பர் ஹீரோவோ ஓடோடி வந்து காப்பாற்றும் காட்சிகளை நிறைய படங்களில் பார்த்திருப்போம். தற்போது ஏதார்த்தத்தில் அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

பீட்சா டெலிவரி செய்து வரும் 25 வயது நபர், தனது உயிரை பணயம் வைத்து இந்தியானாவில் எரியும் வீட்டில் இருந்து இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று இளைஞர்களைக் காப்பாற்றியுள்ளார்.
லஃபாயெட்டில் கடந்த 11-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பீட்ஸா டெலிவரி செய்பவரான நிக்கோலஸ் போஸ்டிக் என்ற இளைஞர் அங்குள்ள வீடு ஒன்று பற்றி எரிவதைக் கண்டுள்ளார். உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அந்த வீட்டிற்குள் புகுந்த இளைஞர், 18 வயது இளைஞர் உட்பட 5 பேரை மீட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளார்.
ஒரு போலீஸ் அதிகாரியின் உடையில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை லஃபாயெட் காவல்துறையினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் போஸ்டிக் 1, 6, 13 மற்றும் 18 வயதுடைய நான்கு உடன்பிறப்புகளையும் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனையும் காப்பாற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
25 வயதான அவர் பின்பக்க கதவு வழியாக நுழைத்து, முதல் மாடியில் இருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் 6 வயது குழந்தை ஒன்று வீட்டிற்குள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதைக் கேட்ட போஸ்டிக் சற்றும் தாமதிக்காமல் தீப்பிழப்பிற்குள் புகுந்து, அடர்ந்த புகையிலும் அந்த குழந்தையை கண்டுபிடித்து வெளியே எடுத்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், போஸ்டிக்கை அனைவரும் சூப்பர் மேனுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நிக்கோலஸ் போஸ்டிக்கின் வீரச் செயல்கள் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது அவரது தன்னலமற்ற குணம் ஊக்கமளிக்கிறது. மேலும், இதுபோன்ற ஆபத்தான விஷயங்களை எதிர்கொள்ளும் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டால் அவர் பலரைக் கவர்ந்துள்ளார். லஃபாயெட் காவல் துறை, லாஃபாயெட் தீயணைப்புத் துறை மற்றும் மாண்புமிகு மேயர் டோனி ரோஸ்வர்ஸ்கி சார்பில் நிக்கோலஸின் செயலுக்கு நன்றியையும், அங்கீகாரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” எனக்குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது போஸ்டிக் "கடுமையான காயம்" அடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். புகையை சுவாசித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வலது கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போஸ்டிக் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தகவல் உதவி: என்டிடிவி | தமிழில் : கனிமொழி